Sunday, April 15, 2007

''சிங்களத்தரப்பு முழுவதுமாக தமிழருக் கெதிராகவே இயங்குகிறது''


சமாதானக்காலத்தைவிடவும் யுத்த காலத்தில் சிங்களவர்கள் அதிகம் சுறுசுறுப்பாக இருப்பார்கள். யுத்தகாலத்தில் சிங்களவர்களின் ஊடகங்கள் மிகத்தீவிரமாக இயங்கும். அதிலும் சிறிலங்காப்படைகள் வெற்றிபெறுகின்றபோது அதை ஊடகங்கள் கொண்டாடுகிற விதம் சொல்லத் தேவையில்லை. அந்தளவுக்கு உண்மையும் புனைவும் கலந்த ஒருவகையான ஊடகப்பரப்புரை அப்போது நடக்கும்.
அதுபோலவே யுத்த்தின் போது சிறிலங்கா அரசாங்கமும் மிகத்தீவிரமாக இயங்கும். உன்நாட்டிலும் வெளியுலகிலும் யுத்தத்துக்கு ஆதரவான பரப்புரையை அரசாங்கம் மிக நுட்பமாக செய்யும். குறிப்பாக யுத்தத்தை நியாயப் படுத்துவதில் அரசாங்கம் மிகத்தீவிரமாகச் செயற்படும்.
இப்போது இது தான் நடக்கிறது மூதூர், சம்பூர், வாகரை பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் நியாயப்படுத்திவரும் விதம் சாதாரணமானதல்ல.
ஏ-15 பாதையை மூடி, தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி, மக்களை கொலை செய்து பட்டினிபோட்டு வாகரையை ஆக்கிரமிதத்து சிறிலங்கா அரசு. இதன் போது தமிழ் மக்களுக்குச் சார்பான அல்லது நியாயமான முறையில் சர்வதேச சமூகத்தின் கவனம் திசை திரும்பவேயில்லை. பதிலாக அங்கிருந்து மக்கள் வெளியேறி படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவுடன் சர்வதேச சமூகம் அந்த மக்களின் நலன்களைக் கவனிக்கவென வருகின்றது.
இப்படி மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டுத்தூதுவர்கள் அணிதான் கடந்தவாரம் நடைபெற்ற தாக்குதொலொன்றில் சிக்கியுமிருந்தது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசம் மீது வாகரை சம்பூர் பகுதிகளில் பின்பற்றிய வழிமுறையையே தொடர்கிறது.
படுவான்கரை மக்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடி, அவர்களின் நாளாந்த இயக்கத்தையும் இயல்பு வாழ்வையும் நெருக்கடிக்கள்ளாக்கியது அது. ஒரு சில பாதைகள் மட்டும் இடையில் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக இருக்கின்றன.
தொடர்ந்து அங்குள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றன படைகள். கிராமங்கள் அழிகின்றன. மக்கள் இழப்புக்களுடன் இடம்பெயர்கின்றார்கள். மனிதப் பேரவலம் அங்கே தொடர்கிறது. சனங்கள் என்ன செய்வது எங்கே செல்வது என்று புரியாமல் தடுமாறுகிறார்கள்.
இந்த அவல நிலை குறித்தோ சிறிலங்காப்படைகள் நடத்துகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றியோ நியாயமற்ற முறையில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றியோ எந்தத் தகவல்களையும் செய்திகளையும் சிங்களத்தரப்பு ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இப்போதும் அவை இது விடயத்தில் அப்படித்தானிருக்கின்றன. சிங்களத்தரப்பினால் வெளியிடப்படும் சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் விடுதலைப் புலிகள் மீதே தாக்குதல்கள் நடத்தப் படுவதாகவும் இதில் புலிகளே பாதிக்கப்படுவதாகவும் அவை உறுதி உரைக்கின்றன.
படைதரப்பின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி அவை ஒரு சொல்தானும் வெளியிடுவதில்லை அதற்கு அவை தயாராகவும் இல்லை. அத்துடன் மக்களின் பாதிப்புகளையிட்டோ மக்கள் படுகின்ற பேரவல நிலையையிட்டோ அவை எதுவும் தெரியாமலே இருக்கின்றன.
இந்த ஊடகங்களின் மனதில் படையின் வெற்றி குறித்த எதிர்பார்ப்பும் அதற்கான வரைபடங்களுமே பதிவாகியிருக்கின்றன.
இதே வேளையில் மூதூரில் படையினர் மீது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையை விடுதலைப்புலிகள் நடத்திய போது இந்த ஊடகங்கள் மனித அவலங்கள் பெருகிவிட்டன என்றும் கண் டனங்களையும் ஒப்பாரிகளையும் பெரிய அளவில் வெளிப்படுத்தின. மூதூர் மீண்டும் படைத்தரப்பின் பிடிக்குள் வந்த போது சட்டென மறுபடியும் அமைதியாகிவிட்டன. மூதூரில் தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் அங்கள்ள முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல் தலைவர்களுக்கு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்திய பின்னரே தமது நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
அங்கோ படைதரப்புதான் பெரும் படுகொலைத் தாக்குதல்களை நடத்தியது. இதனை அப்போது களத்தில் நின்றிருந்த முஸ்லிம் மக்களே சாட்சி புர்வமாக தெரியப்படுத்தினர். அத்துடன் சர்வதேச தொண்டு நிறுவனமான பிரான்சின் அக்ஸன்பெய்ம் அமைப்பின் பணியாளர்கள் பதினேழு பேர் படையினரால் படுகொலை செய்யப்பட்டுமிருந்தனர்.
இவ்வாறெல்லாம் சிறிலங்கா அரசு அங்கே நடத்திய படுகொலை மற்றும் மனித அழிவுகளையிட்டு எந்த வருத்தத்தையம் தெரிவிக்காமல் இருந்தன சிங்கள அறிவுலகமும் ஊடகமும்.
ஆக, படைத் தரப்போ சிறிலங்கா அரசோ தமிழ் மக்கள் மீது எந்த அழிவுகளையும் மேற்கொண்டாலும் அதுபற்றி சிங்கள மனதுக்கும் மூளைக்கும் எந்தச் சலனமும் ஏற்படுவதில்லை. அதனுடைய அறிவியக்கத்தில் தமிழ் மக்களின் அவலம்பற்றிய எந்தப் பதிவம் ஏற்படாது. அதேபோல சிங்கள மனச்சாட்சியிலும் தமிழ் மக்கள் மீதான அநீதிகளையிட்டு எந்த வருத்தமும் ஏற்படுவதில்லை.
இந்த ஊடகங்கள் மட்டக்களப்பு படுவான்கரை மீதான சிறிலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும் பற்றிய செய்திகளையும் இராணுவ நலன் சார்ந்தே அணுகுகின்றன.
படுவான்கரையில் இருந்து கடந்த மூன்று நாட்களுள் அறுபதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள அகதிகளாகி போக்கிடமின்றி இருக்கிறார்கள். ஏற்கனவே வாகரை சம்பூர் ஈச்சிலம்பற்று பிரதேசங்கிலிருந்து இடம்பெயர்ந்த தொண்ணூறாயிரம் அகதிகள் மட்டக்களப்பு அகதிகள் நகரில் அல்லற்படுகின்றனர் இப்போது படுவான்கரை அகதிகளும் சேர்ந்து ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் அகதிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
மாவட்டச் செயலகத்தினால் அகதிகளின் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சொல்கிறார் அகதிகளுக்கு அங்கே தங்குமிடமில்லை தவிர நகரில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டே படையினர் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களின் கிராமங்களின் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தினர் இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட அதிர்ச்சியில் படைமுகாமுக்கு அண்மித்ததாக இருந்த பாடசாலையின் மாணவிகள் சிலர் மயக்கமடைந்;தமை இங்கே கவனிக்கதக்கது.
மக்கள் மத்தியில் பாரிய படைத்தளங்களை அமைத்துக் கொண்டு அங்கிருந்து பாரிய அளவில் தாக்குதல்களை மேற்கொள்வது அடிப்படையில் பெரும் மனித உரிமை மீறல் இதனை சர்வதேச சமூகம் ஏன் காணமறுக்கிறது என்று அயலிலுள்ள மக்கள் கேட்கின்றனர்.
தவிரவும் மக்கள் மத்தியில் நின்று விடுதலைப் புலிகளைத் தாக்குவதானது தமக்குப் பாதுகாப்புhக இருக்கும் எனவும் படையயினர் கருதுகின்றனர். மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதல்களை தம்மீது நடத்தமாட்டார்கள் என்று சிறிலங்கா படைதரப்புக்கு தெரியும்.
மக்கள் இடம் பெயர்ந்து படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு உயிர்பாதுகாப்புக் கருதிய அச்சத்தின் காரணமாகவே செல்கின்றனர். சிறிலங்காப்படையினர் பரவலலாக எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை மக்களின் வாழிடங்கள் மீது நடத்துவதாலும் போக்குவரத்து உணவுப் பொருட்களுக்குத் தடைகள் எற்படும் என்பதாலும் படையினரின் பகுதிக்குள் வேறு வழியில்லாத நிர்ப்பந்தம் காரணமாகக் செல்கின்றனர்.
மக்களை மிக நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களை இடம்பெயரச் செய்துவிட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை படையினர் மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா அரசாங்கம் சொல்கிறது.
இடம்பெயர்ந்துள்ள மக்களைக் காட்டி சர்வதேச சமூகத்திடம் இருந்து பெருவாரியான நிதியினையும் அது பெறுகிறது. படையினர் ஆக்கிரமித்த பகுதிகளுக்கு ஊடகவியளாளர்களை அழைத்துச் சென்று காட்டுகிறது.
அப்படியானால் படையினர் இப்போது தாக்குதல் நடத்துகின்ற பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்களை அனுப்பலாமே! அவர்கள் உண்மை நிலையையும், மக்களின் அவலத்தையும் அப்போது அறியமுடியும். சிங்கள ஊடகவியலாளர்களின் நடுநிலைமை ஊடகதர்மம், மக்கள் நலன், தேசியப்பாதுகாப்பு என்பனவெல்லாம் இந்த ஊடகங்களுக்கு அப்போது புரியும்.
இதனை நாம் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் ஊடகங்களும் அரசும் போர்காலத்தின் போது தமது ஊடகவெளிப்பாட்டையும் இராஜதந்திர அணுகுமுறையையும் வேகப்படுத்தி நுட்பமாகவே கையாள்கின்றன. போர் தீவிரமாக நடக்கும் போது குறிப்பாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மிகப்பிரமாண்டமான அளவில் செய்யும் போது சிறிலங்கா அரசின் சனாதிபதியோ படைத்தளபதிகளோ வெளிவிவகார அமைச்சரோ வெளிநாடுகளில் சற்றுப்பயணங்கள் செய்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரையோ செய்கிறோம் என்று பரப்புரை செய்வார்கள்.
சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சிக்காலத்தில் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் இதனையே செய்தார். பின்னர் மங்களசமரவீர செய்தார். அமைச்சுப் பதவியை இழந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷவுடனான முரண்பாடுகள் அதிகரித்துவரும் சூழலில் மங்கள சமரவீர இந்த விடயங்களையெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். இப்போது புதிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் இதனையே செய்கிறார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் பணி என்பது தமிழ் மக்களுக்கு எதிரான போரை சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நம்பவைக்கும் பணியாகவே தொடர்கின்றது. ஏ-9 விதியை மூடியது மனித உரிமைக்கு முரணானது என்பதை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. பதிலாக கடல்வழி விநியோகத்துக்கு விடுதலைப்பலிகள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று அது சொல்வதன் பின்னணி என்ன?
முற்றுமுழுதான இராணுவ நலனை முதன்மைப்படுத்தியதன் விளைவுகளே இவையெல்லாம். இராணுவ நலன் இராணுவ மேலாதிக்கம் என்பதனூடாக தமிழ் மக்களை ஒடுக்குவதே அதன் ஒரே நோக்கம். இது தான் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரல் அந்த நிகழ்ச்சி நிரலுக்குத் தோதானமாதிரி இதற்கு சிங்களத் தரப்பு ஊடகங்கள் முழுமையாக துடிப்புடன் இயங்குகிறது.
இந்த நிகழ்ச்சி நிரல் முற்றுமுழுதாகவ தமிழ் மக்களுக்கு எதிரானது. எனவே இதற்கு தமிழ் மக்கள் தங்களைத் தயார்படுத்தி செயற்பட வேண்டீயள்ளது. சர்வதேச அளவில் தமிழர்கள் சிறிலங்கா அரசின் உண்மைத் தோற்றத்தை அதாவது தமிழரின் விடுதலை நடவடிக்கையை அம்பலப்படுத்த வேண்டும். புதிய ராஜதந்திர முயல்வுகளுக்கு நுட்பமாக தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து செயலாற்ற வேண்டும். ஒடுக்குமுறையயை செய்வோர் அடக்குமறையாளர் அநீதியை இழைப்போர் பொய் சொல்வதற்கு கூச்சப் படவோ வெட்கப்படவோ மாட்டார்கள். நீதியின் பக்கம் நியாயத்தோடு நிற்கும் நாங்கள் இனியும் பின்னிற்கலாமா?

''தொடரும் இனவாத ஒடுக்குமுறைகளும் அவற்றை எதிர்கொள்ளலும்'


தமிழ் மக்களை அகதிகளாக்கும் தொடர் நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் படை நடவடிக்கை மூலம் மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்னான ஏழு மாதங்களில் மூன்று இலட்சத்து நாற்பதினாயிரம் பேர் உள்ளூர் மட்டத்தில் இவ்வாறு அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அகதிகளாக்கப்படும் மக்கள் தொடர்ச்சியாக அந்தரிப்பு நிலையிலேயே வாழவேண்டியிருப்பது இங்கே உன்னிப்பாகக் கவனிக்கவேண்டியது. இருபது வருடங்களுக்கும் மேலாக அகதிகளாக உள்ளூருக்குள்ளேயே இருக்கின்றவர்கள் இதற்கு உதாரணம். யாழ்ப்பாணம் - பலாலி, கட்டுவன், முல்லைத்தீவு - கொக்கிளாய் கொக்குத்தொடுவாய், நாயாறு, திருகோணமலை - தென்னமரவாடி, கருநாட்டுக்கேணி, தம்பலகாமம், திரியாய் போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் இப்படித்தான் 1980களின் நடுப்பகுதியில் விரட்டப்பட்டனர்.

1990களின் முற்பகுதியில் இது இன்னும் அதிகமாக இளவாலை, காங்கேசன்துறை, வளலாய், மயிலிட்டி, தெல்லிப்பழை, மாவிட்டபுரம் என்றாகியது. இதேமாதிரி ஆனையிறவு, தட்டுவான்கொட்டி, இயக்கச்சி, பளை முகமாலை எழுதுமட்டுவாள் இப்படி விரிகிறது. இதேபோன்று தமிழர் தாயகத்தின் எல்லாப் பகுதிகளிலும் உயர்பாதுகாப்பு வலயங்களும் படைமையங்களும் பிறந்துவிட்டன. படை ஆதிக்கத்துக்காக இங்கிருந்தெல்லாம் மக்கள் இடம்பெயர்ந்துதானாக வேண்டிவருவது ஒரு யதார்த்தம் ஆகிவிட்டது.

ஆகவே, சிறீலங்கா அரசாங்கத்துக்கு தனது இராணுவ நலனில்தான் கூடிய அக்கறை உள்ளதே தவிர, தமிழ் மக்கள் மீது சிறியளவிலான அக்கறை கூட இல்லை என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. காணி உறுதிகள் மட்டும் மக்களிடம் உண்டு. காணியும் வீடுகளும், சொத்துக்களும் அவற்றுக்கான உரித்துக்களும் படையினரின் பிடியில் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் 23,000ற்கு மேற்பட்ட குடும்பங்கள் உயர் பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட அரசாங்க அதிபர் செயலகம் தெரிவிக்கிறது. இத்தொகை இன்னும் கூடுதலானது என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் கூறுகின்றன. இப்போது இவ்வாறு தமிழர்களின் வேர்களைப்பிடுங்கி அவர்களைச் சிதைக்கும் நடவடிக்¬யில் இன்னும் புதிய உத்திகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுவருகின்றது.

முன்னாள் சனாதிபதிகள் ஒவவொருவரும் இவ்வாறு அகதி உருவாக்கத்தை செய்து வந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அடித்துவிரட்டப்பட்டார்கள். பின்னர் தமிழர்கள் தமிழர் தாயகத்தில் வைத்தே விரட்டப்படத் தொடங்கினார்கள். மட்டக்களப்பில் இப்பொழுது இரண்டு இலட்சம் பேர் அகதிகளாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்து அகதிகள்.

போர்நிறுத்தமும், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் உத்தியோக பூர்வமாக விலக்கப்படாதிருக்கும்போது அகதிகளாக்கப்பட்டவர்கள். விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் தெரிவித்திருக்கின்ற மூன்று இலட்சத்து நாற்பதினாயிரம் பேரும் இப்படி இந்தக் காலத்தில் அகதிகளாக்கப்பட்டவர்கள் தான்.
மட்டக்களப்பு நகர் பகுதி அகதிகளால் நிரம்பி வழிகிறது. இந்த அகதிகளை சிறீலங்கா அரசாங்கத்தின் 108 அமைச்சர்களில் ஒருவர் கூட போய்ப்பார்க்கவில்லை. இந்த அகதிகளைப்பற்றி அரசாங்கம் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் சிறீலங்காப் படைகளால் அகதிளாக்கப்பட்டவர்கள்.

தங்குவதற்கே இடமின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு உணவு மற்றும் மருத்துவம், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்வதற்கே பெரும் சிரமமாக இருக்கின்றது என்று ஐ.நாவின் உதவி அமைப்புக்கள் அறிவித்திருக்கின்றன. படை நடவடிக்கை தொடர்ந்தால் மேலும் அகதிகளின் தொகை அதிகரிக்கலாம் என்றும் அது மேலும் மேலும் மனித அவலத்தையே உருவாக்கும் என்றும் இந்த அமைப்புக்கள் எச்சரிக்கின்றன.

மரங்களின் கீழும், பாடசாலைகள, பொதுமண்டபங்கள், கோவில்கள், வீதிகளிலும் மக்கள் நிறைந்து கிடக்கின்றார்கள். எங்கும் மக்கள். எழுவான் கரையின் தெருக்கள் சனங்களாலேயே நிரம்பியுள்ளன. எங்கும் மனித நெருக்கடி. எங்கும் மனித அவலம். பெண்களும் குழந்தைகளும் முதியோர்களும் படுகின்ற சிரமங்களை சாதாரணமாக விளக்கிவிட முடியாது. அந்தளவுக்கு அவர்கள் சிரமப்படுகின்றார்கள்.

மட்டக்களப்பின் வரலாற்றில் அகதிகளின் பிரச்சினை அடிக்கடி ஏற்படுகின்றது. என்றாலும் இந்த முறை ஏற்பட்டது போல பாரதூரமாக ஏற்படவில்லை. முன்னர் பல தடவைகள் வெள்ளத்தாலும் சூறாவழியாலும் மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள்தான். சுனாமி கூட மட்டக்களப்பில் அகதிகளை உருவாக்கியது. ஆனால், அப்போதெல்லாம் இந்த மாதிரி படுவான்கரையில் சனங்களே இல்லாத நிலை இருக்கவில்லை.

எழுவான்கரைக்கும் - படுவான்கரைக்கும் இடையில் போய் வர முடியாத நிலை ஏற்படவில்லை. அப்படி அவர்கள் போய்வருவதற்க தடைகள் இருக்கவில்லை. இப்போதுபோல அவர்கள் சிறைப்பட்ட வாழ்க்கைக்குள் இருக்கவில்லை. உயிர் அச்சத்தில் தூக்கமும் நிம்மதியும் இல்லாமல் முகாம்களில் துன்பப்படவில்லை.

இப்போது படுவான்கரையில் மக்களே இல்லை. அங்கிருந்த மக்களை திட்டமிட்டு ஒரே நாளில் இடம்பெயர வைத்திருக்கிறது சிறீலங்கா அரசு. முன்னர் வாகரையிலும் சனங்களுக்கான தொடர்புகளைத் துண்டித்து அவர்களை தனிமைப்படுத்திவிட்டு தாக்குதலை தொடுத்து, உணவு, மருத்துவ உதவிகளை தடுத்து நெருக்கடிக்குள்ளாக்கி, வாழ முடியாத நிலைமைகளை உருவாக்கி அகதிகளாக்கியிருந்தது அரசாங்கம். அதன் பிறகு அந்தப் பிரதேசத்தை படை ஆக்கிரமித்தது இதேபோலவே படுவான்கரையிலும் நடவடிக்கைகளுக்கு தயாராகின்றது அரசாங்கம். முதற்கட்டமாக மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்பின் வரலாற்று சிறப்புடைய பல பூர்வீக கிராமங்கள் முதல் தடவையாக மக்களை இழந்திருக்கின்றன. கொக்கட்டிச்சோலை சிவன் கோவிலுக்கென்றொரு சிறப்பு வரலாறுண்டு. சிங்களவர்களுக்கு மிகிந்தலையும், அநுராதபுரம் விகாரையையும், தலதாமாளிகையும் எப்படி முக்கியமோ அப்படி தமிழர்களுக்கு அவர்களின் ஆன்மாக்களோடு இணைந்திருக்கின்ற சில முக்கியமான தலங்களில் கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலும் ஒன்று. கொக்கட்டிச்சோலை சிவன்கோவிலுடன் படுவான்கரையில் 163 கோயில்கள் மூடப்பட்டுள்ளன. எல்லாமே நித்திய பூசைக்குரிய கோயில்கள். சிங்களவர்கள் தம்புள்ளையையும், தலதாமாளிகாவையும் விட்டுப்போகத் தயாரா? அதற்கு முடியாதென்றால் அவர்கள் எப்படி தமிழர்கள் மட்டும் வேறுமாதிரி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இது மட்டுமல்ல, படுவான்கரையில் 14290 ஏக்கர் நிலத்தில் செய்யப்படவிருந்த சிறுபோக நெற் செய்கைக்கு வழியில்லாமல் போய்விட்டது. மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் நெற்களஞ்சியங்களில் ஒன்று. முதல் வரிசை விளைச்சலுக்குரிய ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் இருக்கின்றது. படுவான்கரைதான் இதற்கான விளைச்சல் நிலம். இங்கிருந்த மக்களில் 95 வீதமானவர்கள் விவசாயிகள்.

விவசாயிகளின் வாழ்க்கை எப்போதும் அந்த மண்ணுடன் இணைந்தது. அந்த மண்ணில் இருந்து அவர்களை விரட்டியதன் மூலம் முழுதாக சிதைத்துவிட முடியும். இதையே சிறீலங்கா அரசாங்கம் செய்திருக்கின்றது.

படுவான்கரையில் ஏழு கமநலசேவை நிலையங்கள் இருக்கின்றன. ஏழு பிரதேசங்களிலும் 4830 விவசாயிகள் 14290 எக்கர் நிலத்தில் சிறுபோக செய்கையில் ஈடுபட்டு வந்தனர். இவ்வளவு பேரும் இப்போது அகதி முகாம்களில் ஒன்றுக்கும் வழி இல்லதவர்களாகியுள்ளனர். அவர்களின் நிலப்பகுதி தரிசு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வீடுகளில் அபாரமாக நெல்மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தச் சனங்கள் அகதி முகாம்களில் ஒருவேளைச் சாப்பாட்டுக்கும் தொண்டு நிறுவனங்களிடம் கையேந்துகின்றனர்.

படுவான்கரையில் உள்ள கொடுவாமடு, தந்தாமலை, ஆயித்தியமலை, மண்டபத்தடி, கரடியனாறு வெள்ளாவெளி, பழுகாமம் பிரதேசங்களில் உள்ள வயல்களில் எறிகணைகளே விழுகின்றன
இதைத்தான் மக்களை விடுவிப்பதற்கான போர் என்று சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லுகின்றார். முன்னர் சமாதானத்துக்கான யுத்தம் என்ற பெயரில் சந்திரிகா எட்டு இலட்சத்துக்கும் மேலான தமிழர்களை அகதிகளாக்கினார். ஆனால், அவரால் போரை முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. புலிகளை தோற்கடிக்கவும் முடியவில்லை.

ஒரு நாட்டின் சனாதிபதி என்ற வகையில் அவர் பதவி வகித்த பத்தாண்டு காலத்திலும் சிறு நன்மையும் செய்திருக்கவில்லை. அவருடைய தந்தையாரின் காலத்தில் இருந்து இரத்தமும் நெருப்புமாக பெருகிக்கிடக்கும் வன்முறைக்கு தீர்வுகாணவும் இயலவில்லை. இப்போது மகிந்தவும் கூட இதனையே தொடருகின்றார். தமிழர்களுக்கான போரை தொடுத்து முழு இலங்கைத் தீவையும் இரத்தக்களரியாக்கி அழிவுக்கு இட்டுச்செல்கிறார். இங்கே கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உண்டு. தமிழர்களை ஒடுக்குவதில் சிங்களத்தரப்பு மூன்று முனைகளில் செயற்பட்டு வருகின்றது.

- ஒன்று வன்முறை. இதை அரசு படை நடவடிக்கைகளின் ஊடாக பல்வேறு உத்திகளில் செய்கின்றது.

- இரண்டாவது அரசியல் ரீதியானது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தமிழர்களுக்கு எதிரான விதத்தில் செயற்பட்டு வருகின்றது. புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் நேரடியாக தமிழர்கள் மீது போரைத் தொடுப்பதற்கும் தொடர்வதற்குமான ஆதரவை திரட்டுகின்றது.

- மூன்றாவது சட்டரீதியாக தமிழர்களை ஒடுக்குவது. வடக்கு கிழக்கு பிரிப்பு முதல் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதி முடக்கல் வரையில் இதனை நாம் நோக்கலாம்.

சிறீலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை சிங்களச் சமூகம் பல வழிகளிலும் ஒத்துழைக்கின்றது. சிங்கள அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்விப்பீடங்கள், மத அமைப்புக்கள், பொது நிறுவனங்கள் எனச் சகலதும் இதில் அடங்கும். இத்தகைய முழுத் தீவிரமான ஒடுக்குமுறை வலையமைப்பை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பிலும் பன்முகப்பட்ட வேலைத்திட்டங்கள் தேவை. மட்டக்களப்பிலும், வாகரையிலும் படையினர் நடத்திய மனித அவலத்துக்கு இதுவரையிலான தமிழ்ச் சமூகத்தின் எதிர்வினை என்பது கனத்த மௌனமாகவே காட்சியளிக்கின்றது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட அதிர்வளவிற்கு வேறு இடங்களில் எந்தச் சலனத்தையும் காணமுடியவில்லை.

யாழ்ப்பாணத்துக்கான பாதை மூடப்பட்டு ஏழு மாதங்கள் கடந்துவிட்டன. இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல். பேசாலையிலும் இலுப்பைக்கடவையிலும் படையினரின் தாக்குதலிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கு நிறைய வலுவான சாட்சிகள் உண்டு. மட்டக்களப்பின் அகதி நிலை குறித்தும் படை நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா அமைப்புக்கள் உட்பட பல பொது அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்கள் உண்டு.
காணாமற் போவோர், படுகொலை செய்யப்படுவோர் குறித்தும் இத்தகைய எதிர்வினைகள் அரசு மீது இருக்கின்றது. ஆனால், தமிழ் மக்கள் இவற்றை சர்வதேச மயப்படுத்துவதில் காட்டுகிற அக்கறை போதாதிருக்கின்றது. சிலவற்றுக்கு சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். இதற்கு சிறீலங்காவின் நீதி அமைப்பில் நியாயம் கிடைக்காது என்று யாரும் வாதிடலாம். பிரச்சினை, நியாயம் கிடைப்பதோ இது போன்ற நிலைமைகள் தொடர்ந்து உருவாகாதோ என்பதல்ல. அரசாங்கத்தையும் அதன் செயலையும் அம்பலப்படுத்துவதும் அதற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதுமே முக்கியமானது. எதிரி பலமுனைகளில் பல உத்திகளில் ஒடுக்குமுறைகளில் மேற்கொள்ளுகின்றான் என்றால், அதற்கெதிரான எதிர் கொள்ளலும் அதற்கேற்றமாதிரியே அமைய வேண்டும். இதற்கு தமிழர் தரப்பில் உள்ள சகலரும் முயற்சிக்க வேண்டும். படை நிலையிலும் அதற்கு அப்பாலான வலுச்சம நிலையிலும் விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளுடன் உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டு ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய உண்டு. இனியும் நாம் தாமதிக்ககூடாது.