Sunday, June 17, 2007

பூனையின் நிழல்


நான் நினைக்கவில்லை

ஒரு போதும்

ஒரு பூனை இத்தனை கவர்ச்சியானதென்றும்

இவ்வளவு பயங்கரமானதென்றும்.



என் படுக்கையில்

அதன் உறக்கம்

பன்னெடுங்கால அமைதியின்

ஊற்றைப் பிரவாகித்;தபடி இருக்கிறது.



திகிலூட்டும்படி

பூனையின் உறக்கத்தைக்

காவல் காத்தவாறு

ஓரு போர்ப்படையாக

அதன் நகங்கள்

வேட்டையின் ருஷியையும்

வெற்றியின் நம்பிக்கையையும்

உறுதிப்படுத்தியபடி



பூனையின் குரலுக்கும்

அதன் கண்களுக்கும்

அதன் நடைக்கும்

அதன் உறக்கத்துக்கும்

ஏதேனும் தொடர்பிருக்கிறதா



கவர்ச்சியாயும்

மிகப்பயங்கரமாயும்

பூனை சுழன்று கொண்டிருக்கும்

நிழலில்

பூனையின் குரல்

வன்மத்துக்கும் சினேகத்துக்குமாக

ஒலிக்கிறது



அதன்

ஊடுருவும் கண்களில்

இன்னும் தீராதிருக்கிறது

பசி

No comments: