Thursday, March 22, 2007

முகமற்ற கவிஞர்களின் கவிதைகள்


பரதேசிகளின் பாடல்கள்
வெளியீடு - அப்பால் தமிழ் பிரான்ஸ்

01.
பழமொழிகளுக்கு யாரும் உரிமைகோருவதில்லை பழமொழிகளை யார் தந்தார்கள்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவற்றின் பொருளும், அழகும் கவிதைக்கு நிகரானது. இதேபோல, நாடோடிப்பாடல்களுக்கு உரித்தாளர்கள் என்று எந்த தனி அடையாளமும் கிடையாது. ஆனால், அவற்றின் கவித்துவம் அசாதாரணமானது. வாழ்வை அதன் மெய்யான அனுபவத்தளத்தில் வைத்து அவை வெளிப்படுத்துகின்றன. அதனால், அவை மண்ணினதும், மக்களினதும் அடையாளமாக இனங்காணப்படுகின்றன. இன்றைய சமூகவியல் ஆய்வுகளில் பழமொழிகளுக்கும், நாடோடிப்பாடல்களுக்கும் இருக்கும் முக்கியத்துவம் பெரியது.
நாடோடிப்பாடல்களை நவீன மொழியில் சொல்வதனால் முகமற்றவர்களின் குரல் எனலாம். முகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே.
ஜிப்சிகள் இதற்கு நல்ல உதாரணம். ஜிப்சிகளின் வரலாறு நீண்டது. முகமற்று போனவர்களுக்கும் வரலாறு உண்டா? அவர்களுக்கு எப்படி வரலாறும் சுவடும் இருக்க முடியும்? சுவடுகள் உள்ள மனிதர்கள் எப்படி முகமற்றுபோனவர்கள் என்று சொல்ல முடியும். என்ற கேள்விகள் மேலோட்டமாக பார்த்தால் நியாயமானவை. ஆனால் அவர்களுக்கு எந்த சுவடுகளும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அவர்களின் எச்சங்கள் மட்டுமே எமக்கு கிடைக்கின்றன. இந்த எச்சங்களை நாம் சேர்த்துப் பார்க்கும்போதும், தொகுத்து பார்க்கும்போதும் அதற்குள் ஒரு தொடர் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். இந்த தொடர் ஓட்டம் என்பது தீர்மானிக்கப்பட்டதல்ல ஆனால் அனுபவ வாழ்வின் சாரத்தை அதன் மெய்த்தளத்தில் - அனுபவ தளத்தில் பதிவு செய்தவை என்பதால் அவற்றுக்கு வரலாற்று அடையாளம் கிடைத்துவிடுகின்றது. இங்கே துயரம் என்னவெனில் இந்த வரலாற்றில் அவர்களுடைய மனம் இருக்கும். ஆனால், முகம் இருக்காது.
முகமற்ற படைப்பாளிகள் எப்போதும் மனதை தருகிறார்கள் காலத்திற்கும் சமுகத்திற்குமாக. ஆனால், அவர்களுக்கு தங்களுடைய முகம் அவசியமில்லை. முகத்திற்கான போராட்டம் அவர்களுக்கு இல்லை. இங்கே ஒரு முரண் உண்டு. உண்மையில் அவர்களுடைய முகம் சிதைக்கப்பட்டதன் வலிதான் அவர்களின் படைப்புலகம். முகத்தை இழந்ததின் வலி என்பது மறு நிலையில் என்ன? முகத்துக்கான எத்தனமல்லவா.... காலத்தின் எல்லா இடுக்குகளிலும், பரப்புகளிலும் முகமற்ற மனிதர்களின் வலி நிரம்பிக்கிடக்கின்றது. உலகம் இந்த வலியையும் கொண்டுதான் சுழல்கிறது.
மேற்கில் ஜிப்சிகளின் படைப்புலகம் துலக்கமாக நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தவகைப்படைப்புக்கள் ஆபிரிக்கச் சமூகங்களிலும் நிறையவுண்டு. ஜப்பானில் இன்னும் இது அதிகம். முகத்தை தீர்மானமாக இழக்கும் வாழ்முறையைக் கொண்டிருக்கும் கவிதைகளிலும் இந்தப் பண்பைக் காணமுடியும். தமிழில் நாடோடிப்பாடல்கள் நிறையவுண்டு. அவற்றுக்குச் செழுமையான மரபொன்றுமுண்டு.
இப்போது இந்த நாடோடி மரபின் தொடர்ச்சியாக 'பரதேசிகளின் பாடல்கள்' என்றொரு நவீன கவிதைத்தொகுப்பு வந்துள்ளது. அப்பால் தமிழ் என்ற வெளியீட்டகம் இந்தத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்பில் இருபது கவிதைகள் இருக்கின்றன. எழுதியவர்களின் பெயர்கள் என பரதேசிகளுக்கு கிடையாது. இதனால் இவை எத்தனைபேருடைய கவிதைகள் என்று தெரியாது. அப்படிப்பார்க்கும் போது நமது மனம் அந்தரிக்கின்றது.
நாடோடிப்பாடல்கள் அல்லது ஜிப்சிகளின் பாடல்கள் எல்லாம் அவர்கள் இல்லாத காலத்தில் பின்னர் வேறு யாரோவால் தொகுக்கப்பட்டன. அல்லது சமூகம் தொடர்ந்து அவற்றை வாய்மொழியாக பராமரித்துவந்து பின்னர் அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' எழுதிய காலத்திலேயே எழுதியவர்கள் இருக்கும் போதே தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் இவற்றைத் தொகுக்கும் போது எழுதிய படைப்பாளிகள் அல்லது பரதேசிகள் தொகுப்புக்கு அனுசரணையளித்திருக்கிறார்கள். தங்களின் கவிதைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
தொகுப்பின் பதிப்புரையில் பதிப்பாளரே இதனை வேறு விதமாக வெளிப்படுத்துகிறார். 'பரதேசிகளின் பாடல்கள்' என்ற இந்த வகையான தொகுப்பினை ஆண்டுதோறும் கொண்டுவரும் எண்ணம் உண்டு. இம்முயற்சியில் ஆர்வம்கொண்டவர்கள் தங்கள் படைப்புக்களை இவ்வாறான தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம். படைப்புக்களை அனுப்புவோர் 'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்புக்களது என்று தலைப்பிட்டு அனுப்பவேண்டும் என்கிறார்.
நாடோடி மரபினடிப்படையில் இந்தத் தொகுப்பை அணுகும் போது இந்த அறிவிப்பு சுற்றுச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இந்த தொகுப்பில் வெளிப்படையில் ஒரு புதுமைத்தன்மையும் அதனடியில் மெல்லிய போலித்தனமும் தெரிகிறது. செயற்கையாகவே பரதேசிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வது போன்ற தோற்றம் இது. இது ஒரு வகையான பச்சை குத்துதலே. ஆனால், இந்த முயற்சி தமிழில் புதியது. மாறுதலானது. முயற்சியின் பெறுபேறும் அதிகமானது. அதே வேளையில் இந்தக் கவிதைகளின் பொருள் குறித்து நாடோடி மரபுசார்ந்த கேள்விகள் இல்லை. இவை மெய்யாகவே நாடோடிக்கவிதைகள் தான். அதேவேளை அதற்கு எதிர்மாறானவையும்கூட.
கவிதைத் தொகுப்பின் புறம் குறித்த விமர்சனங்களுக்கப்பால் அதன் அகம் தீவிர கவனத்திற்குரியது.
02.
நாடோடிகளின் குறிப்புகள் வரலாற்றில் முக்கியமானவை. நாடோடிகள் இரண்டுவகையில் இனங்கணாப்படுகின்றனர். ஒருவகையினர் 'பயணிகள்'. மற்றவகையினர் "சராசரியான வாழ்க்கைக்கு கீழும் மேலுமாக அலைந்து திரிபவர்கள்".
பயணிகளான நாடோடிகள் தங்களின் பயணநூல்களிலும், குறிப்புக்களிலும் வரலாற்றை ஆழமாகக்பதிவு செய்துள்ளார்கள். அல்லது அவர்களுடைய குறிப்புகளில் இருந்து பின்னர் வரலாறு ஆதாராபூர்வமாக்கப்படுகிறது. சீன, அரேபிய வணிகர்களும், யாத்திரீகர்களும்கூட ஒருவகையான நாடோடிகள் தான். அவர்கள் நாடோடிகளாகவும் அதுசார்ந்த பயணிகளாகவும் இருந்துள்ளனர். இலங்கை, இந்திய வரலாற்றில் இத்தகைய நாடோடிகளின் அல்லது பயணிகளின் குறிப்புகள் வரலாற்றியலில் ஆழமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.
மேற்கே நாடுகாண் பயணங்களுக்கு முன்னும் நாடுகாண் பயணங்களின் போதும் பின்னும் இது நிகழ்ந்திருக்கின்றது. இங்கே ஆக்கிரமிப்புவாதிகளையும், கொலனியாதிக்கவாதிகளையும் குறிக்கவில்லை. சில நாடோடிகள் முகங்களோடுள்ளனர். பலருக்கு முகமில்லை. ஆனால், பொதுவாகவே நாடோடி என்னும் போது மனதில் விழும் சித்திரம் அவன் முகமற்றவன் - வேரற்றவன் என்பதே. அது ஆணோ, பெண்ணோ இதுதான் அடையாளம்.
தமிழில் நாடோடி என்ற சொல் எப்படி வந்ததென்றும் எப்படி பொருள்கொள்ளப்பட்டு வந்ததென்றும் புரியவில்லை. தமிழர்கள் அநேகமாக மிகப்பிந்தியே நாடோடி என்ற விதத்தில் வெவ்வேறு நாடுகளுக்கான பெயர்வைக்கொண்டிருக்கிறார்கள். மற்றும்படி உள்நாட்டில் ஊரோடிகளாகவே இருந்தனர். ஊரோடிகளின் பாடல்கள் நாடோடிகளின் பாடல்களாக எவ்விதம் கொள்ளப்பட்டு வந்தன என்று தெரியவில்லை.
பாடல்களின் பொருளில் நாட்டுக்கு நாடுமாறியதன் அடையாளங்களைக் காணமுடியவில்லை. ஊரோடிய சுவடுகளே பாடல்களில் தெரிகின்றன. ஆனால், அவை பரதேசிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன.
பரதேசி சமூகவாழ்வில் மிகத்தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் பாத்திரம். விளிம்பு நிலைமனிதர்களின் நிழல் பரதேசிகளில், அல்லது பரதேசிகளின் நிழல் விளிம்புநிலை மனிதர்களில் படிகின்றது.
பரதேசி வேரில்லாத மனிதர் அடையாளங்கள் அற்றவர். சமூக, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள் தீர்மானிக்கின்ற வாழ்வின் ஒழுங்கமைவுகள் பரதேசிகளைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அச்சுறுத்துவதுமில்லை. அடிப்படையில் 'கட்டற்ற சுதந்திரத்தின் குரல்களாக' பரதேசிகளின் குரல்களை அடையாளம் காணலாம். விருப்பு வெறுப்புக்கள் தகர்ந்த வெளியிலேயே பரதேசிகளின் தளம் இயங்குகிறது. தீர்மானங்களில்லாத வெளி அவர்களுடடையது.
'பரதேசிகளின் பாடல்கள்' அல்லது 'நாடோடிகளின் பாடல்கள்' சமூக அரசியல் பண்பாட்டுத்தளத்தில் 'கலகக்குரல்களாகவே' எப்போதுமிருக்கின்றன. கட்டற்ற சுதந்திரம் என்பது 'கலகத்துக்கான' வெளியை பரதேசிகளுக்கு அளிக்கிறது தவிர சமூக பண்பாட்டுத்தளங்களின் பிணைப்பு இல்லை எனவே, அவற்றின் நெருக்குவாரங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு இல்லாமற் போகிறது நாடோடி பண்பாட்டின் மீது எதிர்க்குரலை கண்டனக்குரலாக வைக்கிறார்கள்.
தமிழல்கூட 'பாலியலை' இயல்போடும், வெளிப்படையாகவும், கூச்சமில்லாமல், தயக்கமில்லாமல், நாடோடிப்பாடல்கள் சொல்கின்றன. காதல் மற்றும், பால்விவகாரங்களை பேசுவதற்கு தமிழ்ப்பண்பாட்டுச் சூழல் அதிகளவு வெளியை ஒருபோதும் தருவதில்லை. அதனால், அது மொழியில்கூட அதற்கமைவான புலனையும், முறைமையையும் உருவாக்கியுள்ளது.
நவீன படைப்புத்தளத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற மாறுதல்களும், விலகல்களும் இங்கே கவனிக்கப்படுகின்றன. ஆனால், அவை மிகப்பிந்திய வரவுகள்.
03.
'பரதேசிகளின் பாடல்கள்' காயங்களின் வலியாகவே இருக்கின்றன. பரதேசி துயரத்தின் அடையாளமாக மட்டும் இருக்கமுடியாது. பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட ஒரு உயிரி. சலிப்பு, துயரம், மகிழ்ச்சி, ஏக்கம், தவிப்பு, கனவு, நிறைவு, நிறைவின்மை, அலட்சியம், அக்கறை எனச்சகலமும் கொண்ட ஒரு யதார்த்தவாதி. 'நாடோடிப்பாடல்களில் இதனை நாம் தெளிவுறக்காணமுடியும். சித்தர்களின் கோணம்கூட பரதேசித்தன்மையுடையதே. சித்தர்களிடத்தில் அனுபவ முதிர்ச்சியின் திரட்சியுண்டு. 'நாடோடிப் பாடல்களில்' இது இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் , முழுமையை நோக்கியிருக்கிறது. துயரத்தைக்கடப்பதற்கு நாடோடிப்பாடல்கள் அநேகமாக எள்ளலைக் கையாள்கின்றன. அந்த எள்ளல் நமக்கு அதிர்ச்சியளிப்பது. அது ஒருவகையிலான ஆற்றுப்படுத்தும் உளவியலே அது. அது ஒருவகையில் மேன் இலக்கியமாகிறது. அதன் விரிவானதும், ஆழமானதும், யாதார்த்தமானதும் அடிப்படையில். தீரமுடியாத தவிப்பையும் அந்தரிப்பையும் காயத்தையும் வலியையும் கடப்பதற்கு எள்ளலை ஒரு உபாயமாகவும் மார்க்கமாகவும் கொள்கின்றன 'நாடோடிப்பாடல்கள்.' நாடோடிப்பாடல்களின் செல்வாக்கு மண்டலம் அநேகமாக இத்தன்மையினால் நிர்மாணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.
இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரி பரிமாற இநதப்பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகவே படுகின்றன . எல்லாவற்றிலிருந்தும் வலிதெரிகிறது. பரதேதசி காணாமற் போவது இங்கேதான். அதாவது சமநிலை காணமுடியாது தத்தளிக்கினறபோது பரதேசியால் மெய்யான ஒரு பரதேசி நிலையை எட்டமுடியாது. என்பதால்தான் இங்கேயுள்ள பரதேசிக்கு சாதி தீராமுடியாத வலியாகிறது. தொடரும் அவமானமாகவும், குருட்டுத்தனத்தின் சாபமாகவும் நீடிக்கின்றது.
தறி' என்ற கவிதையின் பரிமாற்றம் இந்தவலியைப் பகிர்வதாகவே உள்ளது. ஊரைப்பிரிதலே இந்தக்கவிதைகளின் ஆகப்பெரிய அம்சம். ஊரில் வேர்விட்ட விருட்சங்கள் (இப்படித்தான் பல கவிதைகளின் குரல்கள் தொனிக்கின்றன) பிடுங்கி எறியப்பட்ட வெவ்வேறு திசைகளில் பெயர்க்கப்பட்டுவிட்டன. அந்நியம், அந்தரிப்பு என தீராத்தவிப்பின் நிழலாகவும், நிஜமாகவும் அச்சமூட்டுகிற வகையில் பொங்குகின்றது.
நாடோடியினது அல்லது பரதேசியின் உலகம் ஒருகட்டத்தில் எல்லாச்சலனங்களையும் கடந்தவிடுகிறது. வாழ்வின் அனுபவங்கள் சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பதைப்போல இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களின் வாழ்தளம் முற்றிலும் வேறானது. ஏறக்குறைய ஒரு கட்டத்தில் அது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலைக்கு வந்துவிடும்.
இவ்வாறு திரட்சிபெற்றுவரும் 'பரதேசிகளின் பாடல்கள்' முழுமைகொண்டு விடுகின்றன. இது சமரசமல்ல. தோல்வியும் அல்ல. எல்லை கடத்தல். 'வாழ்வின் அனுபவச்சாரத்தை உறிஞ்சும் பரதேசி' அதனை நமக்கே மீண்டும் பரிசளித்துவிட்டுப் போகிறார். நமது மதிப்பீடுகளையும் எண்ணவுலகையும் தகர்த்துவிட்டு எளிமையாகக்கடந்து போகிறார் அவர். எதனைப்பற்றியும், யாரைப்பற்றியும் பொருட்டில்லாத உலகம் அவருடையது. ஒருவகையில இந்தச் சமுகத்தால்; புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையும்கூட. இந்தப்புறக்கணிப்பு முதலில் காயத்தையும் தீராக்கோபத்தையும் ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் அது மனதில் அவ்வாறு தங்கி விடுவதில்லை. அது பரதேசிகளுக்கு வாய்த்த வாழ்க்கை அமைப்பின்படி உரு சமனிலைக்கு வந்துவிடுகிறது. இதனால், முழுமையான பரதேசி அல்லது நாடோடியிடம் வன்மம் இருப்பதில்லை. இந்த வன்மத்தைக் கடக்கவே பரதேசி எள்ளலை முன்னிலைப்படுத்துகிறார். வன்மம் ஒன்றைப் பெயர்ப்படுத்துவதால் வருவது. ஒருவரை ஒருதரப்பை பொருட்டெனக்கருதுவதால் ஏற்படுவது. இதனால், இந்தப் புதிய பரதேசிகளின் பாடல்களில் வன்மம் கொப்பளிக்கிறது. இந்தவன்மம் அடிப்படையில் அவர்களை 'பரதேசிகளாக்காது' மீண்டும் மீண்டும் மரபுகள் மற்றும் சமுக மதிப்புகளின் எல்லையினுள் நின்று தத்தளிக்கும் மனிதர்களின் இயலாமைக்குள்ளேயே முழக்கமிடுவன. இந்தக்கவிதைகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கவேண்டியுள்ளது. அது இங்கே அவசியமானது. அதற்கு முன்பு தனியாக ஒரு சிறு குறிப்பு இங்கே எழுதியாக வேண்டியுள்ளது.
04.
இடைக்குறிப்பு:- அப்பால் தமிழ் வெளியீட்டகத்தின் முயற்சியில் 'பரதேசிகளின் பாடல்கள்' (கவிதைத் தொகுப்பு) வெளிவந்திருக்கிறது. இதற்குமுன் 'பாரீஸ் கதைகள்'. அது இரண்டு பதிப்புக்களைக் கண்டுள்ளது. ஒன்று இலங்கையிலும், மற்றது தமிழகத்திலுமாக வெளியாகியுள்ளன. அந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் பதிக்கப்பட்டுள்ளன. எல்லாமே 'பாரிஸ்' நகரத்தை மையமாகக் கொண்டவை. மற்றத்தொகுப்பு 'பரதேசிகளின் பாடல்கள்' இதில் இருபது கவிதைகள் உண்டு. சிறிய ஆனால் அழகான புத்தகம். எளிமையும் அழகும் ததும்பும் விதத்தில் வடிவமைக்கமாகக்ப்பட்டுள்ளது. பூமி பிளந்துள்ளது போல ஒரு வலிமையான ஓவியத்தை சேர்த்திருக்கிறார்கள். புத்தகத்தில் உள்ள கவிதைகளையும்விட இந்தக்கோடு - ஓவியம் கூடுதலான வலிமையுடையது. மிகச் சாதாரண கோடாக யாருக்கும் தோன்றமுடியாது. நமது இதயம் இங்கே பிளந்துகிடக்கிறது.
குருதி வழியமுடியாத அளவுக்கு நமது இதயம் காய்ந்துவிட்டதாகவும் பாலையாகிவிட்ட இதயம் பிளந்திருப்பதாகவும் படுகிறது. தி . அ. றெபேட் படவமைப்புச் செய்திருக்கிறார் மிக நேர்த்தி. ஒரு முன்மாதிரி. 48 பக்கங்கள். சிறிய புத்தகம்.
05.
பரதேசிகள் எனப்படுவோரின் இந்தக்கவிதைகள் குறித்து சிந்திக்கும் போது புலம்பெயர் இலக்கியம் குறித்து நமது பதிவுகள் மீள்நிலையடைகின்றன. அந்த மீள்நிலை சில கேள்விகளை உருவாக்குகின்றன. அதிகபட்சம் ஒருசில கேள்விகள்.புலம்பெயர் இலக்கியம் இன்னும் ஊர்நினைவில்தான் வரப்போகிறதா?. கடந்தகாலத்தின் நிழலை உருமாற்றம் செய்யாமலே தொடர்ந்தும் அந்த நிழலைப் பிரதிபண்ணும் எத்தனிப்பிலேயே அது இனியும் கழியப் போகின்றதா?
புலம்பெயர் தளத்தின் - வாழ்களத்தின் அனுபவங்களை அது சாட்சிபூர்வமாக்க இன்னும் தயங்குவதேன்.?யதார்த்தத்தில் சமரசங்களும் அடங்குதல்களும் கொந்தளிப்புகளும் நிகழ்கின்றது. அவற்றை கூச்சமின்றி அது திறக்காதா?மனவெளியில் நிகழ்கின்ற இரசாயனமாற்றங்களை பிரதிபலிக்கும் விதமான பிரதிகளை எதிர்பார்ப்பதன் அடிப்படையாகவே இச்சில நோக்கப்படுகின்றன.
புலம்பெயர் இலக்கியம் இன்று பழகிவிட்டது என்பதற்கும் அப்பால் அது சூத்திரத்தனத்தின் சலிப்பையூட்டவும் தொடங்கிவிட்டது. இது ஒரு பக்கம் நியாயமான வேதனைகளின் பரப்பாக இருக்கலாம். ஆனால், அதற்குமப்பால் நமக்குத் தேவையானது; நிகழ்வாழ்வின் உள்ளமைவுகள் தொடர்பான ஊற்றும் பெருக்குமென்ன? என்பதே.வேரற்ற வாழ்களத்தில் எதிர்நோக்குகின்ற சவால்களும், அனுபவமும் உருவாக்குகின்ற மனிதநிலை என்ன?
இவ்வாறு எழுகின்ற கேள்விகள் புலம்பெயர் இலயக்கியத்தின் புதிய குணத்தை எதிர்பார்க்க விரும்பிய ஆவலின்பாற்பட்டதே.
இங்கே இந்தத்தொகுதியில் பரதேசி என்பது என்ன அர்த்தத்தில் விளக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. முதலில் பரதேசி என்றும் தன்னை பரதேசியாக உணர்ந்தகொள்வதோ பிரகடனப்படுத்துவதோ இல்லை. அடையாளம் இல்லாதவரே பரதேசி. பிறகெப்படி பரதேசிக்கு அடையாளம் வரும். ஏதொன்று பற்றிய பிரக்ஞையும் பரதேசியாக்காது. ஒரு அடையாளம், அடையாளத்திற்கான விழுமியம் வந்து அவர் வாழத் தொடங்கும்போது பரதேசி என்ற அர்த்தம் தொலைந்து போகிறது. ஏதொன்றின்படியும் வாழமுடியாத அவலநிலை. அந்தரிப்பே பரதேசியின் முதற்படிமம். பிறகு அந்த அந்தரிப்பைக்கடந்த சகலதும் ஒன்றேயென்றதும் அதற்குமப்பால் எந்த நிலையிலும் தளம்பாத சமநிலையோடிருக்கும் தன்மையும்தான் பரதேசியின் முழுஅடையளமாகிறது.
எந்த அந்தரிப்பும் ஒருகட்டத்ததில் இல்லாமற்போய்விடுகிறது. அதுவொரு இயல்பாகி அந்தரிப்பின்றி அது முழுமைக்கு சென்றுவிடுகிறது. அந்த முழுமையின் ஞானம் பெரியது. அது வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களில் வைத்து விசாரணைக்குப்படுத்துகிறது.அந்த ஞானம் எல்லாவற்றையும் மிக இலகுவாக கடந்துபோய் விடுகிறது. ஒரு தூசியளவுகூட இல்லை என்போமல்லவா. அந்த அளவுக்கு. தூசி என்பது ; சாதாரணமானதல்ல. தூசி கண்ணில் விழும்போது அதுவே நமக்கு கண்ணுக்குள் மலை விழுந்தது போலாகிவிடுகிறது. மலை ஒரு போதும் கண்ணுக்குள் விழமுடியாது. ஆனால், தூசியோ கண்ணுக்குள் மலை போலாகிவிடுகிறது. ஏதொன்றும், அதன் இடம்பொறுத்தும், காலம்பொறுத்தும் முக்கியமாகிவிடுகின்றன. ஆனால், பரதேசிக்கு எதுவும் முக்கியமானதல்ல.
பரதேசிக்கு நிறங்கள் தெரியாது. நிறங்கள் தெரியவரும்போது அடையாளம் பிறக்கிறது. பரதேசியை நாம்தான் வேறுபடுத்துகின்றோம். அடையாளம் காணுகின்றோம். தனிமைப்படுத்துகின்றோம்.
பரதேசிக்கோ எதுவுமில்லை. அதனால்தான் அந்தவாழ்வை அவரால் அப்படி வாழமுடிகிறது. அப்படிப் பரதேசிகள் வாழ்வதற்கு அவர்கள் முதலில் நினைவை இழக்கிறார்கள். இந்த நினைவிழப்பின் போது அடையாளங்களை இழந்துவிடுதல் நிகழ்ந்துவிடுகிறது. இழத்தலும், தொலைத்தலும்தான் பரதேசியின் இயல்பு, அது ஒரு சமூகத்தில் சமூக நிர்ப்பந்தத்தால் நிகழ்கிறது. இன்னொரு இது விதத்தில் மனமுதிர்ச்சியால் விளைகிறது. பரதேசியிடம் துக்கமில்லை. துக்கத்தை ஒரு பொருட்டென அவர்கள் கருதுவதில்லை. எதுவும் பெரிதாக தோன்றாதவரிடம் எப்படித்துக்கம் பிறக்கும்? அதனால் வன்மமோ வலியோ ஏற்படுதில்லை. இதனால் கட்டுகள், எதிர்பார்ப்புகள் எதுவுமிருப்பதில்லை. சமூக விழுமியங்கள் குறித்த பதிவுகள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடந்துவிட்டதனால் அவை குறித்த மனப்பதிவுகளோ துயர்களோ இல்லை. குடும்பம் குறித்த கவலைகளும் இல்லாமலும் போய்விடுகிறது. அப்படிக்குடும்பம் இருந்தாலும் அந்தக்குடும்பமும் பரதேசி நிலையிலேயே ஒரு வாழ்கிறது. வாழ்ந்து கழிகிறது.
ஆனால், அதில் பல இடறுப்பாடுகள் இருக்கின்றன. அதனால், அதற்குள் வலியும் சீழும் நிரம்பி இருப்பதுண்டு என்ற போதும் அவை பரதேசிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.
நான் பரதேசிகளின் பாடல்களில் ஜிப்சிகளின் கலவையான பரதேசிகளையே எதிர்பார்த்தேன். மேற்கில் பரதேசிகளான புலம்பெயரிகள் அங்குள்ள ஜிப்சிகளின் கலவையாகுதல் தவிர்க்கமுடியாது போகுதல் சாத்தியம். அதனையே எதிர்பார்த்தேன். அது தவிர்க்கமுடியாத ஒரு நிலை.
இருத்தல் சவாலான போது அதனை பரதேசிகள் இன்னொரு வாழ்நிலையினூடாக கடந்துபோகிறார்கள். தீர்மானமின்றியே பரதேசிகளின் வாழ்க்கை நிகழ்கிறது. தீர்மானங்களில்லாத முறைமை அல்லது பயணம் எத்தனை இனியதும், சுதந்திரமானதும். அது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காதது.
பரதேசிகளின் இதயம் பேரியற்கையுடன் இணைந்தது. இயற்கைக்கு என்றும் முதுமை இல்லை. வானம் என்றும் புதியதாகவே இருக்கிறது. கூடவே அழகாகவும். கடலும் அப்படித்தான். மலைகளும், நதிகளும் - சூரியனும், நிலவுமகூட. இவை ஒன்றுடன் ஒன்று இணையும் போதும் அழகு. விலகும்போதும் அழகு. எந்த நிலையிலும் அழகு என்பதே இயற்கையின் புதுமை. பரதேசிகளின் இதயமும் அப்படித்தான். அது எந்தநிலையிலும் தளம்பாதது. நிறைந்தது. முழுமையுடையது. அத்துடன் அது ஆதிமனிதனின் மனக் கூறுகளையுடையது. திரிதல் என்பதே அதன் அடிப்படை. கட்டற்றுத்திரிதல் அது. ஆதிமனிதனில் திரிதல் அல்லது அலைதல் என்பது ஒரு பொது நிலையும் யதார்ததமும். அத்துடன் இயல்பானதும்கூட. அலைதல்தான் ஆதிவாழ்க்கை. அந்த அலைதல்தான் பரதேசியின் வாழ்க்கையும். ஆக பரதேசியின் மனம் ஆதிமனம். அந்த ஆதிமனதின் சுவடுகள் இந்தப்பரதேசிகளின் பாடல்களில் உண்டா? அது நவீன வாழ்நிலைகளோடும் வாழ்களத்தோடும்.

Wednesday, March 21, 2007

வரதர்-தனியான அடையாளங்கள் கொண்டவர்

கமல்ஹாசனின் 'ஹேராம்' படததைப் பார்த்தபோது வரதர்தான் நினைவுக்கு வந்தார். வரதர் காலமாகியபோது ஹேராம் நினைவுக்கு வந்ததானது வேடிக்கையா? அல்லது உண்மையா? யதார்த்தமா? அல்லது எல்லாமே கலந்த துன்பியலா?


'ஹேராம்' ஒரு துயர்மிகு சினிமா. அதை ஏனையவர்கள் எப்படி அதை விளங்கினார்களோ தெரியவில்லை. அதைப்பார்த்தபோது எனக்கு அப்படித்தான் பதிந்ததாக ஞாபகம். யுத்தம் முழுச் சந்நதமாடிய "ஜெயசுக்குறு" காலகட்டத்தில் ஒரு முன்னிரவில் எதிர்பாராத விதமாக 'ஹேராமை'ப் பார்க்கக் கிடைத்தது.ஏழு பேர் பார்க்க இருந்தோம். படத்தின் பாதியிலிருந்து நான் மட்டுமே மிஞ்சியிருந்தேன். துயரத்தைப் பகிர்வதற்கு அதிகம்பேர் இருப்பதில்லை என்பார்கள். அது உண்மைதான். உண்மையில் ஹேராம் கமல்ஹாசனுக்கு தோல்வியுமல்ல, சேதாரமுமல்ல. ஆனால் அதற்காக அதற்கு விமர்சனங்கள் இல்லையென்றில்லை. அதுவொரு முதன்மைச்சினிமா. அதற்கு எப்போதும் ஒரு இடமுண்டு. துயர்மிகு காலமும், வாழ்வும் நிகழும்வரையில் அதற்கிடமுண்டு. ஹேராமில் கமல்ஹாசன் சொல்கிற அதே சேதிதான் வரதர் சொல்வதும். ஹேராமில் இந்திய அவலத்தை கமல்ஹாசன் சொல்கிறார். வரதரோ தன்னுடைய கதைகளில் ஈழத்தமிழரின் அவலங்களைச் சொல்கிறார்.ஹேராமில் இந்திய சுதந்திரத்துக்கு முன்பே இந்து முஸ்லீம் வன்முறை தொடங்கிவிட்டது என்பதைக்காட்டப்படுகிறது. சுதந்திரத்தின் பின்னர் இப்போதும் இந்து முஸ்லீம் கலவரங்களும், வன்முறையும் தொடர்கிறது. இடையில் காந்தி மீதான கடுமையான விமர்சனங்களும் காந்தியின் அணுகுமுறை மீதான ஆட்சேபணைகளும் வைக்கப்படுகின்றன. காந்தி சுட்டுக்கொல்லப்படுகிறார். வன்முறை அடங்கவில்லை. இன்றும் தொடர்கிறது. எங்கே தவறு ….?

வன்முறையால் சுதந்திரத்துக்கு முன்பு ஒருமனிதர் தன் துணையை அநியாயமாக இழக்கிறார். அதே வன்முறையால் சுதந்திரம் கிடைத்து ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் எட்டுகிறபோதும் அதே மனிதர் பாதிப்புக்குள்ளாகிறார். இவ்வளவுக்கும் அந்த வன்முறைக்கும் அந்த மனிதருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை. வன்முறைகள் எப்போதும் பொது மனிதர்களையே தின்கின்றன. வன்முறைக்குத் தூண்டப்பட்டு, வன்முறையத் தூக்கி, வன்முறையிலேயே பொது மனிதர்கள் அழிந்து போகிறார்கள். ஆனால், வன்முறையின் சூத்திரதாரிகள், அல்லது வன்முறை மையங்கள் அப்படியே பாதிப்பில்லாமல் இருக்கின்றனர். அத்துடன் அவை மேலும் பலம் பெறுகின்றன.இக்குறிப்பு 'ஹேராம்' மீதான விமர்சனமல்ல. வரதர் பற்றி சிந்திக்கும்போது 'ஹேராமி'ன் நினைவு தவிர்க்கமுடியாமல் வந்து குவிவதால் எழுதவேண்டியிருக்கிறது.

வரதர் 1958இலோ 60ஆம் ஆண்டிலோ 'கற்பு' என்ற சிறுகதையை எழுதியிருந்தார். 1958 இல் கொழும்பு, மற்றும் சிங்களப்பகுதிகளில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது நடாத்திய வன்முறையை பதிவுசெய்த கதை அது. அந்தக்கதை இதுவரையில் ஐம்பது தடவைக்குமேல் பிரசுரமாகியிருக்கும். பல இதழ்கள் மீளமீள அதை பிரசுரிக்கின்றன. இன்னும், அந்தக்கதை மீள் வெளியீட்டுக்குள்ளாகும். அதற்கான சூழல் மாறாதிருக்கும்வரை அது மீளமீள வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும். இதுவொரு துன்பியல் நாடகம். துயரமும், அருவருப்பும் தருகிற கதை அது. ஆனால், அதுதான் யதார்த்தமாக இருக்கும்போது அந்தக்கதைதானே வேண்டியிருக்கிறது. அதாவது இனக்குரோதமும் வன்முறைச் சூழலும் தீராதவரையில் வாழ்க்கை தவிர்க்க முடியாதவாறு அருவருப்பூட்டுவதாகவேயிருக்கும்.

'கற்பு' கதையை வரதர் எழுதுவதற்கு 1958 இல் தமிழர்கள் சிங்களவர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் காரணமாகியது. களுத்துறையில் வன்முறையின்போது சிங்கள வன்முறைக் கும்பலால் சிதைக்கப்பட்ட தமிழ்ப்பெண்களை ஒரு குறியீடாக்கினார் வரதர்.

தன் துணைவியை – தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளும் கணவனின் கதையே 'கற்பு'. அவள் மீது எந்தக்குற்றமும் இல்லையென்று கணவருக்குத்தெரியும். அவர் வன்முறையை விரும்பவில்லை. ஆனால், அதுவொரு பெரும் பிசாசாக வெறிகொண்டுவரும்போது அதனை எதிர்க்க அவரால் முடியவில்லை. ஆனால் அவர் தனக்குள் வளர்த்து கொண்ட பக்குவத்தினால் அதனை தன்னளவில் கடந்து செல்கிறார்.

வரதர் அந்தக் கதையை எழுதத்தூண்டிய சூழலும் நிலவரங்களும் இன்றும் மாறவில்லை. அது மாறக்கூடிய சாத்தியங்களும் தென்படவில்லை. காலம் நகர்ந்துவிட்டது. உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. தலைமுறைகள் மாறிவிட்டன. சிறுகதையின் வடிவத்தில்கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. கதை சொல்லும் முறைகள் எல்லாம் மாறியுள்ளன. ஆனால், காயங்கள் ஆறவில்லை. வலி தீரவில்லை. மூடத்தனமும், வன்முறையும், இனவெறியும் நீங்கவில்லை. வாழ்வில் தொடரப்படும் ஈனக்கதைகள் மாறவில்லை. வரதரின் 'கற்பு' சொல்லும் 'ரணகளம்' திரும்பத் திரும்பத் நிகழ்ந்தபடியே இருக்கிறது. குருதியும், ஓலமும் குரூரமாக வெளிச்சிதற வன்முறை நிகழ்கிறது. அது முடிவற்ற வன்முறை. வாழ்வைத்தின்னும் தீராப்பசி கொண்ட வன்முறை. இந்த வன்முறைபற்றி ஒவ்வொருவரும் அவரவர் தத்தம் நிலைப்பாட்டிலிருந்து ஆயிரமாயிரம் நியாயங்களை முன்வைக்கலாம். ஆனால் அது வாழ்வைத்தினகிறது என்பது மட்டும் உண்மை.

நன்றி மடத்துவாசல் பிள்ளையாரடி
வரதர் தமிழரசுக்கட்சிப் பாரம்பரிய அரசியலை முன்நிறுத்திய இலக்கியப்படைப்பாளி. இதனால், அவர் ஒருபக்கம் அங்கீகரிக்கப்பட்டார். இன்னொரு பக்கத்தில் விமர்சிக்கப்பட்டார். ஆனால், அவர்மீதான விமர்சனங்களையும், கண்டனங்களையும் இதுவரை யாரும் காட்டியதோ, கடுந்தொனியிலோ முன்வைக்கவில்லை. வரதர் ஒரு 'சனாதனி' என்று சொல்லுவோர்கூட அவரை முற்றாகப் புறக்கணிக்கவில்லை. வரதரின் இயல்பே இதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியானவர். தன்னுடைய எழுத்துக்களிலோ, உரையாடலிலோ என்றைக்கும் உரத்ததொனியை அவர் எழுப்பியதில்லை. விமர்சனங்கள், சர்ச்சைகள், மறுப்புக்கள், எதிர்வினைகள் எதிலும் அவர் கடுமையாக ஈடுபட்டதாகவும் இல்லை. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்புத்துறையில் இயங்கிவந்த வரதருக்கு எதிர்முகாம்கள் இருந்ததாக அறியமுடியவில்லை. பதிலாக சகல தளங்களிலும் இயங்கிய அவரையொத்தவர்களிடையேயும், அடுத்தடுத்த தலைமுறையினரிடத்திலும் அவருக்கு உறவிருந்தது. அவரவர் கருத்துக்களுக்கும், நிலைப்பாட்டிற்கும் அவரவரே பொறுப்பு என்ற நிலைப்பாடுடையவர் அவர். அதேபோல தன்னளவில் தன்னிடம் ஒரு கருத்துநிலையும் செயற்பாட்டுக்களமும் உண்டு என்ற கருத்துடையவர். இது ஒருவகைப் பண்பு ஜனநாயகம். வரதர் இதைக் கடைசிவரை பின்பற்றினார்.மறுமலர்ச்சிக்காலத்தில் இருந்து படைப்புத்தளத்தில் இயங்கிய வரதர் இலக்கியத்தின் பண்முகத்தன்மையராகவே இருந்திருக்கிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை, பத்தி எனப் பல வடிவங்களில் எழுதியிருக்கிறார். எழுத்தைவிட பதிப்புமுயற்சிகளிலும்; செயற்பட்டுள்ளார். வரதர் பதிப்பகம் நூறுவரையான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. இப்போது வரதர் இறக்கும்வேளையிலும் நான்கு புத்தகங்களை அவர் அச்சிட்டுக்கொணடிருந்தார்.அவை இனிமேல்தான் வெளியிடப்படவுள்ளன. மகாகவியின் வள்ளி தொடக்கம் பல நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். பேராசிரியர் கைலாசபதி பண்டிதமணி.சி.கணபதிப்பிள்ளை சொக்கன் எனப் பலரின் புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார். தவிர அரசியல் ரீதியான பதிவுகளையும் துணிச்சலாக நெருக்கடிக் காலகட்டத்தில் வெளியிட்டார். 'யாழ்ப்பாணம் எரிகிறது' '24 மணிநேரம்' உட்பட முக்கியமான வன்முறை அழிவு சார்ந்த பல வெளியிடுகளை அந்த கொதிப்பான சூழலில் வெளியிட்டவர் அவர். அதுவும் துணிச்சலுடன் தன்னுடைய பதிப்பகத்தின் பெயரில் வெளிப்படையாக 'வரதர்' வெளியீடாகவே வெளியிட்டிருந்தார். அந்த நூல்களை எழுதிய செய்கை ஆழியான் அவற்றை நீலவண்ணன் என்று பெயர் குறிப்பிடும் போது பதிப்பாளரான வரதரோ துணிச்சலுடன் தன்னுடைய பதிப்பகத்தின் பெயரிலேயே அவற்றை வெளிக்கொண்டு வந்தார். இப்படி பலநூல்கள் வரதர் வெளியீடாக வந்திருக்கின்றன. வரதர் இதழியல் துறையிலும் இயங்கினார். 'தேன்மொழி' என்று கவிதைக்கான இதழை நடத்தினார். இதில் வரதருடன் மகாகவி இணைந்திருந்தார். அதற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'மறுமலர்ச்சி' என்ற இதழை 1940களில் வரதர் ஏனைய படைப்பாளிகளுடன் இணைந்து வெளியிட்டார். பின்பு 'புதினம்' என்ற வாரப்பத்திரிகையும் வரதரால் வெளியிடப்பட்டது. கூடவே மாணவர்களின் அறிவுவிருத்தி கல்வி வளர்ச்சிக்காக 'அறிவுக் களஞ்சியம' என்ற இதழையும் சில காலம் வெளியிட்டார். தன்னுடைய முதுமைக்காலத்திலும் அவர் தளர்ந்திருந்ததில்லை போரின் நெருக்குவாரங்கள் சூழ்ந்திறுக்கிய போதும் அவர் அதற்கெதிராக இயங்கிக்கொண்டேயிருந்தார்.

யாழ்ப்பாணம் 1990களில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு பொருளாதாரத்தடை இறுக்கமாக வாழ்வை இறுக்கிப்பிடித்திருந்த காலம் அது. வரதர் அப்போது வெளியிடுகளை கொண்டு வரும் மும்முரத்தில் இயங்கினார். யாழ்ப்பாணம் கே கே எஸ் வீதியில் உள்ள ஆனந்தா அச்சகத்தில் தினமும் வரதரை எவரும் காணலாம். நிமிர்ந்த நடை. நல்ல உயரமான தோற்றம். நரைத்த தலை ஏறக்குறைய 30 வருடமாக இதேமாதிரியான தோற்றத்தில்தான் வரதரைப் பார்த்திருக்கிறேன். பெரிய தடித்த பிறேம் போட்ட முக்குக்கண்ணாடி போட்டிருப்பார். வெள்ளை அரைக்கைசேட்டும் வெள்ளை வேட்டியும் உடுத்திருப்பார். அவர் சத்தமிட்டுப் பேசியோ சத்தமிட்டு சிரித்தோ நான் கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை. யாரையும் அவர் திட்டியதையும் குறைசொன்னதையும் அறிந்ததில்லை அவருடைய இயல்பும் வாழ்வும் ஒரு வகையானது. தனியான அடையாளங்கள் கொண்டது.

ஆனந்தா அச்சகத்தில் அவர் உழைத்ததை விடவும், அதனைப் பயன்படுத்தி தன் விருப்பங்களுக்குரிய காரியங்களைச் செய்தார் என்றே சொல்லவேண்டும்.யாழ்ப்பாண சைவவேளாள வாழ்க்கையிலிருந்து வரதர் விலகவில்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கும் தரப்பினருண்டு. ஒருவகையில் அவர் அப்படித்தான் வாழ்ந்தார் எனலாம். அவர் அந்த வாழ்க்கை வட்டத்தைவிட்டு விலகவில்லை என்பது உண்மை என்ற போதும் அதற்குள்ளிருந்த மேலாதிக்கத்தையோ, வன்முறையையோ அவர் பின்பற்றவில்லை. ஆனால், அந்த சைவவேளாள ஆதிக்கத்தையோ, அல்லது சைவவேளான வாழ்முறையையோ அவர் விமர்சிக்கவும், கண்டிக்கவும் இல்லைத்தான். தன் சமூக அமைப்பிற்குள் தன்னை ஒழுங்குபடுத்தி அதற்குள் அமையக்கூடிய அளவுக்கான அறத்தைப் பின்பற்றி அவர் வாழ்ந்தார். இதை ஒருவகையான சாதுரியம், தந்திரம், பதுங்கல், சமாளிப்பு எனக் கூறுகிறார்கள் சிலர். ஆனால், வரதரின் இயல்பு குறித்தும், அவருடைய வாழ்க்கை குறித்தும் பகிரங்கமான எந்த விமர்சனங்களும் இதுவரை எழுப்பப்படவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல அவருக்கு எதிர்முகாம்கள் இல்லாமல் இருந்ததுதான் இதற்கான காரணமாக இருக்கலாம். இன்னொரு வகையில் சொன்னால், எதிர்முகாம்கள் உருவாகமுடியாத அளவுக்கு நுட்பமாக தன்னை அவர் ஒழுங்கமைத்திருந்தாரோ என்னவோ. இனப்பிரச்சினைபற்றிய வரதரின் நிலைப்பாட்டிற்கும் யாழ்ப்பாணச்சமுகம் பற்றிய அவருடைய நிலைப்பாட்டுக்குமிடையில் வேறுபாடுகள் இருந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவருடைய பங்களிப்பை யாரும் மறுத்துவிடமுடியாது.

வரதரின் இலக்கிய இயக்கத்திற்கும், கோட்பாட்டுக்கும் மாற்றான தளத்தில் இயங்கிய கே. டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், தெணியான், எஸ்.பொ. போன்றோர் தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள். எதிரெதிர் அணிகளாகினார்கள். ஆனால், வரதர் எல்லோருக்குமிடையில் பாலத்தை நிர்மாணித்தே இருந்தார். இது தொடர்பாக நிச்சயம் விரிவாக ஆராயவேண்டும்.வரதருக்கு கைலாசபதியோடும் உறவியிருந்தது. கா.சிவத்தம்பி, மு.த. டொ மினிக் ஜீவா, யேசுராசா எனச்சகலதரப்புக்குமிடையில் தொடர்பாடல் நிகழ்ந்து வந்தது. என்றைக்கும் இது முறிந்துபோனதாக இல்லை. இது எப்படி நிகழ்ந்தது?தமிழரசுக்கட்சி அரசியலை ஆதரித்த வரதர் அதன்வழியான தமிழ்த்தேசியத்தையே தொடர்ந்தும் ஆதரித்தார். ஆனால், எண்பதுகளில் ஏற்பட்ட தலைமுறை மாற்றம், ஆயதப்போராட்ட அரசியலின் பக்கம் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தினார் என்றோ அவற்றை சார்ந்தார் என்றோ சொல்ல முடியாது.அவருடைய முதல் இலக்கிய நோக்கு தமிழ் மக்கள் சிறீலங்கா அரசினால் அல்லது சிங்கள ஆளும்வாக்கத்தினால் வன்முறைக்குள்ளாக்கப்படுவதை எதிர்ப்பதே. அதன் வழியாக தமிழ்மக்கள் நிம்மதியாக நீதியுடன் வாழக்கூடிய ஒரு நிலையைக் காண்பதே. இதற்கப்பால் புதிய அரசியல் உருவாக்கம்பற்றியோ, சமூக மாற்றத்துக்கான கலகங்களிலோ அவரின் அக்கறைகள் கட்டமைவுகொள்ளவில்லை.

வரதர் பின்னாளில் மல்லிகையில் தொடராக எழுதி பின்னர் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்த 'தீ வாத்தியார்' ஒருவகையில் வரதரின் தன்னடையாளத்தைக் காட்டும் படைப்பு. தீ வாத்தியார் அவரைக் காண்பதற்கும், விமர்சனம் செய்வதற்கும் அதிகம் இடமளிக்கும் ஒரு பிரதி என்று சொல்லமுடியும். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான 'கயமை மயக்கம்' என்பதில் இருந்து அவர் கடைசிவரை எழுதிய அநேக கதைகளில் 'மூர்த்திமாஸ்ரர்' என்ற பாத்திரத்தை தொடர்ந்து இயக்கி வந்தார். அந்த மூர்த்திமாஸ்ரர் தலைமுறைகளைக் கடந்தாரா? மூர்த்தி தயங்கிய இடங்கள், தடுமாறிய இடங்கள், அவருடைய நிலைப்பாட்டிற்கும், வாழ்க்கைக்குமான இடைவெளி எந்தளவு என்பனவும் தனியான கவனத்திற்குரியது. வரதரை விளங்கிக்கொள்வதற்கும் அவரை வாசிப்பதற்கும் இதுவும் அவசியமானது.

வரதர் தொடர்பான முழுமையான மதிப்பீடுகள் செய்யப்படவேண்டும். ஆனால் அவை அவரை நிபந்தனையின்றிக் கொணடாடுவதாகவோ அல்லது காழ்ப்புடன் புறக்கணிப்பதாகவோ இருக்க்கூடாது. வரதர் ஒரு முன்னோடி. ஈழத்திலக்கியத்தில் அவருக்கென்றொரு வலுவான பாத்திரமுண்டு. கைலாசபதி நவீன கவிதையை அங்கீகரிக்க மறுத்தபோது வரதர் நவீன கவிதையை அங்கீகரித்திருந்தார். தவிர நவீன கவிதைகளுக்கிடமளித்து தனியாக கவிதைக்கான இதழையும் வெளியிட்டிருந்தார். அத்துடன் வரதருடைய பதிப்பு முயறசிகள் குறித்தும் சரியாக மதிப்பிட வேண்டும்.

ஈழத்தில் பதிப்புத்துறை இன்னும் செழுமையாக வளர்ச்சியடையவில்லை. ஆக வரதரின் பங்களிப்புக்குறித்து சரியான புரிதலுடன் மதிப்பீடு செய்தல் அவசியம்.

Tuesday, March 20, 2007

காலத்துயர்- சு.வி.பற்றிய நினைவுக்குறிப்புகள்


சு.வி.யின் கவிதைகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது இடையில், சற்றும் எதிர் பாராமல் அவரைப்பற்றிய அஞ்சலிக்குறிப்பை எழுதநேர்ந்திருக்கிறது. இந்த அதிர்ச்சியான நிலைமையிலிருந்து விடுபடுவதற்கு சிரமமாகவே இருக்கிறது. சற்றும் எதிர்பாராத நிலை இது. பெருந்துயரம் நிரம்பியுள்ள கணங்கள் இவை.

அண்மையில் சு.வி தொடர்பாக இரண்டு இழப்புக்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன. முதலில் அவருடைய முழுக் கவிதைகளின் திரட்டான "உயிர்த்தெழும் காலத்திற்காக " என்ற நூல் என் கையிலிருந்து எங்கோ தவறிவிட்டது. அவர் தன்கையால் எனக்குத் தந்த புத்தகம். விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த அந்தக் கவிதைத் தொகுப்பைப் போல இதுவரையில் ஈழக்கவிஞர் எவருடைய நூலும் முழுமையாகவும் அத்தனை நேர்த்தியோடும் வந்ததில்லை. (அடுத்ததாக புதுவை இரத்தினதுரையின் 'பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சு களையும்' தொகுதியைச் சொல்லலாம்) அந்தத் தொகுதி எப்படியோ தொலைந்துவிட்டது. அது தாளாத துயரத்தைத் தந்தது. நண்பர்களிடம் அந்தப் புத்தகம் தொலைந்ததைப் பற்றிச் சொல்லித் துக்கப் பட்டேன். ஆனால் அந்தப்புத்தகம் தொலைந்ததைப் பற்றி சு.வி.யிடம் நான் சொல்லவில்லை. சொல்லத் துணிந்ததுமில்லை. அந்தத் தொகுதிபற்றிய மதிப்பீட்டையும் விமர்சனங்களையும் அது பற்றிய கருத்துக்களையும் சு.வி. எதிர்பார்த்திருந்தார். பரவலாக அது பற்றிய அபிப்பிராயங்களை ஒவ்வொரு வரும் எப்படிச் சொல்வார்கள் என்று காத்திருந்தார். ஆனால், சு.வி.யின் எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிலைமை இருந்தது. ஒன்றிரண்டு விமர்சனக் குறிப்புக்களைத்தவிர மிக ஆழமாகவும் விரிவாகவும் யாரும் அந்தத் தொகுதிக்கு முழுத்திரட்டுக்கு விமர்சனங்களை எழுதவும் இல்லை. முன்வைக்கவும் இல்லை. ஏன் அதற்குரிய துணிவு நிகழவில்லை என்று புரியவில்லை. அவரிடம் சொன்னவாறு உரிய காலத்தில் என்னாலும் விமர்சனத்தை எழுதமுடியவில்லை. பின்பு நான் அந்தக் கவிதைகளுக்குரிய விமர்சனத்தை எழுதிக்கொண்டிருந்த போது புத்தகம் தவறிவிட்டது. விமர்சனமும் இடையில் தடங்கலாகிவிட்டது. இது முதல் துயரம். இப்போது இரண்டாவது இழப்பு நேர்ந்திருக்கிறது. முதல் இழப்பை ஈடுசெய்யலாம். சு.வி.யை இழந்ததை எப்படி ஈடுசெய்ய முடியும்? யாரால் அதனை சமன்செய்ய இயலும்? எதனால் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடவும் முடியும்?

சு.வி.யை நல்ல மனிதர், மிக நல்லவர். நல்லவர் என்பதற்கு என்னென்ன உதாரணத்தைச் சொல்ல முடியும்? அவரையே சொல்வதைத்தவிர. எளிமையானவர். இயல்பான எளிமை வாழ்வே எளிமை என்றவாறானவர். எப்படி அவரால் அப்படி ஒரு அழகு நிறைந்த வாழ்க்கையை, ஆச்சரியம் நிறைந்த வாழ்க்கையை வாழமுடிந்திருக்கிறது? யாராலும் வாழமுடியாத அளவுக்கு அவருடைய வாழ்க்கை தனித்துவமாகவும் மிகச் சாதாரணமாகவும் இருந்தது. மிகச் சாதாரணமான வாழ்க்கை. ஒரு சைக்கிளுடன் மட்டும் கழிந்த அவருடைய வாழ்க்கை எல்லாத் தளங்களிலும் வேர்விட்டு நின்றது. அந்த வேரோட்டம் தான் சு.வி.யின் பலம்.

சு.வி. விடுதலையை நேசித்தார்.தேசவிடுதலையை விரும்பினார். இனவிடுதலையை யாசித்தார். மனித விடுதலையை அவாவினார். அவர் ஒரு யதார்த்தவாதி.1980 களின் முற்பகுதியில் சு.வி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கத் தொடங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகளை தீவகத்தில் ஆதரித்து உறவுகொண்டார். தொடர்ந்து அவருக்கு போராட்டத்தோடும் போராளிகளோடும் உறவு வளர்ந்தது. அன்பில் வளர்ந்த உறவு அது. சு.வி. அன்புமயமானவர் என்பதால் அவருடைய உறவுவட்டம் இயல்பாகவே பெருக்கத் தொடங்கியது. போராளிகள் தலைமுறை தலை முறையாக சு.வி.யுடன் ஒட்டிக்கொண்டார்கள். எண்ணற்ற போராளிகளின் அறிமுகமும் உறவும் சு.வி.க்குத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அவர் தன்மனதில் படுகின்ற உண்மைகளை எந்தத் தயக்கமுமில்லாமல் போராளிகளுடன் பகிர்ந்திருக்கிறார். அவர் பல போராளிகளை ஆற்றுப் படுத்தியிருக்கிறார். உற்சாகமூட்டினார். பிரிவுடனும் கருணையோடும் ஆதரிக்கிறார். விடுதலை என்ற எல்லையற்ற தாகத்தோடு இருந்த சு.வி. ஒவ்வொரு போராளிகளையும் பேரொளியூட்டும் சுடர்கள் என்றே கருதினார்.சு.வி. தன்னுடைய இளமைப் பிராயத்திலேயே அரசியலிலும் சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடத்தொடங்கிவிட்டார். இதில் அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் மூத்த படைப்பாளியும் சமூகப் போராளியாகவுமிருந்த மு.தளையசிங்கம். மு.த.வுடன் இணைந்து தீவுப்பகுதியில் நடந்த சாதீயத்துக்கு எதிரான போராட்டங்களில் சு.வி ஈடுபட்டார். அந்த நாட்களில் அவர் இளைஞர். துடிப்புமிக்க இளைஞராக இருந்ததால் மிகத் தீவிரத்தோடு மு.த.வுக்கு பலமாக இருந்து சமூகப்போராட்டங்களில் உழைத்தார். அரசியலிலும் சமூகப் பார்வையிலும் இலக்கியத்திலும் சு.வி. மு.தளையசிங்கத்தையே அதிகமும் பின்பற்றினார். மு.த.வலியுறுத்திய மெய்யுள் என்ற இலக்கியக் கோட்பாட்டை சு.வி. தொடர்ந்தார். மெய்யுளில் மு.த.முன்வைத்த கலைஞனின் மாண்பையும் அடிப்படைகளையும் சு.வி. பின்பற்றினார். அதை அவர் சாட்சிபூர்வமாக்க முயன்றார். இந்த அடிப்படையிலேயே சு.வி.இரண்டு தளங்களிலும் இயக்கினார். ஒன்று அவரது படைப்புச்செயற்பாடு. மெய்யுளை வலியுறுத்தும் அல்லது மெய்யுளின் அடிப்படையிலான படைப்பு முறைமையை சு.வி. தொடர்ந்தார். இரண்டாவது சு.வி.யின் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளும் இவற்றோடிணைந்த வாழ்க்கையும். 1971 இல் சு.வி. மு.த.வுக்குப் பலமாக சாதியத்துக்கெதிராக உண்ணாவிரதம் இருந்ததில் இருந்து அவரது இறுதிக் கணம் வரையான சமூக அரசியல் செயற்பாடுக்கும் ஈடுபாட்டுக்கும் ஒரு தொடர்ச்சியுண்டு. அவர் ஒரு போதும் தனித் திருந்ததில்லை. முதலில் தீவுப்பகுதியில் வேறுபாடுகளில்லாமல் சகலரும் கிணறுகளில் தண்ணீர் அள்ளுவதற்கான உரிமை வேண்டுமென்றும் அப்படியானதொரு சமநிலை உருவாகவேண்டுமென்றும் மு.த. வுடன் இணைந்து சு.வி. போராடியபோது கடுமையாகத்தாக்கப்பட்டார். இதில் மு.த.வும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னாளில் மு.த.வின் இறப்புக்கும் இதுவே காரணமாகியது. அப்போது சு.வி.யும் கடுமையான அடிகாயங்களுக்குள்ளாகினார். குருதியும் சிந்தினார். அந்தளவுக்குத் தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார். சு.வி.யின் உறுதி என்பது அறிவினாலும் தெளிவினாலும் உருவாகியது. பின்னாளில் அவர் தமிழ் தேசியத்தை அணுகிய விதத்திலும் படைப்புச் செயற்பாட்டைத் தொடர்ந்த முறையில் கூட அவரு டைய இந்த உறுதியைக் காணலாம்.

அவர் இந்திய சிறிலங்காப்படைகளின் மக்கள் விரோதச் செயற் பாடுகளை எதிர்த்தார். சிறிலங்கா அரசின் அராஜ கத்துக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்தார். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை விமர்சித்தார். ஆனால் சு.விற்கு பௌத்தத்தின் மீது மேலான புரிதலும் ஈடுபாடும் இருந்தது. அவர் எல்லை கடந்த வரையறைகளற்ற பிரபஞ்ச வெளியில் அன்பைக் கண்டார். அன்பில் உருவாகும் விடுதலையைக் கண்டார். மானுடம் என்பதே அன்பின் விளை பொருள் என்றறிந்தார். சு.வி.யின் பரப்பு, எல்லையற்ற பிரபஞ்சமாகவே இருந்தது. அவருள் சுடர்ந்த அறிவும் அவருள்ளிருந்த உறுதியுமே இதற்குக் காரணம். இந்த விரிந்த பார்வைக்கும் அன்பிணைந்த பிரிவுக்கும் அவருக்கு புங்குடுதீவு சர்வமத ஆச்சிரமத்துடனிருந்த உறவும் ஒரு காரணம். அதிலும் அன்னை கமலா திருநாவுக்கரசு அவர்களுடன் தொடர்ந்து சு.வி.கொண்டிருந்த ஆத் மார்த்த உறவு அவருடைய ஞானத்தை மேலும் வெளிச்சமாக்கியது. சு.வி.எதற்கும் துணிந்தவர். அவருடைய பலம் அன்பிலேயே இருந்தது. அவருடைய கவிதைகளும் அன்பினையே வலியுறுத்தின. அவருடைய சகல காரியங்களும் அன்பின் நிமித்தமானவை. அவர் பேசுவதுபோல இன்றுவரை யாரும் பேச நான் கேட்டதில்லை. நான் மட்டுமல்ல யாரும் அவர் போல வேறெவரும் பேசுவதைக் கேட்டல் இயலாது. அன்பின் மொழியே அவர் பேச்சு. சு.வி.யுடன் உரையாடுவது என்பதே எவருக்கும் அதிசயத்தை ஊட்டுவது. அவர் பேசிக்கொண்டேயிருப்பார். பொழுது தெரியாமல் அவருடைய பேசும் முறையையும் அந்த உரையாடலின் ஆழத்தையும் அழகையும் ரசித்துக்கொண்டேயிருக்கலாம். அவருடைய குரலில் இசையிருந்தது. அன்பிழைந்த லயமிருந்தது. மற்றவரை மதிக்கும் குணமிருந்தது. பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் திறனிருந்தது. அதனால்தான் அவரைச் சகலரும் மதித்தார்கள். அவரில் எல்லோரும் அன்பு கொண்டிருந்தார்கள். சு.வி. க்கு ஆறு தலைமுறைகளிலும் உறவிருந்தது. அந்த உறவு இன்றும் பல தலை முறைகளுக்கும் தொடரும். அந்தளவுக்கு அந்த அன்புக்கு ஏணியுண்டு. சு.வி. எல்லாவற்றையும் மிக ஆழமாகவே நோக்கும் இயல்புடையவர். அவர் ஒரு தடவை சொன்னார் எங்களின் விடுதலைக்கு நாங்கள் பலமானவர்களாக இருக்கவேண்டும். உறுதி கொண்ட மனமும் உடலும் இருக்கும் ஒரு சமூகம் எதற்கும் அடிபணிந்து விடாது. மனதில் தென்பையும் தைரியத்தையும் வளர்க்கவேண்டும். உண்மையொளியும் அறிவும் சுடரும் உறுதியே பெரும் பலமாகும் என்று இதேபோல உடல் உறுதியும் முக்கியமானது. என்பதில் தீராத அக்கறை கொண்டிருந்தார். எந்தப் பஞ்சமும் ஈடேற்றத்தை தரமுடியாது என்று அவர் வலியுறுத்தினார். சு.வி.யின் எதிர்ப்பியக்கம் மானுட விடுதலையை விரும்பும் அடிப்படையிலானது. அதற்காகவே அவர் உறுதியை வலியுறுத்தினார். உறுதியே எதிர்ப்பியக்கத்தின் அடிப்படை என்றுணர்ந்திருந்தார். தைரியமுள்ள ஒரு சமூகம் அநீதியைக் கண்டு அஞ்சாது என்பதும் அறிவு சுடரும் போது அதனால் தவறுகள் நிகழாது என்பதும் சு.வி.யின் தரிசனமாகியிருந்தன. சு.வி தன் சக படைப்பாளிகளை மிக ஆழமாக நேசித்தார். அவருடன் யாரும் பகைமை கொண்ட தாக நானறிந்ததில்லை. சு.வி.யின் கோபம் மிக உக்கிரமானது. ஆனால் அது யாரையும் காயப் படுத்தாது. நீதியான கோபம் அவருடையது என்று உணரவைக்கும் இயல்புடையது அது. அதனால் யாரும் அவருடன் கோபித்ததில்லை. அவருக்கு எதிர்முகங்கள் உருவாகவில்லை. குழந்தைகளிடத்தில் சு.விக்கிருந்த ஈடுபாடு மிகவும் அதிகம். வாஞ்சையோடு அவர் எவரோடும் குழந்தையாகி நின்றார். சு.வி . யின் கவிதை மொழி யிலும் இந்தக் குழந்தைமனத் தன்மையுண்டு. அவருடைய கவிதைமொழி மிக மிகத் தொன் மையானது. அதேவேளை அது மிக மிக நவீனமா னதும் கூட. அதனால் தான் அவர் தமிழ் மரபின் தொடர்ச்சியாய் விளைந்த கவிஞராகக் கருதப்படுகிறார்.

சு.வி.யின் கவிதைகளைப் பற்றி தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள், அறிஞர்கள் பலரும் கூட உயர்ந்த மதிப்பையே வைத்திருக்கின்றனர். எஸ்.வி.ஆர், வ.கீதா, கவிஞர்களான தேவ தேவன், அறிவுமதி, இன்குலாப், ராஜசுந்தரராஜன், பசுவையா, நகுலன், ஞானக்கூத்தன் முதற்கொண்டு ஜெயமோகன் போன்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகள் வளர சு.வி.யின் கவிதைகளை தமிழ்க்கவிதையின் புதிய வளமாகக் கருதுகிறார்கள். மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் கூட சு.வி.யின் கவிதைகள் பரிச்சயமடைந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் பல கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த மூன்றரைத் தசாப்தங்களாக தொடர்ச்சியாக சு.வி. எழுத்தியக்கத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் என்றும் ஓய்ந்திருந்ததில்லை... அவருடைய மனமும் உடலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருந்தன. மனதையும் உடலையும் ஒன்றாக அவர் கருதினார். அப்படியே வைத்திருந் தார். அவருடைய தியானத்திலும் இரண்டும் இணைந்திருந்தன. தன்னுடைய முதற் கவி தையை எழுதத்தொடங்கிய கணத்திலிருந்து தன்னுடைய இறுதிக் கணம் வரைக்கும் அவரு டைய பிரக்ஞை எழுத்தியக்கத்தில் இயங்கிக் கொண்டேயிருந்திருக்கிறது. அவருடைய எழுத்தியக்கம் மானுட விடுதலையை விரும்புகிறது. பிரபஞ்சம் நோக்கிய தாகத்தோடிருந்தது. அவர் பிரபஞ்ச ஒலியை மொழி பெயர்த்திருக்கிறார் என்பது ஒரு தடவை ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளதாக ஞாபகம். பிரபஞ்ச மொழியைப் புரிந்துகொள்ளும் வல்ல மையைப் பெற்றிருந்தார். சு.வி., ஜெயமோகன் சு.வி.யின் கவிதைகள் குறித்து விரிவாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளதாகவும் தகவல். தமிழில் சு.வி. அளவுக்கு விரிவும் ஆழமும் கூடிய படைப்பாளிகள் குறைவு என்று பலரும் சொல்லியுள்ளனர். அவர் தன்னுடைய ஊரை நேசித்த அளவுக்கு சகல நிலப்பரப்பிலும் பற்று டையவராக இருந்திருக்கிறார். எல்லா ஊரும் தனதூரே என்ற உணர்வு, எதையும் ஒன்றாகக் கருதும் ஞானம் அவருக்குள் வளர்ந்திருந்தது. எல்லாவற்றையும் தனக்குள்ளாக்கும் அகந்தை அல்ல அது. ஆக்கிரமிப்பின் விஷத்துளி அல்ல அது. சமனிலை காணும் உயர் நெறியது. அவர் கைவிடப்பட்ட தீவகத்தை துயர் தோய்ந்த அந்த அனல் வெளிகளை காற்றுவழிக் கிராமம் எனப்பாடினார். துயரொழுகத் துயரொழுகப் பாடினார். ஆனால் கதறியழுவதற்காக அல்ல. கதியழுவதும் அல்ல. சிறைப்பட்டுச் சிதையும் அனாதரவான தீவுகளை அவர் காலத்தின் சாட்சியாக நின்று பாடினார். அதுவொரு காலத்துயர். தீராத்துயர். நெஞ்சில் கனலை மூட்டும் பெருந் துயரத்தீ. சு.வி நன்றாகப் பாடுவார். நிலா நாளில், இரவில், அவரின் பாடல்கள் காற்றில் மேலெழுந்து வரும்போது இந்தப் பிரபஞ்சமே கரைவது போலி ருக்கும். அதிலும் அவர் சிலப்பதிகாரத்தின் கானல் வரிப்பாடல்களை துயரொழுகப்பாடுவார். கண்ணில் கரையும் காவியகாலமும் பிரிந்து கொண்டேயிருக்கும் நமக்கு. தன்னுடைய கவிதைகளையும் அவர் பாடிக் காட்டுவார். அந்தக் குரலுக்கு எப்படி அத்தனை ஈர்ப்புச்சக்தி இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். சு.வி.யின் பாடல்களைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவர் எப்போதும் பாடுவார் என்றில்லை. ஆனால் எங்களுக்கு அவருடைய பாடலுக்கான தாகமிருக்கும். அது ஒரு தேவகுரல் என்று ஜெயசங்காரோ லம்போவோ சொன்னதாக நினைவு. உண்மைதான். அதிலும் அவர் நீல வாணனின் " ஓ...ஓ வண்டிக்காரா..." வைப் பாடும்போது கேட்க வேணுமே! அப்பப்பா... சு.வி எப்போது வந்தாலும் அவரை எப்படியும் பாடவைக்கவேணும் என்று ஆசை மேலெழும். சில போது தவறிப்போனாலும் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர் பாடியிருக்கிறார். தனக்காகத்தான் பாடுகிறாரா? அல்லது எங்களுக்காகத்தான் பாடுகிறாரா என்று தெரியாமல் இருக்கும். இப்போதும் அவர் யாருக்காகப் பாடினாரோ என்றே தெரியாமலிருக்கிறது. சு.விக்கு பிரபஞ்சம் மேலிருந்த பற்றளவுக்கு சூழல் மீது கரிசனையும் இருந்தது. அடிப்படையில் அவர் ஒரு சூழலியலாளர் அவர் 'சூழியல்' என்று சுழலியவைச் சுருக்கிப் புதுச் சொல்லாக்கியிருந்தார். திருகோணமலையில் அகதியாகக் குடியேறியிருந்த நாட்களில் கூடுதலான ஈடுபாட்டோடு சூழியலில் கவனங்கொண்டு செயற்பட்டார். சூழியல் குறித்து நிறைய எழுதினார். அவர் எழுதிக் கொண்டேயிருந்தார். புதிய வடிவங்களை நோக்கி சு.வி நகரத் தொடங்கினார். பின்னாளில் அவர் தீவிரமாகவும் ஓய்வின்றியும் அதிகமாக எழுதினார். சுனாமி அவருடைய பல கையெழுத்துப் பிரதிகளை அழித்துவிட்டது.

சுனாமியின் போதும் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சோர்ந்து விடவோ தளர்ந்துவிடவோ இல்லை. அவருக்குள்ளிருந்த தைரியம் அவரை இயக்கிக் கொண்டேயிருந்தது. அவருடலை நோய் தாக்கிச் சிதைத்துக் கொண்டேயிருந்த போதும் அவர் தொடர்ச்சியறாமல் இயக்கிக் கொண்டேயிருந்தார் இறுதியாக அவர் வாசிப்புத் தொடர்பான மாணவர்களுக்கு வழியாகட்டியான சிறிய நூல் ஒன்றைக் கூட வெளியிட்டிருந்தார். 1966 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் ஆண்டு வரை பசித்தவர்களுக்கு தானம் வழங்கியதை அவருடையது. புங்குதீவு சர்வ மத ஆச்சிரமத்தினோடு தொண்டாக அரிசி வழங்கினார். வாழ்வு முழுக்க அவர் தொண்டு செய்தார். எல்லாவகையிலும் தொண்டுகள் செய்தார். இப்படியெல்லாமிருந்த சு.வி. என்ற அன்பாளன் இன்றில்லை. அவரை இழந்துவிட்டோம். அவரை இழக்கப்போகிறேன் என்ற முன்னறிப்பாகவா அவருடைய அந்தப் புத்தகம் தவறியது?லம்போ சொன்னதைப் போல" அளவற்ற அன்பாளனாக" இருந்த சு.வி.யை இழந்து விட்டோம். அவருடைய பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் படி பத்மாநாப ஐயர் பல தடவை கேட்டிருக்கிறார். கொழும்பில் அதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தேன் என்ற போதும் அவருடைய பயணத்துக்கும் ஏற்பாட்டாளர்களுக்குமிடையில் நடந்த நேரப் பொருத்தமின்மையால் அது சாத்தியமாகவில்லை. இனி அதைச் செய்வதற்கும் சாத்தியமில்லை. சு.வி எல்லாவற்றையும் கடந்து விட்டார்.

நிலாந்தன் சொல்லுவது போல அவர் ஒரு காலப்பயணியாகவே சென்றுவிட்டார்.

"வில்வன் போய்விட்டான். இனி ஆத்மார்த்தமாகப் பேசுவதற்கு எனக்கு யாரிருக்கிறார் " என்று மு.பொ துக்கம் தோய்ந்த குரலில் கேட்ட துயர் தான் நமது நெஞ்சிலும் கிளம்புகிறது.

வில்வரெத்தினம் இல்லாத பிரபஞ்சம் இதுவா?

ஒளியைத் தொடர்கின்ற ஒரு பயணி

வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜானிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மை வியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது.

காலங்களைக் கடந்து செல்லும் பிரக்ஞைபூர்வமான தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் இயற்கையையும் எதிர் இயற்கையையும் படைக்கிறார் கஜானி. கஜானியின் படைப்புலகம் இயல்பினூடாக ஆச்சரியங்களை உருவாக்கும் தன்மையுடையது. இதனால் அவருடைய படங்கள் ஒருபோது பேரிசையாகவும் இன்னொருபோது பெருநடனமாகவும் இருக்கின்றன. வேறு ஒருபோது அழகிய ஓவியங்களாகவும் பிறிதொருபோது உன்னத சிற்பங்களாகவும் வேறொரு சமயத்தில் மெய்ததும்பும் கவிதைகளாகவும் கூட அவை தோன்றுகின்றன. கஜானியின் ஒளிப்படங்கள் இயற்கையை மறுபடைப்புச் செய்கின்றன. அதேவேளை சிதையும் சூழலின் தவிப்பையும் அதன் மூலத்தையும் அவை சாட்சிபூர்வமாக்குகின்றன. இயற்கையை அவர் படைப்பாக்கம் செய்யும் போது நாம் விட்டுவிலகிய இயற்கைக்கு மீண்டும் நம்மை சிநேகமாகவும் வலிமையோடும் அழைத்துச் செல்கிறார். நமது வாழ்க்கை எப்படியெல்லாம் இயற்கையைப் புறக்கணித்தும் நிராகரித்தும்விட்டு அலைகிறது என்பதை அவருடைய மறுப்படைப்பாக்கம் பெறுகின்ற இயற்கை நமக்கு உணர்த்துகின்றது. நாம் பொருட்படுத்தத்தவறிய உலகத்தை மீண்டும் நம்முன் நிகழ்த்தி இதனைச்சாதிக்கிறார் கஜானி.

ஒளியைத்தொடரும் பயணி கஜானி
நாம் பொருட்படுத்ததவறும் சூழல் பற்றிய குற்றவுணர்ச்சி அப்போது நம்மை ஆழமாகப் பிளக்கிறது. மனதில் அது வலியையெழுப்புகிறது. ஆனால் அதேவேளை இந்ததவறு தொடர்ந்துவிடாமல் நம்மைச் சூழலோடும் இயற்கையோடும் இணைக்கும் பதிவாக அவரின் படைப்பியக்கமிருக்கின்றது. தண்டனைகளை விதிக்காமலே நம்மை நாமே ஒழுங்குபடுத்தி இணைத்துக் கொள்கிற மாதிரி ஆக்கிவிடுகிறார் அவர்.

கமெரா அவருடைய இனிய பயணியாக அவருக்கு ஒரு நெகிழ்ச்சிமிக்க துணையாக இருக்கிறது. பல சமயத்திலும் மாயங்களை நிகழ்த்தும் விதமாக அல்ல. பதிலாக மீண்டும் மீண்டும் இயற்கையோடும் சூழலோடும் வாழ்வை இணைப்பதற்தான ஆர்வத்தையும் அவசியத்தையும் தூண்டும் விதமானது என்பதே இங்கே பொருள். நமது குற்றவுணர்ச்சிகள் கொடிபோல படர்ந்து செல்லாமல் தன்னுடைய படங்களின் மூலம் அதனை கரைத்தொழிக்கிறார் கஜானி. கஜானியின் கமெரா எதனிலும் கட்டுண்டுவிட வில்லை. அவர் இயற்கையை படமாக்கும் அதே ஆர்வத்தோடும் நுட்பத்தோடும் துயரப்படும் மனிதர்களையும் படமாக்குகிறார். அதனூடே அவர்களின் வாழ்கையைப் பகிர்ந்து கொள்கிறார். அத்துடன் அதைக் கவனப்படுத்தி சமூகத்தின் முன் சமர்ப்பிக்கிறார். புறக்கணிக்கப்பட்டிருக்கும் அந்த மக்களை அவர் அங்கீகரிக்கிறார்.கஜானியின் ஏராளமான படங்களில் நெருக்கடிமனிதர்களின் வாழ்வையும் ஆன்மாவையும் காணமுடியும். குறிப்பாக உழைக்கும் மனிதர்கள் பற்றியபடங்கள் இதில் முக்கியமானவை. சிறுவர்கள் முதல் சகல வயதிலும் உழைக்கும் மனிதர்கள் ஆண் , பெண் வேறுபாடின்றியிருக்கிறார்கள். அதிலும் பெண் உழைப்பாளர்கள் சிறுவர் நிலை உழைப்பாளர்கள் முக்கியமான கவனத்திற்குரியவர்கள் ஆகின்றார்கள்.

இன்று அதிக கவனம் பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்கள் உரிமை குறித்த கவனத்திற்கும் யதார்த்தத்திற்குமிடையிலான முரணை துல்லியமாக்குகின்றார் கஜானி.யதார்த்தத்தில் பெண்கள் கலாச்சார ரீதியாகவும் சமூகவாழ்கையின் நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் இன்றும் இரண்டாம், மூன்றாம் நிலைகளியே உள்ளார்கள். சிறுவர் நலன்குறித்த சிந்தனைகளும் சட்டங்களும் விழிப்புணர்வும் முன்னரைவிட வலுவடைந்தபோதும் இன்றும் சிறுவர்கள் உழைப்பாளர்களாகவும் கல்வி மற்றும் வாழக்;கை உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை ஆதாரப்படுத்துகிறன கஜானியின் ஒளிப்படங்கள். பல சந்தர்ப்பங்களில் கஜானியின் கமெரா பொறுப்புள்ள சாட்சியாகப் பேசுகின்றது.
சமூகம் மீதான கரிசனையும் சகமனிதர்கள் மேலுள்ள பரிவும் அக்கறையும்தான் இதன் அடிப்படை. நாம் வாழுகின்ற சூழல் எப்படிச் சிதைந்துபோய்யிருக்கிறது என்பதைக்காட்டுவதன் மூலம் நமக்குரிய பொறுப்பை அவர் உணர்த்த முற்படுகிறார்.நாம் நாளாந்தம் பல இடங்களிலும் சாதாரணமாகக் காணுகிற காட்சிகளை ஆழப்படுத்தி அவர் காட்டுகிறார். அதன் மூலம் தொடர்ந்தும் நாம் அந்தக்காட்சிகளை சாதாரணமாகக் கடந்து போய்விடமுடியாதபடி அவர் ஆக்குகிறார். இதன் மூலம் சூழலின் சிதைவுகள் குறித்த அக்கறையை நமது புலனுள் நுழைத்து வளர்த்து நமக்குள் அதை நொதிக்கச் செய்கிறார். கமெராவை வெறுமனே ஒரு தொழில்நுட்பக் கருவியாகவோ காட்சியை பதிவு செய்யும் படமாக்கல் சாதனமாகவோ வெறுமனே கஜானியால் கையாளமுடியவில்லை.

அப்படிக்கையாள்வது அந்தச்சாதனத்துக்கும் சமூகத்துக்கும் தவறானது என்ற தெளிவு கஜானிக்கு இருக்கிறது. கமெராவை அறிவுபூர்வமாக அதன் பெறுமானத்திற்குரியவாறு அவர் கையாள்கின்றார். தமிழ்ச் சூழலில் புழங்கும் கமெராக்கள் பன்முகத்தன்மையையும் ஆழத்தையும் இழந்தவை. வளர்ச்சியடையாத கமெரா பார்வையே தமிழ்ச்சூழலில் அதிகமுண்டு. கமெரா மூலம் நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டிய மிகச்சிறிய வேலைகள்கூட முழுமையாகாத நிலையே நமது சூழலில் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சாதனைகள் குறித்து நாம் எப்படிச் சிந்திக்கமுடியும்?

முடிவிலாப்பயணத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் பேரியற்கையையும் வாழ்வையும் ஒரு புள்ளியில் வைத்து அள்ளிக்கொள்கிறது. ஒளிப்படம் நிலையற்ற காட்சிப் புலத்தையும் ஒளித்தருணத்தையும் அதன் போக்கில் வைத்துவிட்டு ஒரு புள்ளியை அல்லது ஒரு பகுதியை வெட்டி நிலைப்படுத்தும் பேரியக்கம் அது.


ஒளிப்படம் கஜானி
ஒளித்தருணம் நிலையற்றது. அது சதா மாறிக்கொண்டேயிருப்பது. பொருட் களும் இடங்களும் மாற்றமடைந்துகொண்டேயிருப்பன. வேகமாக மாறும் ஒளித்தருணத்தையும் அதன் வழியான காட்சிப்புலத்தையும் பதிவு கொள்வதன் மூலம் மாறாப்புள்ளியொன்றை தன்வசப்படுத்தி விடுகிறது ஒளிப்படம். அது நிலையற்ற காட்சிகளை நிலைப்படுத்திக்கொள்ளும் வலிமை பொருந்திய வடிவம். மாறியபடியிருக்கும் காட்சிப்புலத்தை அதன்வழி நகரவிட்டு ஒரு தருணத்தை அல்லது ஒரு புள்ளியை அள்ளிக்கொள்ளும் ஒளிப்படம். மாறிய தருணங்களின் மாறிய காட்சிகளின் ஓர் மாறா அடையாளம். ஒரு தருணமும் ஒரு காட்சியும் இருந்ததற்கான ஆதாரம் அது. ஒரு புதிரான வடிவம். குலையும் வடிவத்தில் குலையா வடிவம்.

ஒளிபடங்கள் ஒரு வகையில் அழியா ஞாபகம். அது காட்சியொன்றின் ஞாபகம். மேலும் ஒளித்தருணமொன்றின் ஞாபகம். இந்த ஞாபகத்தின் வழி அது ஒரு காட்சியினதும் தருணத்தினதும் நிலை. நிலையின்மைக்குள் ஊடுருவும் நிலை. இத்தகைய வலிமைமிக்க நவீன கலைவடிவத்திற்கும் தமிழ்ச்சூழலுக்குமான நெருக்கம் மிகக்குறைவு. தொழில்நுட்பம் பாதியும் கலை ஆழுமை பாதியுமாக இணைந்து திரட்சியுறும் ஒளிப்படக்கலை உலகளவில் நீண்டகாலமாக பெரும் அதிர்வுகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய தூண்டல்களின் வடிவமும்கூட.

இன்றைய தகவல் யுகத்தில் ஒளிப்படம் வகிப்பது அல்லது பெறுவது முதன்மையான பாத்திரம். ஒளிஊடகம் மற்றும் அச்சு ஊடகத்துறையில் ஒளிப்படங்களின் வலிமையும் அதிகம். பேசாப்படங்களாக நின்று அவை பேசும் சங்கதிகள் நிறைய. அத்துடன் வாழ்வின் சகல பருவங்களிலும், சகல நிலைகளிலும் தடையின்றி மிக இயல்பாக சேர்ந்தும் ஊடுருவியும் ஒளிப்படக்கலை நிற்கிறது.

தமிழ் வாழ்வில் சுருங்கிய நிலையில் மிக வரையறுக்கப்பட்ட வடிவங்களுக்குள் அடங்கியதாகவே ஒளிப்படம் பொதுப்புழக்கத்தில் இருந்து வருகின்றது. ஒளிப்படத்தைக் கலையாகவும் அதனை விரிந்த தளங்களில் அணுகுவதிலும் புரிந்துகொள்வதிலும் பெரும் தயக்கங்கள் நிரம்பி வழிகின்றன.

புறக்கணிக்க முடியாதவாறு ஒன்றிணைந்து நிற்கும் ஒளிப்படக்கலையின் மெய்ச் சாத்தியப்பாடுகளைப் புறக்கணிக்கும் போக்கே தொடர்கிறது. மிகச்சிறிய வட்டத்தினர் மட்டும் உயிர்ப்பு நிரம்பிய ஒளியின் சகாசங்களையும் அதன் நுட்பங்களையும் நாடகத்தையும் கவனிக்கின்றனர்.
அரசியல் மற்றும் சமூகவியல் புலத்தில் ஒளிப்படம் பெற்றிருக்கும் இடத்தைக் கடந்த நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள் சொல்கின்றன. இன்றும் அச்சு ஊடகங்கள் தொடக்கம் சகல ஊடகங்களும் ஒளிப்படத்தினூடாகப் பலரையும் பலதையும் அறிதலாக்கியபடியே இருக்கின்றன.ஏதோ ஒரு நாட்டிலுள்ள ஒருவரை, ஒன்றை, ஒரு காட்சியை உலகம் முழுவதற்கும் ஒளிப்படம் அறிமுகப்படுத்தி வைக்கிறது. ஒரு பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை அவருடைய இன்னொரு பருவத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளும் பரவசம் எத்தனை இனியது. அதன் எல்லை மிகப்பெரியதல்லவா. ஞாபகத்தை மீட்டிப் பார்க்கவும் வரலாற்றைக் கற்றுக்கொள்ளவும் தன்னை நெகிழ்ந்து கொடுக்கிறது ஒளிப்படம்.

இன்று ஒளிப்படங்கள் ஊடகத்தளங்களில் நிரம்பிக் கிடக்கின்றன. முடிவுறா உரையாடலையும் பகிர்வையும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஒளிப்படங்கள் கனவின் சாயலுடையவை. கழிந்த காட்சி கனவு இப்போது கழிந்துகொண்டிருக்கின்ற காட்சியும் கனவு. நிஜம் எத்தனை உண்மையாக இருந்தாலும் அது அடுத்த கணம் கனவாக மாறிக்கொண்டிருக்கின்றது. நிஜம் தோற்றுக்கொண்டேயிருக்கின்றது. கனவு நிலைக்கிறது. கழிந்த போனதெல்லாம் இனிக் கனவுதான். ஞாபகத்தின் துளிர்போல சிறகுடையது கனவு. அந்தக்கனவின் முகமாக ஒளிப்படம் மாறிவிடுகிறது. கழிந்த காட்சி கனவாகிவிட ஒளிப்படம் மட்டும் நிஜமாக அந்தக்காட்சியின் மெய்யாக மாறும் விந்தை அது.

ஒளியை ஆளும் ஒரு கலைஞன் காட்சியை தன் அக ஒழுங்கிற்கும் விரிவிற்கும் ஏற்ப அதனை இழைக்கின்றான். எண்ணற்ற வேர்களையும், இலைகளையும், பூக்களையும் அவற்றின் வண்ணங்களையும, வாசனைகளையும் கனிகளையும் அவற்றின் சுவையையும் மரம் என்ற வடிவத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு சிறு விதை போல நல்லதொரு ஒளிப்படம் எல்லா உயிர்ப்புகளையும் தன்னுள் அடக்கியபடியிருக்கிறது. அதற்கு வாசல்களும் அதிகம் திசைகளும் அதிகம்.
இவ்வாறெல்லாம் விரிவுகொண்டிருக்கும் ஒளிப்படத்துறையில் ஈடுபாடு கொண்ட கஜானி தன்னுடைய ஒளித்தருணங்களை தான் அள்ளிய சில புள்ளிகளை காட்சிப்படுத்தியுள்ளார். இங்கே காட்சி என்பது வெறுமனே ஒரு பொருளின் தோற்றத்தையோ ஒன்றின் அடையாள விரிப்பையோ குறிப்பதல்ல. அவர் ஒளி அடுக்குகளை கண்டவிதமே. ஓளியின் வடிவங்களை அறிந்துகொள்வதில்தான் ஒரு ஒளிப்பதிவாளரின் திறனும் பலமும் தங்கியிருக்கிறது.

ஓளி நாடகத்தை வைத்துத் தான் புரியும் விந்தைகள் மூலம் பார்வையாளரின் அகப்புலத்தைத் திறக்கும் ஒளிப்பதிவாளரே சிறந்த கலைஞர். போரின் நெருக்குவாரங்கள் ஒரு ஒளிப்படக்கலைஞரை உந்துதலுடன் செயற்பட வைப்பது இயல்பு. போரின் பிடியில் இருக்கும் சூழல் சடுதியான சிதைவுகளுக்குள்ளாவதால் ஒளிப்படக்கலைஞரின் கவனம் அங்கே இயல்பாகக் குவிகிறது. முதற்கணத்திலிருந்த காட்சி அடுத்த கணத்தில் முற்றாக அழிந்துவிடும் அல்லது சிதைந்துவிடும் நிலை போர்க்களத்திலேயே அதிகமுண்டு. ஒரு குண்டுவீச்சோ, செல்தாக்குதலோ அச்சூழலின் விதியை மாற்றி விடுகிறது சடுதியாக.

இத்தகைய நிலையில் ஒளிப்படக்கலைஞர் இரண்டு தருணங்களையும் ஒரு படச்சுருளிலேயே படமெடுக்கும் நியதிண்டு. இது போர்ச்சூழலுக்கே பெரிதுமுடையது. இவ்வாறானதொரு சூழலில்த்தான் மக்கள் வாழ்க்கையும் இருக்கும்.

போர்க்காலம் ஒன்றின் மக்கள் திரளில் வாழும் ஒளிப்படக்கலைஞர் செயற்படும் விதம் தீவிரமானது. நிழலும் தீப்பிடித்தெரியும் வாழ்க்கையுடைய சூழலது. தன் சூழலையும் தன் காலத்தையும் சர்வதேச எல்லைகளை நோக்கி விரிக்கக்கூடிய சாத்தியங்கள் அந்தச் சூழலின் ஒளிப்படங்களுக்கும் ஒளிப்படக்காரர்களுக்குமுண்டு -கஜானி இந்தக் குறைநிறையை மாற்றமுனைகிறார். கமெராவை அதன் பொருள் பொதிந்த நிலையில் கையாள வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். அதிலும் தனியே ஒளியையும் சட்டகத்தையும் கையாள்வதன்மூலம் மட்டும் எதையும் படமாக்கிவிட முடியும் என்ற இலகுவான பொறிமுறையைவிட்டு விலகவேண்டும் என்ற விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் அவர் இயங்குகிறார்.

-ஒளியினூடாக காட்டப்படும் வினோதங்கள் ஒளிப்படத்தில் கூடுதல் கவர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.ஆனால் அது மட்டும் ஒளிப்படத்தின் வெற்றியாகாது. அது முன்மாதிரியாகப் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையுமல்ல எனபதை கஜானியின் ஒளிப்படங்கள் வாதிடுகின்றன.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக ஒளிப்படத்துறையில் ஈடுபட்டுவரும் கஜானியின் அனேக படங்கள் பல இதழ்களிலும் நூல்களிலும் வெளியாகியிருக்கினறன. ஆயிஷா, ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள், எலும்புக்கூட்டின் வாக்குமூலம், இருள் இனி விலகும், இனி வானம் வெளிச்சிரும் எனப்பல நூல்கள். இவை தவிர சர்வதேச ஒளிப்பட இதழ்களிலும் கஜானியின் படங்கள் பிரசுரமாகியுள்ளன.

-தமிழ்ப்பெண் ஒளிப்படக்கலைஞர்களில் கஜனிக்கு இருக்கின்ற கூடுதல் சிறப்பம்சம் அவர் போர்க்களப்படங்களையும் பிடித்துள்ளவராக இருப்பதன்மூலம் கிடைக்கிறது. வெளிச்சூழலிலும் போர்க்களச்சூழலிலும் கவனம் பெறக்கூடியமாதிரியான இருதள இயக்கம் இது. அநேகமாக அபூர்வமாகவே இது வாய்க்கும்.

விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்காப்படையினருக்கும் இடையிலான போர்க்காட்சிகளை ஆச்சரியப்படுமளவில் அவர் படமாக்கியிருக்கிறார். படையினர் கைவிட்டுச்சென்ற காப்பரண்கள், படைத்தளங்கள், மக்களில்லாத கிராமங்கள், இடப்பெயர்வுகள், சூனியப்பிரதேசங்கள் என சகலவற்றையும் அவர் படம்பிடித்துள்ளார். இன்னும் மக்கள் வாழும் நகரங்களிலும் கிராமங்களிலும் படையினர் ஆக்கிரமித்து நிற்பதையும் அவருடைய கமெரா சாட்சி பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளது.

எவையெல்லாம் இன்று தன் சூழலை நெருக்கடிக்குள்ளாக்குகின்றனவோ அவற்றை அவர் எதிர் வினையாக்குகின்றார். அவருடைய பலமும் ஆயுதமும் கமெராதான். மறுக்கமுடியாத சாட்சியாக அந்தப்படங்கள் நிரூபணம் கொள்கின்றன.பெண்பேராளிகளின் களமாடல் தொடக்கம் களவாழ்வுவரையான தொகுதிப்படங்கள் தமிழ்பெண்வாழ்வில் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டு விரிதலுக்கு புதிய அடையாளக்குறியானவை. அந்தப் பெண்களின் உடை தொடக்கம் அவர்களின் வாழ்முறைகள் அத்தனையும் தமிழ்ச்சூழலுக்கும் தமிழ்ப்பெண்பற்றிய புறச்சூழலுக்கும் அதிர்ச்சிகரமான ஒரு காட்சிப்புலமே. விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள் பற்றிய படங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிறைய வெளியாகியிருக்கின்றன. இதில் கஜானியின் படங்களும் அடங்கும். ஆனாலும் கஜானியின் ஒளிப்படங்களை ஒன்று சேரத்தொகுத்துப் பார்க்கும்போது அவர் பெண்போராளிகளின் வாழ்வையும் ஆற்றலையும் காட்சிப்புலத்தின் வழியாக சீராக ஒழுங்குபடுத்தியுள்ளமையைக் காணலாம். இன்றுள்ள போராட்டவாழ்வில் பெண் வாழ்க்கையும் அதன் அடையாளமும் பெற்றுள்ள இடத்தை அவர் கவனங்கொண்டுள்ளார். பெண்போராளிகளின் பல பரிமாணங்களையும் துலங்கவைக்கும் நோக்கில் அவருடைய பல படங்கள் உள்ளன. துலக்கம்பெறவேண்டிய அனைத்துப் பகுதிகளிலும் அவர் ஒளிபாய்ச்சுகிறார். அவற்றை அவர் போக்கஸ் ஆக்குகின்றார்.

ஒளியைக்கையாள்கை மற்றும் சட்டகங்களின் கவனம் பின்னகரும் சில படங்களும் இவருடைய சேகரிப்பிலுண்டு. ஆனால் அவை படமாக்கப்பட்ட சூழ்நிலையும் களமும் வேறு. படமெடுப்பதற்கு அவகாசமற்ற சூழ்நிலைகளிலும் களத்திலும் அவற்றில் சில படமாக்கப்பட்டிருக்கின்றன. தீர்மானிக்கப்பட்டிருக்காத சூழ்நிலைகளில் இயங்கும் ஒளிப்படக்கலைஞருக்குள்ள சவால்கள் எப்போதும் நெருக்கடிகள் நிறைந்தவை. குறிப்பாக போர்க்களம் மற்றும் அதுபோன்ற திடீர்ச் சந்தர்ப்பங்கள். அதில் தேர்வென்பது நெருக்கடிச் சூழ்நிலையும் அந்தக் களமுமே. அப்படியான தருணங்களில் எடுக்கப்படுகின்ற படங்கள் அவை எதிர்கொண்ட சவால்களுக்குரியவாறு பெரும் நிலைபேறைப் பெறுகின்றன. அப்படியான நிலமைகளின் போது எடுக்கப்பட்ட பல சர்வதேசப் புகழ் பெற்ற படங்கள் நமது ஞாபகப்பரப்பில் அழியாதவாறு பதியம் பெற்றிருக்கின்றன. பல ஒளிப்படக் கலைஞர்கள் இந்தச் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதில் கஜானியும் சேரத்துடிக்கிறார்.

கஜானி தன்னளவில் தனக்குச் சாத்தியமான எல்லைவரையில் இயங்கியிருக்கிறார். அவருடைய கவனத்திற்கமைய இந்த ஒளிப்படங்கள் பதிவாகியுள்ளன.போர்ச்சூழலில் ஒடுக்கப்படும் இனமொன்றின் பிரதிநிதியாக நின்று கொண்டு ஒளிப்படத்துறையில் இயங்குவதென்பது மிகவும் சிரமம். தமிழ்ச் சூழலில் ஒளிப்படம் குறித்த ஆர்வமுள்ள அளவுக்கு அதன் கலைப்பெறுமதி குறித்த புரிதல் இல்லை. இது ஒளிப்படத்துறையில் இயங்கும் ஒருவருக்கு இன்னொரு மறைமுகமான நெருக்குவாரம். இதைவிட இத்துறைபற்றி கண்டுகொள்ளாத்தனம் வேறு. இவையெல்லாம் சேர்ந்து தமிழ் வாழ்வில் ஒளிப்படத்துறையை ஒடுக்கிவைத்துள்ளன.
கஜானி இத்தகைய சூழலை எதிர்கொண்டபடிதான் இயங்குகின்றார். கஜானி தன்னார்வத்தின் வழி செய்த பயணத்தின் புள்ளிகளைக் கோர்வையாக்கியுள்ளர்.கஜானியின் படங்கள் கொந்தழிக்கும் ஒரு சமூகத்தினது ஆன்மாவை காட்சி ரூபமாக்குகின்றன. இதற்காக அவர் தீராத தாகத்தோடு கமராவில் இயங்குகின்றார். இதற்கு அவர் தன்வாழ்வையும் ஈடுபாட்டையும் மக்கள் விடுதலை குறித்த திசையில் வைத்திருப்பமே அடிப்படை.

அவருடைய புலனில் பதியம் பெற்றுள்ள சமூக்கக் கவனம் சக மனிதர்கள் பற்றிய அக்கறை இயற்கை மற்றும் பிரபஞ்சம் மீதான பிரியமெல்லாம் அவரை முன்னோக்கி நகர்த்துகின்றன.அவர் ஒளியை விரும்புகின்றார். ஒளியே அவருடைய ஆதாரம். ஒரு வகையில் சொன்னால் அவர் ஒளியைத் தொடர்கின்ற ஒரு பயணி.