00 நேர்காணல் - தர்சினி
விடுதலைப் புலிகள் அமைப்புப் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பில் இருந்த பல உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர். அவ்வாறு சரணடைந்தவர்களில் பதினோராயிரத்துக்கும் அதிகமானவர்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், சரணடைந்த இன்னும் ஒரு தொகுதியினரைப் பற்றிய தகவல்களே இல்லை.
இவர்களில் சிலர் சித்திரவதையின் பின்னர் கொல்லபட்டனர் என்பதற்கான ஆதரங்களை சனல் 4, லங்கா கார்டியன் போன்ற ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. மிஞ்சியோரைப் பற்றிய தகவல்களே இல்லை. இதில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் எனப் பலர் சேர்த்தி.
ஆனால், எவரைப்பற்றிய தகவல்களுமே இல்லை. பொதுமக்களின் முன்னிலையில் - பட்டப்பகலில் சரணடைந்தவர்கள் இப்போது எங்கே? என்று தெரியாத நிலையில் அவர்களுடைய உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று படைத்தரப்பும் அரசாங்கமும் சொல்கின்றன.
இந்த நிலையில், இவர்களைத் தேடிக் கொண்டேயிருக்கின்றனர் இவர்களுடைய உறவினர்கள். அவர்களில் ஒருவரை வன்னியில் சந்தித்தோம்.
இவருடைய கணவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் செயற்பட்டவர். ஒரு மூத்த போராளி. இவருடைய மனைவியும் ஒரு போராளியே. இரண்டு பிள்ளைகள். ஆனால், இவர்களுடைய இரண்டாவது பிள்ளை சற்றுச் சுகவீனமான நிலையில் இருந்ததால், ஒருவர் பிள்ளையைப் பராமரிப்பதற்காக வீட்டிலிருந்தார். இதற்கான அனுமதியை இயக்கம் வழங்கியிருந்தது.
இறுதிப் போர்வரை இதுதான் நிலைமை. ஆனால், போரின் இறுதிக்கட்டத்தில், எல்லோரையும் போல இவர்களும் படையினரிடம் சரணடைந்திருந்தனர். ஓமந்தை வரை நான்கு பேருமாக இணைந்தே படையினரால் கொண்டு வரப்பட்ட இவர்களில் குறிப்பிடப்பட்ட போராளியை விசாரணைக்கு என்ற அழைத்துச் சென்றபின்னர் எந்தத் தகவலுமே இதுவரையில் இல்லை.
இதுதொடர்பாகவும் தற்போதைய நிலையில் இவர் தன்னுடைய பிள்ளைகளுடன் வாழ்வைத்தொடர்வதைப் பற்றியும் எங்களுடன் உரையாடினார்.
00 உங்களைப் பற்றி..
என்னுடைய பெயர் தமிழ்விழி. 1989 இல் இந்திய இராணுவம் இருக்கும்போது இயக்கத்தில் இணைந்தேன். நான் இணையும்போது பத்தொன்பது வயது. ஏ. எல் (கல்விப் பொதுத்தராதரம் - உயர்தரம்) படித்துக்கொண்டிருந்தேன்.
அண்டைக்கு எங்களின் பள்ளிக்கூடத்தில் இருந்து என்னோட சேர்ந்து நான்குபேர் இயக்கத்தில் இணைந்தார்கள்.
நாங்கள் உள்ளுர்ப்பயிற்சி எடுத்தோம். காட்டிலதான் பயிற்சி. பிறகு காட்டிலேயே முகாம். அங்கேயே இயக்கத்தின் வேலைத்திட்டங்கள். இயக்கத்தின் வேலைத்திட்டம் என்றால், 1990 க்குப் பிறகு மாதிரி ஊருக்குள்ள நாங்கள் மக்களுக்கு நேரில நின்று செய்த வேலைத்திட்டங்களைப் போல இல்லை. காட்டில அப்ப நிலைமை வேறு.
அங்கே பயிற்சி. சண்டைக்கு எப்பவும் தயாரான நிலை. ஏனென்றால், இந்திய இராணுவம் இருந்தாற் போல காட்டுக்குப் படையெடுத்து வரும். அதால எப்பவும் உஷார் நிலையிலேயே எல்லோரும் இருக்க வேணும்.
அடுத்தது, மருத்துவம் படிச்சம். இயக்கத்தின் வரலாறு. பயிற்சி நடைமுறைகள் என்று அந்தச் சூழலுக்குத் தேவையானவைகளையும் அங்கே படிக்கக் கூடியவைகளையும் பழகக் கூடியவைகளையும் கற்றுக் கொண்டோம்.
மிகக்குறைவான அளவிலேயே பெண்போராளிகள் இருந்தார்கள். ஆனால், காட்டுவாழ்க்கையும் அங்கே நாங்கள் இருந்த காலமும் மறக்கவே முடியாதவை.
என்னைப் பொறுத்தவரையில், இயக்க வாழ்க்கையில் அதுவொரு மறக்கவே முடியாத காலகட்டம்.
பொதுவாகவே எங்கட சமூகத்தில் பெண்கள் காடுகளில் வாழ்கிறதில்லை. என்னதான் வன்னி போன்ற காடுகளை அண்டிய பிரதேசங்களில் வாழ்ந்தாலும் பெண்ணுக்குக் காடு புதிதே. ஆண்களைப் போலப் பெண்கள் காடுகளில் திரிவதும் இல்லை. காடுகளை அறிவதும் இல்லை.
நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். அதாவது எங்களின் அம்மா, அப்பா எல்லாம் யாழ்ப்பாணத்தவை.
ஆனால், நான் பிறந்து வளர்ந்தது வன்னியில். வன்னியிலும் நான் படித்ததும் வாழ்ந்ததும் ஒரு சிறிய நகரத்தில். இதனால், காடு என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது. என்றாலும் காடுகளுக்குப் போய் வருகிற ஆக்களைத் தெரியும். அவர்கள் வேட்டைக்குப் போய்வாறதைப் பற்றைத் தெரியும். தேனெடுத்துக் கொண்டு வாறதைப் பற்றித் தெரியும். காட்டுக்குத் தடி வெட்டப் போறதைப் பற்றி, மரங்கள் வெட்டப்போறதைப் பற்றியெல்லாம் தெரியும்.
அதாவது, இதுகளைப் பற்றி வந்து கதைப்பார்கள். சிலவேளை எங்களின் வீட்டிலிருந்தும் அண்ணாவோ, அப்பாவோ காட்டுக்குப் போவார்கள். எங்கட மாமா ஒருத்தர் இருந்தார். அவருக்குக் காடும் வீடும் ஒரே மாதிரித்தான். காட்டிலிருந்தே அவர் உழைத்தார்.
சிலர் வயலில் உழைப்பார்கள். சிலர் தோட்டங்களில் இருந்து உழைப்பார்கள். சிலர் கடலுக்குப் போய் உழைப்பார்கள். சிலபேர் உத்தியோகம் பார்த்து உழைப்பார்கள். ஆனால், எங்கட அந்த மாமா தன்னுடைய சிறிய வயதிலிருந்தே காட்டிலிருந்தே உழைக்கத்தொடங்கி விட்டார்.
அவருக்கு வேட்டை நல்லாப் போகும். அதைப்போல காட்டுத்தடி வெட்டுவார். பிறகு மரம் தறித்து விற்றிருக்கிறார். ஆனால், வன இலாகவின் அனுமதியைப் பெற்றுத்தான் தறிப்பார். இப்பிடியே இருந்ததால் அவருக்குக் காடுகள் எல்லாமே நல்ல பாடம். அதனால், எங்களுக்கும் காடுகளைப் பற்றிய தகவல்கள் எப்பவும் கிடைச்சுக் கொண்டேயிருக்கும்.
நான் பதினைந்து வயதில் ராமாயணத்தை வாசிக்கும்போது மாமா சொல்கிற காடுகளைப் பற்றிய கதைகளை வைத்து என்னுடைய மனதில் அந்தக் காட்சிகளை நினைத்துக் கொள்வேன். சீதைக்குக் காடு புதிய அனுபவமாக இருந்திருக்கும் என்பது, பிறகு நாங்கள் உண்மையிலேயே காட்டுக்குப் போனபோதுதான் தெரிந்தது. காட்டில் இருக்கும்போது ராமாயணத்தில் படித்த காட்டுக்காட்சிகள் அப்படியே மனதில் படமாக விரியும்.
காடுகள் எப்போதும் இனியவையே. காட்டில் என்னதான் இல்லை. அமைதி இருக்கிறது. அதேவேளை இனிய இசையும் அங்கேதான் இருக்கும். இருளும் அங்கே உண்டு. ஒளியும் ஒளியின் வினோதங்களும் அங்கேதான். விலங்குகள்... மான்குட்டிகள், முயல்கள், உடும்புகள், மர அணில், யானைக்கூட்டம், பன்றிக்கூட்டங்கள்... இப்படிக் காட்டில் ஏராளம் விசயங்கள்.
பழங்கள்...
காட்டில் எந்தக் காலத்திலும் பழங்கள் இருக்கும். ஒரு சீசனுக்குக் கரும்பைப் பழங்கள் என்றால், இன்னொரு சீசனுக்கு நாவற்பழங்கள். அடுத்த சீசனுக்கு நறுவிலிப் பழங்கள் என்றால், இன்னொரு சீசனுக்கு முரலிப் பழங்கள். இப்படியே எப்பவும் பழங்களுக்குக் குறைவில்லை. அத்தனையும் இயற்கையான பழங்கள். நாங்கள் கடைகளில் காசைக் கொடுத்து வாங்குகிற பழங்களில் இயற்கைத் தன்மைகள் வரவரக்குறைந்து கொண்டே போகிறது. லாபத்துக்காப் பயிரிடும்போதே இரசாயனக் கலவைகளைக் கலக்கிறார்கள்.
காட்டுப் பழங்களில் ஆரோக்கியத்துக்குக் குறைவேயில்லை. அதனால்தான் அந்தப் பழங்களைச் சாப்பிடுகின்ற பறவைகளும் ஆராக்கியமாகவே இருக்கின்றன.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் வளர்க்கிற விலங்குகளுக்கும் நோய் வருகிறது. ஏனென்றால் தங்களைப் போலவே அவர்கள் தாங்கள் வளர்க்கிற விலங்குகளுக்கும் தீனைத் தெரிவு செய்கிறார்கள்.
காட்டில் இருக்கும்போது நாங்கள் போராளிகளாக இருந்தால், எப்பவும் ஒரு திகிலும் மெல்லிய பயமும் இருக்கும். பிறகு பிறகு காடும் பழகி, சண்டையும் பழகிய பின்னர், அங்கே இருப்பதே சந்தோசமாகத்தான் இருந்தது. எங்களைப் பலதுறைகளிலும் ஆண்போராளிகள் வளர்த்தெடுத்தார்கள்.
தலைவர் எங்களில் கூடிய அக்கறை எடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்திருந்தார். அதுவும் அந்த நெருக்கடியான நிலையிலும்.
இந்திய இராணுவம் வெளியேறினாற்பிறகு, ஊருக்கு வந்தம். முதலில் முல்லைத்தீவில் இரண்டு வாரம் நிற்க வேண்டி வந்தது. அதற்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்குப் போனோம்.
யாழ்ப்பாண இடப்பெயர்வு வரையில் அங்கேயே இருந்தேன். ஆனால், யாழ்ப்பாணத்துச் சூழல் முற்றிலும் வேறானது. அங்கே ஒரு வித்தியாசமான வாழ்க்கையைப் பார்த்தேன். அந்த மக்கள் அமைதியானவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று லேசில் கண்டுபிடித்து விட முடியாது. ஆனால், எப்பவும் அவர்கள் தங்களுடைய தீர்மானங்களில் உறுதியாக நிற்பார்கள்.
ம்...
இதையெல்லாம் நினைத்தால் இப்ப நித்திரையே கெட்டுப் போயிடும்.
அதற்குப் பிறகு, அதாவது யாழ்ப்பாணத்தில் நீங்கள் என்ன துறையில் - அல்லது என்ன பணியில் இருந்தீர்கள்?
யாழ்ப்பாணத்தில் அரசியல் வேலைகளை ஆரம்பத்தில் செய்தேன். பின்னர் மருத்துவத்துறைக்கு மாற்றப்பட்டேன். அது ஒரு கொஞ்சக் காலம்தான். அதற்குப் பிறகு புலனாய்வுத்துறைக்குப் போய் அங்கேயே நீண்டகாலம் இருந்தேன். அதிலும் நிர்வாகப் பிரிவிலிலேயே அதிக காலம் வேலை செய்தேன். புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டபோதே யாழ்ப்பாண இடப்பெயர்வும் வந்தது. அதோடு நாங்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தோம். பிறகு வன்னியில்தான் இறுதிப்போர் வரையில் இருந்தோம்.
உங்களின் திருமணத்தைப் பற்றி...
எங்களின் திருமணம் இயக்கத்தின் நடைமுறைப்படியே நடந்தது. நாங்கள் விரும்பத்தொடங்கியபோதே இயக்கத்துக்கு அறிக்கை கொடுத்தோம்.
அறிக்கை என்பது எங்களின் காதலை இயக்குத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தெரியப்படுத்துவதாகும். அதற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் (இரண்டு வருசத்துக்குப் பிறகு) இயக்கம் திருமணத்துக்கான ஏற்பாட்டைச் செய்தது. என்னுடைய வீட்டாருக்கு (அப்பா, அம்மாவைக்கு என்னுடைய திருமணத்தில் - நான் விரும்பியவரில் அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை. ஆனால், அக்காவும் அத்தானும் முழுமையான ஆதரவு). அப்படித் திருமண ஏற்பாட்டைச் செய்து கொண்டிருக்கும்போதே – நாள் குறித்ததற்குப் பிறகு, ஜெயசிக்குறுச் சண்டை அமர்க்களமாகீட்டுது. அதனால், கொஞ்ச நாளைக்கு எல்லாத் திருமணங்களையும் இயக்கம் ஒத்தி வைச்சது.
பிறகு, சண்டை சற்று ஓய்த ஒரு சந்தர்ப்பத்தில் எங்களின் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் போராளிகள் என்பதால், எங்களுடைய பிள்ளையைப் பராமரிப்பதற்காக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ‘தளிர்’ என்ற பராமரிப்பு நிலையத்தில் விட்டுவிட்டு எங்களின் பணிகளுக்குச் செல்வோம். பின்னர் மாலையில் நான் பிள்ளையைப் போய் வீட்டுக்குக் கொண்டு வருவேன்.
இரண்டாவது பிள்ளை கொஞ்சம் வருத்தக்காரப் பிள்ளை எண்டபடியால், நான் வீட்டிலேயே நிற்கவேண்டியிருந்தது. இதற்கான காரணங்களைச் சரியாக அறிந்து கொண்டதால், நான் வீட்டில் நிற்கக்கூடியதாக இருந்தது. ஆனாலும் நான் என்னால் முடிந்த பணிகளைச் செய்து கொண்டேயிருந்தேன்.
கணவர் சிலவேளை தினமும் வீட்டுக்கு வருவார். சிலவேளை மாதக்கணக்காக வரமாட்டார். அது அவருடைய வேலைகளைப் பொறுத்தது.
எனக்கு அவரின் நிலைமை விளங்கும். அவரைப் போல நானும் முன்னர் ஒரு காலம் இரவு பகல், காடு மேடு என்று வேறுபாடில்லாமல் ஓயாமல் இயக்கப்பணியைச் செய்தவள் அல்லவா.
அதைவிட, இயக்கத்தைப் பொறுத்தவரை, அதனுடைய தேவைகள் ஏராளம். எப்பவும் எங்களுக்கு மூன்று முக்கியமான விசயங்கள் இருந்தன. ஒன்று எப்பவும் எதிரிக்கு எதிராக அவதானமாக இருக்கவேணும். அதோட எதிரிக்கு எதிராக, எதிரியை விட வேகமாக இயங்க வேணும். அடுத்தது, மக்களைக் காப்பாற்றும் பணிகள். மக்களுக்கான சேவைகள். மூண்டாவது, இயக்கத்தைப் பாதுகாப்பது, அதை மேலும் மேலும் வளர்த்தெடுப்பது.
இந்த அடிப்படையில்தான் நாங்கள் செயற்பட்டு வந்தோம். இந்த மூன்று பணிகளும் ஒரு முக்கோணத்தின் பாகங்களைப் போல ஒன்றுக்கு ஒன்று நிகரானவை.
ஆகையால், கணவரின் வேலைகளைப்பற்றியும் அதனுடைய தேவைகளைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும்.
சரி, அப்படியென்றால், இறுதிப்போரின்போது உங்களுடைய கணவரின் பணிகள் எப்படி இருந்தன? நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
2002 இல் சமாதானப் பேச்சுகள் வந்த பின்னர் சில போராளிக் குடும்பங்கள் வெளிமாவட்டங்களுக்குப் போய்வந்தனர். என்னுடைய கணவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆனால், நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகவில்லை. பிள்ளைகள் மட்டும் போய்வந்தனர். அப்பா, அம்மாவும் என்னுடைய கணவரின் பண்பைப் பார்த்து, அவருடைய செயற்பாடுகளைப் பார்த்துப் பிறகு நல்ல ஒற்றுமையாக வந்தார்கள்.
அதனால், அவையள் எங்களோடயே கொஞ்சக்காலம் வந்திருக்க விரும்பிச்சினம்.
இதுதான் கஸ்ரகாலம் என்று சொல்கிறது. அவையள் வந்து நிற்கும்போதே சண்டை மீண்டும் தொடங்கீட்டுது. இந்தத் தடவை இது இறுதிப் போராகவே இருக்கும் என்று இயக்கம் சொன்னது.
அதனால், சண்டை நிச்சயமாக உக்கிரமாகவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருசம் வரையில், மன்னார்ப்பக்கத்திலேயே சண்டை நடந்தது. அப்ப நிலைமை அவ்வளவு நெருக்கடியாக இருக்கேல்லை.
ஆனாலும் எல்லாத்துறைப் போராளிகளும் போர்தொடர்பான நடவடிக்கைகளில் குறைந்த அளவுக்கேனும் ஈடுபட்டுக்கொண்டுதானிருந்தனர்.
பிறகுதான் நிலைமை இறுகத் தொடங்கியது. 2008 ஐப்பசியில் போர் கிளிநொச்சிக்குக் கிட்டவாக வரத்தொடங்கியபோது எல்லாமே மாறத் தொடங்கியது. அம்மாவும் அப்பாவும் எங்களோட இருந்தது அப்ப ஒரு வகையில ஆறுதல். ஆனால், மற்றவகையில், அவையளும் தேவையில்லாமல் எங்களோட இருந்து கஸ்ரப்பட வேண்டியிருக்கே எண்ட கவலை. நான் அவர்களைப் போகச் சொன்னேன். நாளைக்கு மற்றச் சகோதரங்கள் எங்களைத்தான் குறை சொல்லுவினம். அப்பா, அம்மாவை வன்னியில் மறித்தபடியாற்தான் அவர்களுக்கு ஏதோ நடந்தது, அவர்கள் தேவையில்லாமற் கஸ்ரப்படுகினம் எண்டு சொல்வார்கள்.
இதையெல்லாம் யோசித்துவிட்டு நானும் கணவருமாக ஒரு முடிவுக்கு வந்தம்.
எப்படியும் ஏதாவது சொல்லி அவர்களைத் தயார்ப்படுத்தி, இயக்கத்திடம் அனுமதியை எடுத்து அவர்களை வெளியே அனுப்புவது என்று. வெளியே என்றால், வன்னிக்கு வெளியே. அறுபது வயதுக்கு மேல் வயதுக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, குடும்பத்தில் ஒருவருக்குப் (பாஸ்) அனுமதி கொடுக்கிற முறைமை இயக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகவே, அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு நாங்கள் இரண்டு பேருக்குமே அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தீர்மானித்தோம்.
ஆனால், எங்களுடைய தீர்மானத்தை அம்மாவோ அப்பாவோ ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஒரேயடியாக எங்கள் தீர்மானத்தை மறுத்து விட்டார்கள். என்ன நடந்தாலும் அவர்கள் எங்களை விட்டுப் போவதில்லை என்று சொல்லி விட்டார்கள். பெத்த பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் விட்டுவிட்டுத் தாங்கள் போகப் போவதில்லை என்று அம்மா சொல்லி விட்டா. அப்பாவுக்கு தன்னுடைய மருமகனை விட்டிட்டுப் போகப் பிரியமில்லை.
ஆகவே அவர்களையும் கொண்டு நாங்கள் இடம்பெயரத் தொடங்கினம். இடம்பெயர்வு என்றால், பிறகு சொல்லவா வேணும். யுத்தம் நடக்கிற நாட்டில இடம்பெயர்வு என்பது சாதாரணம்.
ஆனால், இந்தத் தடவை சனங்கள் இடம்பெயரப் பெயர யுத்தம் அவர்களை நோக்கித் துரத்திக் கொண்டு வந்தது. அதுவும் 2009 ஜனவரிக்குப் பிறகு அதைப் பற்றிச் சொல்ல முடியாத அளவுக்கு அது வேற மாதிரியே இருந்தது.
என்னுடைய போராட்ட அனுபவத்தில் அப்படியான ஒரு நிலையை – அப்படியான ஒரு கட்டத்தை நான் சந்திச்சதேயில்லை. முந்திச் சண்டை நடக்கும்போது ஏதோ ஒரு கட்டத்தில் எதிரியைச் சிதைத்து, அவனை நகர விடாமல் இயக்கம் தடுத்துப் போடும். ஆனால், இந்தத் தடவை அப்பிடியில்லை. இராணுவம் மிக வேகமாகவே வந்து கொண்டிருந்தது.
நாங்கள் கிளிநொச்சியில் இருந்து வட்டக்கச்சிக்குப் போயிருந்தம். அங்கே ஒரு மாதம் இருந்திருப்பம். அப்ப கணவரும் அடிக்கடி வீட்டுக்கு வாறதில்லை. அவருடைய பிரிவைச் சேர்ந்தவர்கள் வந்து நிலைமையைப் பார்த்துக் கொண்டு போவார்கள். அங்கே இருக்கும்போது கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றினார்கள்.
அப்ப நாங்கள் அங்கேயிருந்து வள்ளிபுனத்துக்குப் போனோம்.
ஆனால், அப்ப புதுக்குடியிருப்புப் பக்கத்திலேயும் பிரச்சினை. அங்கே போறதும் பாதுகாப்பில்லை என்ற உணர்வு எனக்கு உள்ளுக்குள்ளே இருந்தது. ஆனால். அங்கே எங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தபடியால், அவர்களோட போயிருந்தம். இனி வீட்டைத் தனியாக அமைக்க முடியாது. அதனால் பயனில்லை என்று என்னுடைய மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. ஆனால், இயக்கத்தின் நடவடிக்கைளில் ஒரு மாற்றம் அல்லது திருப்பம் ஏற்படும் என்றே எண்ணினேன்.
இடையில் வீட்டுக்கு வந்திருந்த கணவர் போரின் போக்கைப் பற்றியும் களநிலைமைகளைப் பற்றியும் சொன்னார்.
அவருடன் நின்ற போராளிகளிற் பலரும் வீரச்சாவடைந்திருந்தனர். பலர் காயப்பட்டிருந்தனர். எங்களுக்குத் தெரிந்த ஏராளம் போராளிகள் அப்படி வீரச்சாவடைந்திருந்தனர்.
ஆனாலும் கணவரோ நானோ மனந்தளரவில்லை. அப்படித் தளர்ந்தால் எங்களால் எங்களையே நிலைப்படுத்திக் கொள்ள முடியாது. நிலைமை வரவர மோசமாகிக் கொண்டிருந்தது. எப்படியாவது அம்மாவையும் அப்பாவையும் வன்னிக்கு வெளியே அனுப்ப முயற்சியும் என்று கணவர் சொல்லி விட்டுப் போய் விட்டார். நானும் அவர்களுக்கு அதைச் சொன்னேன். நிலைமையைச் சொல்லி நீங்கள் போகும்போது முடிந்தால் எங்களின் பிள்ளைகளையும் கொண்டு போகலாம் என்று கூறினேன்.
இறுதியில் ஒரு வழியாக அம்மா மட்டும் வெளியே போவதற்குச் சம்மதித்தா.
அவவோட ஒரு பிள்ளையை அனுப்பினோம். அப்பா போக மறுத்து விட்டார். அவருக்கு எங்கட கவலையையும் விட மருமகனைப் பற்றிய யோசினை.
நாங்கள் வள்ளிபுனத்தில் இருக்கும்போது அங்கே கடுமையான ஷெல்லடி தொடங்கியது. அதனால், அங்கேயிருந்து சுதந்திரபுரத்துக்குப் போனோம். ஆனால், வள்ளிபுனத்தையும் விடச் சுதந்திரபுரத்திற்கே பிறகு போட்டுத் தள்ளினார்கள். அகோர அடி. ஆங்கே நூற்றுக்கணக்கான சனங்கள் செத்ததுகள். அதோடு அங்கேயிருந்து வெளிக்கிட்டு, இரணைப்பாலைக்குப் போனம்.
இரணைப்பாலையில் இருக்கும்போது இவர் - கணவர் - வந்து பார்த்தார். நிலைமை வரவர மோசமாகிக் கொண்டே போனது. சனங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், அப்பவும் இயக்கம் வேகமாகத்தான் செயற்பட்டுக் கொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பக்கத்தால் ஒரு தாக்குதல், தேவிபுரம் பக்கத்தால் ஒரு தாக்குதல் என்று இந்தக் காலப்பகுதியில் நடந்தது. ஆனால், இந்தத் தாக்குதல்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் நீங்கள் அடுத்ததாக என்ன செய்தீர்கள்? எப்படியான மனநிலைக்கு வந்தீர்கள்? என்ன முடிவெடுத்தீர்கள்?
அந்தக் கட்டத்தில் நான் சனங்கள் என்ன செய்கிறார்களோ, அதன்படியே செய்தேன். அதுதான் சரியாகவும் இருந்தது. அதாவது சனங்கள் எங்கே இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்களோ, நாங்களும் அங்கேயே போகவேண்டியிருந்தது. அவர்கள் மாத்தளனுக்கும் பொக்கணைக்குமாகப் போனார்கள். நாங்களும் பொக்கணைக்குப் போனோம்.
ஆனால், சனங்கள் மெல்ல மெல்ல படையினரிடம் போகத் தொடங்கினார்கள். அப்படி எங்களால் போக முடியவில்லை. இதுதான் போராளி குடும்பங்களாக இருந்த எங்களுடைய பிரச்சினையாக இருந்தது. மற்றவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது போர்ச் சூழலை விட்டுப் போனார்கள். நாங்கள் தொடர்ந்தும் போர்ச்சூழலிலேயே இருந்தோம்.
கணவரையும் காணவில்லை.
தொடர்பெடுத்து அவரைக் குழப்பவும் நான் விரும்பவில்லை. அதேவேளை அவரைத் தொடர்பு கொள்ளாமல் எங்களால் இருக்கவும் முடியவில்லை. அவரும் எங்களிடம் வராததற்குக் காரணம், தான் வந்தால், தன்னைப் போல மற்ற ஆக்களும் வெளிக்கிட்டு... நிலைமை பழுதாகிப் போயிடும் என்று யோசித்திருக்கிறார். இப்பிடியே நாங்கள் தவிச்சுக் கொண்டிருந்தம்.
கடையில் ஏப்ரல் மாதம் பதினைந்தாம் திகதி இவர் (கணவர்) வந்து நிலைமையைச் சொன்னார். ஆனந்தபுரம் சண்டையும் தோல்வியில் முடிந்த பிறகு இருந்த நம்பிக்கை எல்லாம் ஏறக்குறைய இறங்கீட்டுது.
அந்தத் தோல்வி தந்த துக்கத்தை என்னால் இப்பவும் தாங்கவே முடியவில்லை. நாங்கள் எத்தனையோ தோல்விகளைச் சந்திச்சிருக்கிறம். ஆனால், அதெல்லாம் நிரந்தரத் தோல்வியாகவோ நிரந்தரத் தோல்விக்கு வாய்ப்புக் கொடுத்ததாகவோ இருந்ததில்லை.
ஆனந்தபுரம் தோல்வி எங்களை நிலைகுலைய வைச்சது. அதுக்குப் பிறகு நான் நித்திரையே கொள்ளவில்லை. வரப்போகிற நிலைமை என்னை நல்லாப் பாதித்தது.
ஆனால், நான் கணவரிடம் இதைப் பற்றிக் கதைக்கவேயில்லை. அவருக்கும் நிலைமையைப் பற்றி நன்றாக விளங்கிவிட்டது. அவரும் எதைப்பற்றியும் கதைக்கவேயில்லை. ஆனால், அவர் அடிக்கடி நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்துபோவார். அவர்களும் பக்கத்தில்தான் நின்றார்கள். அப்ப நாங்கள் இரட்டை வாய்க்காலில் இருந்தோம்.
அதுக்குப் பிறகு?
அதுக்குப் பிறகுதான் நாங்கள் அப்பாவை இழந்தம். இரட்டை வாய்க்காலில் இருக்கும்போது ஒரு இரவு அப்பா தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்தார். அப்ப கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்தது. எல்லாப் பக்கத்தாலும் ரவுண்ஸ் வந்து கொண்டிருந்தது. அதில ஒரு ரவுண்ஸ் அப்பாவைக் கொண்டு போட்டுது.
காயம் பட்ட இடத்திலேயே அப்பா விழுந்திட்டார். அது இரவு. அப்பா விழுந்தவுடனே பக்கத்தில இருந்த ஆட்கள் அவரைத் தூக்கியிருக்கினம். ஆனால், அவர் யார், யாரோடு இருக்கிறார் என்று ஒருவருக்கும் தெரியாது. எல்லாரும் அகதியாக ஓடிக்கொண்டிருக்கிற சூழலில், அதைவிடச் சண்டை பக்கத்தில் அகோரமாக நடந்து கொண்டிருக்கும்போது, யார்தான் நிதானமாக எல்லாத்தைப் பற்றியும் யோசிப்பினம்.
அப்பிடியிருந்தும் ஒரு ஐந்து நிமிசம் வரையில், அப்பா இருந்திருக்கிறார்.
அதுக்குப் பிறகுதான் அவரின் உயிர் பிரிஞ்சிருக்கு. அப்பாவைக் காணவில்லை என்று நாங்கள் தேடிக்கொண்டு போகும்போதுதான் என்ன நடந்தது எண்டது தெரிஞ்சது. எங்களுக்காக நின்ற அப்பாவை இப்ப நாங்கள் இழந்திட்டம். தன்னாலை முடிஞ்ச அளவுக்கு எங்களுக்குத்தான் துணையாக இருப்பேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.
ஆனால்...
அதுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகீட்டுது. அதோட கணவரும் வந்திட்டார். ஒரு நாள் நின்றார். மே 15. திடீரெனத் தான் வெளிக்கிட்டுப் போகவேணும் என்றார். எனக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. என்ன செய்யிறது என்றே தெரியேல்ல. எங்களைப் போலக் கனபேர் இருந்தது மட்டுந்தான் ஒரே ஆறுதல்.
போனவர் இரவு வந்தார். தான் வரவில்லை என்றும் எங்களைச் சனங்களோட போகும்படியும் சொன்னார்.
அதை நான் மறுத்திட்டன். அதுவரையும் அவருடைய தீர்மானங்களுக்கு எதிராகவோ குறுக்காகவோ நான் நின்றதில்லை. நானும் ஒரு போராளி என்றபடியால், அவருடைய நிலைப்பாடுகளையும் நிலைமைகளையும் நான் விளங்கிக் கொள்வேன்.
ஆனால், இந்தக் கட்டத்தில் நான் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். அதுமட்டுமில்லை. இனி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. எங்களுடைய போராட்டத்தின் தோல்வியை நாங்கள் கண்ணின் முன்னேயே பார்த்துக் கொண்டிருந்தோம்.
பல போராளிகளே படையினரிடம் சனங்களோட சனங்களாகக் குடும்பம் குடும்பமாகச் சரணடைந்து கொண்டிருந்தார்கள்.
பிறகு?
கடைசியாக நாங்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து வட்டுவாகலுக்குள்ளால் முல்லைத்தீவுக்குப் போனோம். அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. முல்லைத்தீவுச் சமரில் 1996 இல் வெற்றியோட உள்ளுக்குள்ளே போனபோராளிகளும் அப்ப தலையைக் கவிழ்ந்து கொண்டுதான் வந்தார்கள். என்னகொடுமை?
வட்டுவாகலில் ஒருநாள் முழுவதும் வைச்சிருந்தார்கள். பிறகு அங்க இருந்து ஓமந்தைக்குக் கொண்டு போனார்கள். ஓமந்தையில் வைத்தே கணவர் படையினரிடம் சரணடைந்தார். அவரோடு இன்னும் பலர் அன்று, அப்படிச் சரணடைந்தார்கள். நாங்கள் அன்று பட்டபாடிருக்கே, அதை என்றைக்கும் மறக்கவே முடியாது.
விடுதலைக்காகப் போராடிய நாங்கள், தோற்றுப்போய், எதிரிகளிடம் சரணடைவதை நான் என்வாழ்வில் அன்றுதான் பார்த்தேன்.
அதற்குப் பிறகு?
அதுக்குப்பிறகு, எங்களை முகாமுக்குக் கொண்டு போனார்கள். அது கதிர்காமர் முகாம். முகாம் வாழ்க்கை எல்லாம் நீங்கள் அறிந்ததுதானே.
ஆனால், நான் அதுக்குப் பிறகு, இரண்டு வருசமாகக் கணவரைத் தேடாத இடமேயில்லை. ஐ.ஸி.ஆர்.ஸி, பாதுகாப்பு அமைச்சு, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, மனித உரிமைகள் ஆணைக்குழு, நல்லிணக்க ஆணைக்குழு என்று எல்லா இடங்களுக்கும் கடிதங்களும் கொடுத்திருக்கிறேன். என்னைப்போல பலபேர் இப்படி ஒரு முடிவும் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள், தளபதிகள் போன்றோர் ஒரு மதகுருவோடு – பிரான்ஸிஸ் யோசப் பாதரோடு – சரணடைந்தனர் என்றும் அவர்களில் ஒருவரைப் பற்றிய தகவல்களும் இல்லை என்று சொல்லப்படுகிறதே. அதைப்போலத்தான் உங்களுடைய கணவரின் நிலையும் இருக்கிறது போலிருக்கு?
அப்படித்தான் நானும் நினைக்கிறன். முக்கியமான போராளிகளைப் பற்றிய ஒரு தகவல்களும் இன்னும் வெளிவரவேயில்லை. அவர்கள் எல்லாரும் இறுதிப் போருக்குப் பின்னர் வெளிப்படையாகவே தங்களின் குடும்பங்களோடு வந்து பiடையினரிடம் சரணடைந்திருந்தனர்.
ஆனால், இப்போது இதைப் படைத்தரப்பு அடியோடு மறுக்கிறது. அப்படியென்றால், அவர்களுக்கு என்ன நடந்தது? இதைப் பற்றி அரசாங்கம் நிச்சமாகப் பொறுப்புச் சொல்ல வேணும். அரசாங்கத்திடம் சரணடைந்தவர்களுக்கு அரசாங்கம்தானே பொறுப்பு.
ஆனால், இதைப்பற்றி நாங்கள் யாரிடம் முறையிடுவது?
ஏன் வெளியுலகத்துக்கு இதை நீங்கள் கொண்டு செல்ல முடியாதா?
என்னைப் பொறுத்தவரை எல்லாமே நாடகந்தான். எங்களுடைய போராட்டத்தை இந்த வெளியுலகமே அழித்தது. வெளியுலகத்தின் ஆதரவில்லாமல் இலங்கை அரசாங்கத்தினால் வெற்றியடைந்திருக்கவே முடியாது.
போரில் இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளைச் செய்த இந்த வெளியுலகம், தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வைக் கொடுக்க வேணும் என்று சொல்லவே இல்லை. அதுமட்டுமல்ல, போரின் இறுதியில் நிச்சயமாக ஒரு சரணடைவு இருக்கும். அதில் ஏராளம் போராளிகள் சரணடைவார்கள். அதைப் பாதுகாக்க வேண்டும். ஆகவே அதற்கான பொறுப்போ பாதுகாப்போ எப்படி அமையவேண்டும் என்பதைப் பற்றிக்கூட இந்த வெளியுலகம் சிந்தித்ததாக இல்லை. இதையெல்லாம் அது சிந்திக்காமல் விடவில்லை.
வெளியுலகத்தைப் பொறுத்தவரையில் புலிகளின் சிந்தனையோ, அதனுடைய செயற்பாடுகளோ இனிமேல் இருக்கக் கூடாது என்பதே முக்கியமான தீர்மானமாக இருந்திருக்க வேணும். அதனால்தான் அது முக்கிய தலைவர்களின் சரணடைவைக் காணாமலே இருந்தது. புலிகளின் முக்கிய தலைவர்களை இல்லாமற் செய்து விட்டால், பிறகு அந்தப் போராட்டமே, இயக்கத்தின் சிந்தனையே இல்லாமற்போய்விடும் என்று சிந்தித்திருப்பார்கள். இந்த நிலைமையில் நானும்போய் வெளியுலகத்தை எப்படி நம்பிக்கை வைத்துக் கேட்பது?
அப்படியென்றால், இதுக்கு என்னதான் தீர்வு?
என்னைப் பொறுத்தவரையில் எப்போதும் ஒரே மாதிரியாக நிலைமைகள் இருப்பதில்லை. ஒரு நெருக்கடியான சந்தர்ப்பமோ அல்லது அரசியல் மாற்றமோ வரும்போது இந்த மாதிரியான பிரச்சினைகள் ஒரு தீர்வுக்கு வரும். ஆனால், அது வரும் என்று நாங்கள் இருக்க முடியுமா?
முதலில் எப்படியாவது, கணவரைக் கண்டு பிடித்து விடவேணும். குறைந்த பட்சம் அவருடைய தகவலாவது கிடைத்தாற் போதும்.
இப்போது உங்களுடைய நிலைமை எப்படியிருக்கிறது?
எல்லாமே பிரச்சினையாகத்தான் இருக்கு. நாங்கள் இருந்த காணியை நாங்கள் விலைகொடுத்தே வாங்கினோம். ஆனால், இப்போது அந்தக் காணிக்காக மீண்டும் எங்களுக்குக் காணியை விற்றவர்களே வந்து நிற்கிறார்கள்.
இதைவிடக் கணவரைத் தேட வேணும். பிள்ளையின் உடல் நிலையைப் பார்க்க வேணும். அப்பாவின் உதவியும் இல்ல. வருமானமும் இல்லை. ஏறக்குறைய நான் இப்ப தனித்து விட்டேன். முந்தி நாங்கள் பலமாக இருந்தம். நிறைய ஆக்களாக இருந்தம். அணி அணியாக இருந்தம்.
பத்தொன்பது வயதில் இருந்தே நான் ஒரு பெரிய அணியுடன் இணைந்தே இருந்தேன். அதுதான் எங்களின் மனோபலமாக இருந்தது. முகாமில்கூட ஒரு ஒற்றுமை இருந்தது. ஆனால், முகாமுக்கு வெளியில் வந்ததற்குப் பிறகு, அவரவர் தங்கட தங்கட பாடுகளைப் பார்த்துக் கொண்டு போகினம். வரவர நிலைமை நல்லாகவே மாறிக் கொண்டு போகுது....
00