வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பல முக்கிய இடங்கள் இப்போது இராணுவப் பிரதேசங்களாகவும் இராணுவ வலயங்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில பிரதேசங்கள் மேலும் இராணுவ வலயங்களாக்கப்படவிருக்கின்றன.
ஒரு போராட்டம் தோற்கடிக்கப்படும்பொழுது இந்த மாதிரி அழுத்தங்களும் ஆக்கிரமிப்புகளும் அந்தப் போராட்டத்தை நடத்திய சமூகங்களின் மீது திணிக்கப்படுவது வழமை.
இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஈழுவிடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாய முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டிருக்கும் பலவீனங்களும் தடுமாற்றங்களும் இந்த மாதிரி ஆக்கிரமிப்புக்கும் அழுத்தங்களுக்கும் இடமளித்திருக்கிறது.
அரசியல் ரீதியாக பலமான நிலையில் தமிழ் பேசும் இனங்கள் இருந்தால் இந்த மாதிரி நடவடிக்கைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அத்தகைய பலத்தை நோக்கி தமிழ் பேசும் இனங்களின் அரசியல் முன்னெடுப்புகள் நடப்பதாகத் தெரியவில்லை. ஆகவே பலவீனப்பட்ட அரசியற் சூழலில் தங்களுடைய கிராமங்களையும் வளங்களையும் இழந்து நிற்கும் மக்களின் தொகை வரவரக் கூடிக் கொண்டே போகிறது.
இந்தப் பின்னணியில், கிளிநொச்சி மாவட்டத்திலும் பல பிரதேசங்கள் படைநலன்களுக்காக இழக்கப்படுகின்றன. அல்லது பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இதில் ஒன்று, பூநகரிப் பிரதேசத்தில் இருக்கும் இரணைதீவு. இந்தத் தீவின் மக்கள் இப்போது முழங்காவில் பகுதிக்கு இடம்பெயர்க்கப்பட்டு இரணைமாதா நகர் என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
தங்களுடைய சொந்த இடத்துக்குத் திரும்ப முடியாத நிலையைப் பற்றி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் (அதிபர், இரணைதீவு தமிழ் வித்தியாலயம் - தலைவர் மீனவர் சங்கம், இரணைதீவு) மகேந்திரராஜா (செயலாளர், இரணைதீவு மீனவர் சங்கம் - தலைவர், இரணைதீவு கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர்) ஆகியோரைச் சந்தித்து அவர்களுடைய கிராமத்துக்குப் போகமுடியாத நிலைமை குறித்து உரையாடினோம்.
இரணைதீவைப் பற்றிச் சொல்லுங்கள்?
ஜெயசீலன்:-
இது பூநகரி பிரதேச செயலர் பிரிவில் இருக்கிற ஒரு மீன்பிடிக் கிராமம். இந்தக் கிராமம் கடலால் சூழப்பட்டிருக்கு. அழகான ரண்டு தீவுகள். ஆனால் இரட்டைப் பிள்ளைகளைப் போல ரண்டும் ஒண்டாச் சேர்ந்த மாதிரி அருகருகாக இருக்கின்றன. அழகான தீவுகள். எங்களுக்கு மன்னாரும் கிட்டத்தில் இருக்கு. யாழ்ப்பாணமும் கிட்டத்தில் இருக்கு. நெடுந்தீவும் கிட்டத்தில இருக்கு. ஆனால் நாங்கள்தான் இப்ப இந்தத் தீவுகளுக்கு எட்டத்தில இருக்கிறம். தொழிலுக்குப் போகும்போது தூர நின்று ஊரைப் பாக்கிறம்.
நல்ல மீன் பாடுள்ள கடல். எந்தக் காலத்திலயும் மீன் படும். வாடையில இன்னும் கூடப்படும். ஆனால், இப்ப நாங்கள் எங்கட தீவைச் சுற்றி தொழில் செய்யிறம். தீவில – ஊரில நேவி இருக்கு.
ஊரை விட்டு வந்து பத்து வருசத்துக்கு மேலாகீட்டுது. இன்னும் எத்தனைவருசம் செல்லுமோ தெரியேல்லை திரும்ப ஊருக்குப் போறதுக்கு?
ஊரில 276 குடும்பங்கள் இருந்தன. எல்லாரும் கடற்றொழில்தான் செய்தார்கள். அட்டை பிடித்தார்கள். தரமான அட்டை. நல்ல விலை விற்கும். ஆறு மாதம் அட்டை பிடிக்கலாம். அது ஒரு சீசனுக்குத்தான்.
எப்போது இரணை தீவை விட்டு வெளியேறினீங்கள்? ஏன் வெளியேறினீங்கள்?
மகேந்திரராஜா:-
1990 களின் முற்பகுதியில் வெளியேறினோம். கடற்படை புலிகளைக் கண்காணிப்பதற்காக இரணைதீவைப் பயன்படுத்த முனைந்தது. ஆனால், புலிகள் அதனை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றார்கள். இதால அங்க எப்பவும் சண்டை நடக்கும்.
இந்த நிலைமையில அங்க எப்பிடி இருக்க ஏலும்?
பேசாமல் சனங்கள் வெளிக்கிட்டுட்டுதுகள். அங்க இருந்து வெளியேறிய சனங்களுக்கு முழங்காவிலுக்கு மேற்குப்பக்கமாக இருந்த இடத்தை ஒதுக்கித் தந்தார்கள். அங்கயே குடியிருப்பும் போடப்பட்டுது. பள்ளிக்கூடம், தேவாலயம், ஆரம்பசுகாதார நிலையம் எண்டு எல்லாம் கட்டப்பட்டுது.
இரணைமாதா நகர் என்று பேரும் வைத்தார்கள். இப்ப இஞ்சதான் சனங்கள் இருக்கினம். மீள் குடியேற்றமும் இங்கேதான் நடந்திருக்கு.
போர் முடிஞ்சபிறகு, எங்கட பழைய இடத்துக்குப் போகலாம் எண்டுதான் நினைச்சிருந்தம். ஆனா, அதுக்கு வழியில்லாமக்கிடக்கு. அங்க போற கதையை எடுத்தாலே அதை விடுங்கள் என்று சொல்கிறார்கள்.
அங்க இப்ப நேவி இருக்கெண்டு சொன்னமே. அது நிரந்தரமாக ஆகிவிடுமோ எண்டுதான் யோசிக்கிறம்.
இரணைமாதா நகரில் எல்லோருக்கும் காணி, வீடு எல்லாம் இருக்கிறதா?
ஜெயசீலன்:-
இரணைதீவில இருந்து முந்தி வந்த ஆக்களுக்கு காணி இருக்கு. வீடும் இருந்துது. ஆனா இப்ப வீடொண்டும் இல்லை. புதிசா எல்லாரும் கொட்டில் போடுறம்.
இப்ப இந்தப் போர்க்காலத்தில நடந்த பிரச்சினைகளா கன கலியாணங்கள் நடந்திருக்கு. அதுகளுக்கு இப்ப காணியும் இல்லை. வீடும் இல்லை. இதொரு புதுப் பிரச்சினை. இதுக்குத் தீர்வு காணவேணும்.
இப்ப வீட்டுத் திட்டம் வந்திருக்கு. வீடு கட்டக் காசு தாறதெண்டால் காணி உறுதி வேணும் என்கிறார்கள். காணி இல்லை எண்டால் வீடில்லை. அருமையான வாய்ப்பு தவறிப் போகப் போகுது.
இதுக்கும் தீர்வு காணவேணும். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைப் பற்றிக் கதைக்கிறார்கள். ஆனால், இஞ்ச இருக்கிற ஆட்களுக்கு காணியை பெற்றுக் குடுக்கிறதைப் பற்றி, இருக்கிற காணியளுக்கு அத்தாட்சிக் கடிதங்களை வாங்கிக் குடுக்கிறதைப் பற்றி எந்த அக்கறையும் இவையளுக்கு இல்லை.
இப்படித்தான் நாங்கள் கெட்டுக் கொண்டு போறம்.
எங்கள எங்கட இடத்துக்குப் போகவிட்டால், எங்கட கோயிலுக்குப் போகவிட்டால் போதும். அங்கபோய்த் தொழிலைச் செய்து முன்னேறியிடுவம்.
எங்கட கவலையில முக்கால்வாசி குறைஞ்சு போயிடும்.
இதுக்கு என்ன செய்யலாம் எண்டு யோசிக்கிறியள்?
மகேந்திரராஜா:-
இதுக்கு, முதல்ல எத்தினை பேருக்கு காணி வேணும் எண்ட விவரத்தைத் திரட்ட வேணும். அதுக்கு காணிக்கச்சேரி வைக்க வேணும். அதில
காணி இல்லாத ஆக்களுக்கு காணியும் அத்தாட்சிப் பத்திரம் இல்லாத ஆக்களுக்கு பத்திரமும் வழங்க வேணும். இதை காலந்தாழ்த்தாமல் செய்யவேணும்.
ஆனா, இதைப்பற்றி எத்தினையோ முறை எடுத்துச் சொல்லியிட்டம். அதுக்கு யாரும் காது குடுத்த மாதிரித் தெரியேல்ல. பொதுவாகவே எங்கட பக்கத்தை ஆரும் கவனிக்கிறது குறைவு. இப்ப முழுசாக் கைவிட்டிட்டார்கள்.
ஆனால், எங்கட மீனுக்கும் அட்டைக்கும் மட்டும் வாறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிட்டை எல்லாம் சொல்லியிருக்கிறம். இந்தா பார்க்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு பலனையும்
காணேல்ல.
இப்போது இரணைமாதாநகரில் மீளக் குடியமர்ந்திருக்கிற மக்கள் என்னசெய்கிறார்கள்?
ஜெயசீலன்:-
சிலபேர் தொழிலுக்குப் போகினம். சிலபேருக்குத்தான் வள்ளமும் வலையும் கிடைச்சிருக்கு. 19 பேருக்கு. கடற்றொழிலை நம்பிய சமூகம் தொழில் இல்லாமல் இருந்தா எப்பிடிச் சீவிக்கிறது?
இதால கல்வியில வீழ்ச்சி. வாழ்க்கை கெட்டுப் போய்க்கிடக்கு. கொஞ்ச உதவியாவது கிடைச்சால் இந்தச் சனங்கள் கொஞ்சம் நிமிர்ந்திடும்.
ஆட்டை பிடிப்பு நடக்குது. ஆனால், அதைக் கொள்வனவு செய்யிற ஆட்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். அது வெளியூராக்கள்.
அட்டையை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அதுக்கிடையில ஆறு ஏழு கை மாறுது. ஆட்டை பிடிக்கிற ஆக்களுக்குக் கிடைக்கிற காசைவிட இiடையில நிக்கிற தரகர்களுக்குக் கிடைக்கிற லாபம் கூட. இது கொடுமை.
சங்கம் முந்தி கொள்வனவு செய்து வித்தது. இப்ப சங்கத்திட்ட காசில்ல. வளமில்லை. கடனுக்கும் ஏற்பாடில்ல.
சங்கம் கொள்வனவு செய்தால் தொழிலாளிக்கு லாபம் கூடக்கிடைக்கும். இப்ப பல கைகள் மாறிறதால பாதிக்கப்படுகிறது தொழிலாளர்கள்தான். இப்ப ஒரு கிலோ அட்டையை 13.500 ரூபாவுக்கு எடுக்கிறார்கள். ஆனால், சங்கம் இந்த அட்டையை எடுத்தால், 20.000 ஆயிரத்துக்கு மேல எடுக்கும். முதல் தர அட்டையின்ரை குறைஞ்ச விலை 25.000 ரூபாய்.
இப்பிடித்தான் மீன், றால் கொள்வனவுகளும் நடக்கு.
உங்களுடைய கிராமத்தில் போரினால் ஏற்பட்ட இழப்புகள் என்ன?
மகேந்திரராஜா:-
ஊரையே இழந்திருக்கிறம். அதைவிட பெரிய இழப்பெது? உயிர் இழப்பெண்டு சொன்னால், 53 பேர் செத்திருக்கினம். ஒருதருக்கும் வீடில்லை. தொழில் இல்லை. வருமானம் கிடையாது. சேர்த்து வைச்சிருந்த பொருள் பண்டமெல்லாம் அழிஞ்சு போச்சு.
சுருக்கமாகச் சொன்னால் கடந்த காலம் எண்டதும் நிகழ்காலம் எண்டதும் எங்களுக்கில்லை. எதிர்காலம் எண்டதிலயும் அரைவாசி இல்லை.
இப்போது நீங்கள் எதிர் நோக்குகிற பிரச்சினைகள் என்ன? இதற்கெல்லாம் என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறியள்?
மகேந்திரராஜா:-
நாங்கள் முன்னமே சொல்லியிருக்கிறம். எங்கட ஊருக்குப் போகவேணும். எங்கட கோயிருக்குப் போய்க் கும்பிடவேணும் எண்டு. அதைவிடக் காணிப்பிரச்சினை, தொழிற்பிரச்சினை, வருமானப்பிரச்சினை, படிப்பு, அது இது எண்டு ஏராளம் பிரச்சினையிருக்கு. சுருக்கமாச் சொன்னால் எல்லாமே பிரச்சினைதான்.
நாங்கள் மீளக் குடியமர்ந்து எட்டுமாதங்களாகியிட்டுது. பிரதேச செயலரை ரண்டு தடவைதான் பாத்திருக்கிறம். அதுக்கு மேல அவர் வரக்கூடாதெண்டு ஆரும் சொல்லயில்லை. ஆனால், அவை வாறதில்லை. அரசாங்க அதிபர் எட்டிப்பாக்கவேயில்லை.
போரில பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இந்த மாதிரி பொறுப்பான அதிகாரிகள் அடிக்கடி வந்து பாத்து நிலைமைகளைச் சீராக்க வேணும்.
ஆனால், இவையளுக்கு நாங்கள் எங்கட பிரச்சினையளைச் சொல்லியிருக்கிறம். பதில் நடவடிக்கைகள் எதையும் காணயில்லை. என்னதான் செய்யிறார்கள் எண்டு தெரியேல்ல.
இதைவிட, எங்களுக்கு தொழில் செய்யப் படகு வேணும். வலை வேணும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொஞ்சக் காலத்துக்காவது உதவி தேவை. இதுக்கெல்லாம் நாங்கள் ஆரிட்டப் போய்க் கேட்கிறது?
உண்மையைச் சொன்னால் சனங்களுக்கு இப்ப ஆரும் உதவிக்கில்லை. அதுகள் தங்கட பாட்டில ஏதோ செய்யக் கூடியதைச் செய்து கொண்டு வாழுதுகுள். நாங்களும் அப்பிடித்தான்.
கடற்றொழிற் சமாசம், உங்களுடைய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் என்ன? அவை ஏதாவது உதவிகளைச் செய்ய முடியாதா?
மகேந்திரராஜா:-
சங்கங்களின் நிலைமை மிக மோசம். வைப்பில போட்ட காசை வங்கிகள் குடுக்குதில்லை. அதைவிடச் சங்களின் சொத்தெல்லாம் முள்ளிவாய்க்காலில் கைவிட்டாச்சு. சமாசம் இப்போதுதான் இயங்குது. ஆனால், விரைவில் ஏதோ நல்ல முன்னேறறம் ஏற்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கடற்றொழில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக பல தேவைகளுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறம். ஐஸ் தொழிற்சாலை ஒன்றை அமைத்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்ப வலைப்பாட்டில ஒரு ஐஸ் சேகரிப்பு நிலையம் ஒண்டைத் திறந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுது. அதைப்பற்றிய குழப்பமான செய்திகளும் வந்து கொண்டிக்கின்றன.
மீண்டும் நல்லதொரு வாழ்வை, இயல்பான வாழ்க்கைiயை, உங்களுடைய கிராமத்தில் வாழும் நிலையை எப்போது நீங்கள் பெற முடியும் என்று நீங்கள் கருதுறீங்கள்?
ஜெயசீலன்:-
அதுதான் பிரச்சினையே. இப்பிடி விரைவாக யுத்தம் முடியும். இப்பிடி நாங்கள் அகதியாக இருந்து மீள் குடியேற்றப்படுவம் எண்டெல்லாம் நாங்கள்
எதிர்பார்க்கயில்லை. நாம் எதிர்பார்க்காத நிலையில எல்லாம் நடந்து கொண்;டிருக்கு.
ஆனால், சில பிரச்சினைகளுக்கு இப்போதைக்கு தீர்வு கிடைக்கும் எண்டு நாங்கள் யோசிக்கவில்லை. ஆனால் அது கிடைக்க வேணும்.
இயல்பு நிலை எப்பதான் கிடைக்குமோ? ஆனால், ஒண்டு, புதிசு புதிசா ஆட்கள் வந்து சனங்களுக்குச் சின்னன் சின்னதாக உதவுகினம். சிறு துளி பெரு வெள்ளம். உதவட்டும்.
பிறரிடம் கையேந்திறதை விட எங்கட உறவுகளிட்டக் கேட்கலாம். அவையளும் இந்தச் சந்தர்ப்பத்தில தாராளமாய் உதவவேணும். இது கடமையல்ல. பணி. தேவையின் பாற்பட்ட பணி.
நாங்கள் நிமிந்திட்டம் எண்டால் எல்லோரையம் ஆதரிப்பம். எல்லாருக்கும் உதவுவம். இரணமாதா நகர்ச் சனங்கள் அப்படிப்பட்ட பண்பைக் கொண்டவர்கள். ஆனால் காலந்தான் பிழைச்சுப் போய்க்கிடக்கு.
00
No comments:
Post a Comment