Friday, June 15, 2007

கொழும்பைப் பாதுகாக்கவா புதிய வியூகங்கள்


பத்து நாட்களாக வரும் தொலைபேசி அழைப்புகளில் பெரும்பாலானவையும் மீண்டும் சமாதான முயற்சிகள் தொடங்குமா, பேச்சுவார்த்தை எப்போது ஆரம்பமாகும், நோர்வேயின் பாத்திரம் எப்படி இருக்கப்போகிறது, சிறிலங்கா அரசு வசமாக மாட்டியிருக்க்pறது, நோர்வேயை ஏமாற்றியதைப்போல பிரித்தானியாவை ஏமாற்ற முடியாது என்று ஏகப்பட்ட அபிப்பிராயங்கள் பகிரப்படுகின்றன. இதில் ஊகநிலைப்பட்ட அபிப்பிராயங்களும் வியாக்கியானங்களுமே அதிகம். புலம்பெயர்ந்தோர் தொடக்கம் பெரும்பாலான தமிழர்கள் இந்தமாதிரியே அபிப்பிராயப்படுகிறாhர்கள். அல்லது இவ்வாறு சிந்திக்கிறார்கள். சிலர்மட்டும் இது இன்னுமொரு பொறி எனறு சொல்கிறார்கள்.

இவர்கள் இப்படிச்சிந்திப்பதற்குச்சில காரரணங்களிருக்கின்றன. அண்மைய நாட்களில் சிறிலங்கா அரசுமீது மனித உரிமைப்பிரச்சினைகள் குறித்து மேற்குலகம் தொடர்ச்சியான கண்டனங்களை தெரிவித்;து வந்தது. குறிப்பாக ஐரோப்பாவைத்தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச்சபையும் அமெரிக்காவைத்தலைமையகமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இந்த விடயத்தில் அதிகளவு எதிர்ப்பைக்காட்டியிருந்தன.

அடுத்தது இiணைத்தலைமை நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் படியும் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும்படியும் மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கம் கூடிய கவனமெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தன.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஜேர்மனி சிறிலங்காவுக்கான நிதியுதவியை மட்டுப்படுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து உதவி வழங்கும் நாடுகள் சிறிலங்காவுக்கு வழங்குதாகத் தெரிவித்த நிதியையும் தவணை அடிப்படையில்தான் சிறிலங்காவுக்கு வழங்கமுடியும் என அறிவித்திருந்தமை.

இதற்கடுத்து இப்போது பிரித்தானியா தான் வழங்கச்சமமதித்த நிதியில் அரைவாசியைத்தான் இப்போது வழங்க முடியும் என அறிவித்துள்ளமை.

இவை எல்லாவற்றுக்கும் இந்தத் தரப்புகள் தெரிவிக்கும் காரணம் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்;படுகின்றன. போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வில்லை. பேச்சுவார்த்தை தொரப்பட வில்லை என்பனவாகும். தவிர அரசாங்கம் துணை ஆயதக்குழுக்களை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் மறைமுகமாகத் தெரிவக்கப்பட்nருக்கிறது.

மேலோட்டமாகப்பார்த்தால் இது தமிழருக்குச் சாதகமான மேற்குலகத்தின் ஒரு போக்காக இருக்;கலாம் என்று தோன்றும். அல்லது தமிழரின் நியாயத்தை சர்வதேச சமூகம் ஏற்றுள்ளதைப்போலத் தெரியும். ஆனால் உண்மை நிலைமை அப்படியில்லை. அதைப்பின்னர் பார்ப்போம்.

மேற்குலகம்;;;; விடுதலைப்புலிகள் மீதும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதையும் பார்க்கவேண்டும்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடைசெய்தது. புலிகளின் தொடர்பாளர்கள் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரை அண்மையில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கைது செய்துள்ளன. ஆக இரண்டுதரப்பையும் சமநிலையில் பார்க்கின்றோம் என்றும் அப்படியே கையாள்கிறோம் என்றும் அவை காட்ட முற்படுகின்றன.


இதேவேளை இனப்பிரச்சினையின் மறுதரப்பான சிங்களவரின் மனப்பதிவும் எதிர்பார்ப்பும் சிந்தனையும் வேறுவிதமானவை. சிறிலங்காவில் வெளிச்சக்திகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. புலிகளுக்கு ஆதரவான தரப்புகள் மீண்டும் உள்நாட்டரசியலில் தலையிடுவதை ஏற்க மாட்டோம் என்று ஜே.வி.பி போன்ற தீவிர இனவாதிகள் முழக்கமிடுகிறாhர்கள்.

அவர்கள் தொண்டைகிழியக்கத்தியபடி தெருக்களில் இறங்கிவிட்டார்கள். நோர்வேக்கு முன்னர் எதிர்ப்புக்காட்டிய அதேபாணியில் அவர்கள் தங்களின் நடவடிக்கையைத்தொடங்கிவிட்டார்கள்.

இதேவேளை போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் பரிசீPலிக்க தயார் என்று அரசாங்கத்தரப்பு தெரிவிக்கின்றது. அரசாங்கம் புலிகளுடன் பேசத்தயார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவுக்கும் பிரித்தானிய அரசு கடந்த வாரம் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக வெளியிட்ட செய்திகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளுமே காரணம்.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களுக்கென ஒரு சிறப்புப்பிரதிநிதியை பிரித்தானியப்பிரதமர் ரொனி பிளேயர் நியமித்துள்ளார.; இந்தப்பிரதிநிதி ஒரு மூத்த ராஜதந்திரி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ராஜதந்திரியின் பணிகள் எவை எனவும் அவை எப்போது எந்த அடிப்படையில் ஆரம்பமாகும் என்றும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அதாவது இதுதொடர்பான ஒரு நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாராகவில்லைப்போலுள்ளது.

முதலில் பிரித்தானிய அரசு தனது நாட்டிலுள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பிரதிநித்துவப்படும் ஒரு குழவை அமைத்து இலங்கைப்பிரச்சினை குறித்து விவாதித்துள்ளதாகவும் அதன்பின்னர் இந்தப்பிரச்சினை குறித்து செயலாற்றும் வகையில் சில உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் இந்த ஏற்பாடு இலங்கையில் தேக்கமடைந்திருக்கும் அமைதிப்பேச்சுக்களை மீளத்தொடங்குவதற்கான சூழலை உருவாக்கவும் இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவும் உதவும் என்று அது அறிவித்துள்ளது.

பிரித்தானியாவுக்கு உதவியாகவோ அனுசரணையாகவோ அமெரிக்காவும் மெல்ல இந்த விவகாரத்தில் மறைமுகமாக இயங்கத்தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் தெற்காசியப்பிராந்திய நாடுகளுக்கான வெளியுறவுச்செயலர் றிச்சர்ட் பௌச்சர் இந்த வாரம் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடனும் பிற இடங்களுக்குச்சென்று ஏனைய தரப்பினருடனும் பேசிச்சென்றுள்ளார்.

அரசாங்கம் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்குத்தயாராக வேண்டும் என றிச்சர்ட் பௌச்சர் மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இணைத்தலைமை நாடுகளின் கூட்டமும் நடந்திருக்கிறது. அதிலும் தற்போதைய போர்ச்சூழல் பற்றியும் அதைத்தணிப்பதற்கான அடுத்த கட்ட முயற்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இவைதான் வெளிப்படையாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அசைவியக்கம் ஒன்று தென்படுவதற்கான ஆதாரங்கள். இந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு சில விசயங்களைப்பார்க்கலாம்.


முதலில் எத்தகைய முயற்சிகளை யார் இலங்கையின் இனப்பிரச்சினையில் மேற்கொண்டாலும் அவர்கள் சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பினரிடமும் கலந்தாலோசித்தே ஒரு நிகழ்ச்சி நிரலைத்தயாரிக்க முடியும். அதாவது புலிகளோடும் அரசாங்கத்தோடும் கலந்துபேசியே இந்த நிகழ்ச்சி நிரலைத்தயாரிக்கமுடியும். அவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரான பின்னரே பேச்சுக்களுக்கோ அல்லது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கோ சாத்தியங்கள் ஏற்படும். ஆனால் அவ்வாறொரு நிகழ்ச்சி நிரலைத்தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தமாதிரியான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே விரைவாகவோ விறுவிறுப்பாகவோ இந்தத்தரப்பின் எந்த நடவடிக்கையும் நிகழலாம் என்று எதிர்பார்க்கக்கூடிய யதாhர்த்தம் காணப்படவில்லை.

அடுத்தது, ஏற்கனவே போர்நிறுத்த உடன்படிக்கையும் பேச்சுவார்த்தையும் முடக்கமடைந்து செயலற்று விட்டன.

போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை என்ற இந்த முயற்சிகள் முற்றிலும் மேற்குலகம் சம்மந்தப்பட்டவை. அதிலும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிற ஐரொப்பிய நாடுகளும் அதிகம் பின்னணியில் செயலாற்றியிருந்தன. ஆனால் அந்த முயற்சிகள் சூழ்ச்சிகரமாகக் கையாளப்பட்ட முடங்கியபின்னர் இப்போது மீண்டும் புதிதாக இத்தகைய முயறசி;கள் மேற்கொள்ளப்படுவதென்பது கூடிய அவதானத்துக்குரியவையாகவே இருக்கும். மீண்டும் ஒரு பின்னடைவை மேற்கு சந்திக்கத்தயாரா என்ற கேள்வி இங்கேயுண்;டு. அதுவும் வெளிப்படையாக பிரித்தானியா களத்தில் இறங்கியபின்னர் அத்தகைய முறிவுகளையும் பின்னடைவுகளையும் அது சந்திக்கத்தயாரா என்பது கவனிக்க வேண்டியது. கூடவே அமெரிக்காவும் துணையாக இருக்கும் வேளையில்.

எனவே நிகழ்ச்சி நிரலைத்தயார்க்க முன்பு இந்தப்பிரச்சினையில் தமது பாத்திரம் என்ன என்று இந்தத்தரப்புகள் தீவிரமாக யோசித்;த பின்பே களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கலாம். அதற்குமுன் இலங்கையின் இனப்பிரச்சினையில் திடீர்க்கரிசனை வருவதற்கான இந்தத்தரப்புகளின்; மெய்யான நோக்கம் என்ன என்றும் நாம் பார்க்கவேண்டும்.

இந்;தத்தரப்பிருக்கு இந்த இனப்பிரச்சினையைத்தீர்க்கவேண்டும் என்ற மெய்யான நோக்கமும் அக்கறையும் இருந்திருந்தால் அவை ஏற்கனவே போர்நிறுத்த உடன்படிக்கையை இப்படி கோமா நிலைக்குப்போக விட்டிருக்க முடியாது. அத்துடன் பேச்சுவார்த்தையும் இடையில் முறிவடைந்திருக்கச் சந்தர்ப்பம் அளித்திருக்கமாட்டா. ஆனால் அவை அந்த நிலைமையைத்தெரிந்துகொண்டே அத்தகைய சூழலுக்கு அனுமதித்திருந்தன. அல்லது அத்தகைய பாரிய அழிவுச்சூழலொன்று உருவாகுவதற்கு அவை துணைநின்றுள்ளன.

அதாவது இந்தத்தரப்பினர் கொஞ்சம் முதலில் நல்ல நோக்கத்தோடு இயங்கியிருந்தால் போர்நிறுத்த உடன்படிக்கை சிதைவடைந்த பின்னர் கொல்லப்பட்ட இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களைக்காப்பாற்றியிருக்;க முடியும்.

மூதூரிலும் வாகரையிலும் பளையிலும் மட்டக்களப்பு படுவான்கரையிலும் பூநகரி, வடடமராட்சி கிழக்கு ஆகிய இடங்களிலும் இருந்து பல்லாயிரம் சனங்கள் குரூரமாக இடம்பெயர்க்கப்பட்டதைத்தவிர்த்திருக்கலாம். வீணான சொத்திழப்புகளையும் கால விரையத்தையும் கூட விலக்கியிருக்கலாம். இப்படி எவ்வளவோ செய்ய வேண்டிய முக்கியமான நல்ல காரியங்களைச்செய்து பேச்சுவார்த்தையை முன்னோக்கி நகர்த்தியிருக்கலாம். போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தியிருக்கலாம்.


அவ்வாறு காரியமாற்றுவதற்குரிய ஆளுமையும் பொறுப்பும் இந்தத்தரப்பினருக்கிருந்தது. ஆனால் அவர்கள் அப்போது அதைச் செய்யவில்லை. இதுதொடரபாக விடுதலைப்புலிகள் பல தடவை நேரடியாகவும் கடிதமூலமாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்து வந்தனர்.

சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தையை திசை திருப்புகிறது, அதை முறித்துக்கொள்ளவே முயல்கிறது, பேச்சு மேசையில் நடைமுறைறப்படுத்துவதற்கு உடன்பட்ட விசயங்களை செய்யமறுத்து சூழலைக்கெடுக்கிறது என்றெல்லாம் புலிகள் பல தடவைகளில் வலியுறுத்தியிருந்தனர். விடுதலைப்புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அப்போது நோர்வேத்தரப்பினரிடமும் போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழவினரிடமும் அக்காலப்பகுதியில் தன்னைச்சந்தித்த வெளிநாட்டுத்தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடமும் இதை நன்றாக விளக்கியிருந்தார். தவிர ஊடகங்களின் வழியாக பகிரங்கமாகவும் அவர் இந்த அவசியத்தையும் அரசாங்கத்தின் சூழ்ச்சிகளையும் சறுக்கல்களையும் அத்துமீறல்களையும் தெளிவாக அறிவித்திருந்தார்.

ஆனால் அப்போது அது குறித்து இந்தத்தரப்பினர் எத்தகைய வலுவான தீர்மானத்தையும் எடுத்திருக்கவில்லை. எடுக்கத்தயாராகவும் இருக்கவில்லை. பதிலாக இன்னும் புலிகளைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளிலேயே ஈடுபட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடுகளும் இணைத்தலைமை நாடுகளின் பொருட்படுத்தாத்தன்மையும் பாரதூரமான விளைவுகளுக்கே இட்டுச்செல்லும் எனப்புலிகள் எச்சரிக்கை செய்ததையும் இவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. குறிப்பாக புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தால் அது சிறிலங்கா அரசுக்கு வாய்ப்பாக அமைந்து சமாதான முயற்சிகள் பாதிப்படையும் என்று புலிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன் சிறிலங்கா அரசின் இராணுவ முனைப்பு அதிகரித்துவிடும் என்பதையும் அவர்கள் தெளிவாக்கியிருந்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அதையெல்லாம் யாரும் கவனத்திலெடுக்கவில்லை.

இதனால் இந்த அவகாசத்தையும் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திச் சிறிலங்கா அரசு தமிழ்மக்களின்மீது போரைத் தொடுத்தது. பேரழிவுகளை ஏற்படுத்த்pயது.

தொடக்கத்தில் விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது என சிறிலங்கா அரசு கூறியது. பின்னர் அது முழமையாக பெரும் பிரதேசங்களின் மீது பெரும் படையெடுப்புகளை மேற்கொண்டது. வாகரை, படுவான்கரை மீதான படையெடுப்புகள் இனங்காணப்பட்ட இலக்குகளா.

இப்போது மீண்டும் இலங்கைத்தீவு போருக்குள் சிக்கி விட்டது. இனவெறி தலைவிரித்தாடத்தொடங்கிவிட்டது.

இப்படி எதிர்மறையான விளைவுகள் இலங்கைததீவில் பலமடைந்திருக்கிற நிலையில்தான் மீண்டும் சர்வதேச சமூகத்தின் தலையீடு அல்லது அக்கறை இப்போது ஏற்பட்டுள்ளது.

இப்பொழுது முண்டியடித்துக்கொண்டு பரபரப்பாக கடைவிரிக்க முனையும் சர்வதேச சமூகம் ஏன் மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகள் ஏற்படுகையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது.

வாகரையில் ஆறு மாதங்களுக்கு மேலாக சனங்கள் உப்புக்கும் வழியில்லாமல் கிடந்தார்கள். அப்போது இந்தப்புண்ணியவான்கள் எங்கே போனார்கள் என்று அங்கிருந்து படாத பாடெல்லாம்பட்டு, தன்னுடைய இரண்டு பிள்ளைகளை இழந்த பின்னர், இடம்பெயர்ந்து இப்போது மட்டக்களப்பு நகரில் அகதியாக இருக்கும் முதிய பெண்ணொருத்தி கேட்கிறாள். அந்தக் கேள்விக்கு யார் என்ன பதிலைக்கொடுக்கமுடியும்.

அதேபோல படுவான்கரையில் படையெடுப்பு நடந்தபோதும் இந்தக்கனவான்கள் தமிழ்மக்களின் நிலைகுறித்து எந்தக்கவனத்தையுதம் கொள்ளவில்லை.

பதிலாக அங்கிருந்து மக்;கள் இடம்பெயர வைக்கப்பட்டபிறகு அரசாங்கத்துக்கு எப்படி உதவலாம் என்று ஆராய்வதற்காக இரகசியமாக இவர்கள் மட்டக்களப்புக்குப்போயிருந்தனர்.

அப்போது இவர்கள் புலிகளின் எதிர்பாராத ஒரு தாக்குலில்; சிக்கி உயிராபத்தையும் சந்தித்திருந்தனர்.

யாழ்ப்பணத்தில் கடந்த ஓராண்டுக்குள் ஏறக்குறைய ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமற்போயுமுள்ளனர். அப்போது இந்தச்சர்வதேசிகளுக்கு எதுவும் தொன்ற வில்லை.

ஏ9 பாதை மூப்பட்டு ஆறு லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுகுறித்துக்கூட இந்தத்தரப்பினருக்கு எந்த அபிப்பிராயங்களும் இருந்ததாகத்தெரியவில்லை.

இப்போது அவசரஅவசரமாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிந்திக்கவும் அதற்காகப்பாடுபடவும் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு இங்கே குறிப்பிடுவதை யாரும் ஜே.வி.பி போன்ற அமைப்புகளின் எதிர்ப்பு நிலைப்பட்டுடன் இணைத்துப்பார்க்கக்கூடாது. அது வேறு. இது வேறு.

சிங்களவர்களுக்கு வெளிநாட்டு நிதி தேவை. வெளிநாட்டு ஆயதங்கள் தேவை. புலிகளுக்கெதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிரான போரைச்செய்ய சர்வதேசத்தின் ஆதரவு தேவை. ஆனால் இனப்பிரச்சினை குறித்தோ, தமிழர்களின் உரிமைகள் பற்றியோ அல்லது அரசின் மனித உரிமைகள் மீறல்களைக்குறித்தோ யாரும் எதுவும் சொல்லக்கூடாது.

ஆக தமிழர்களைக்கொல்வதற்கு ஆதரவு தேவை. மற்றும்படி எதுவும் தேவையில்லை. அது யாராயிருந்தாலென்ன, எதுவாக இருந்தாலென்ன.

அப்படியான அரசியல் ராஜதந்திரக்கொள்கையில் சிறிலங்கா கடந்;த ஐம்பதாண்டு காலத்திலும் சர்வதேச அரங்கில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதுபற்றி தனியாகவே விரிவாக பார்கக் வேண்டும். அதை இன்னொரு சந்தர்ப்பததில் பார்ப்போம்.

ஆக தமிழர்கள் பாதிக்கப்படும்போது பதறாத சர்வதேச சமூகம் இப்போது அந்தரப்படுவதன் நோக்க மென்ன.

விடுதலைப்புலிகளின் வான்புலிகளுடைய தாக்குதல் கொழும்பை ஆட்டம் காணவைத்திருக்கிறது. போர்வலுச்சமநிலையைக்குலைத்து தான் பலம் பெற்ற தரப்பாக காட்டிவந்த அரசாங்கம் எதிர்பாராமல் இப்போது பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களைக் கைப்பற்றியதன் மூலம் இராணுவ மேலாதிக்கத்தைப் பெற்றுவிட்டதாகவே அரசாங்கம் கருதியது. இவ்வாறே சர்வதேச சமூகமும் கருதியிருந்தது. ஆனால் புலிகள் இதனை திடீரென மாற்றி விட்டனர். அதுவும் அதிர்ச்சிகரமாக மாற்றிவிட்டனர்.

இந்த மாற்றததின் விளைவுகள் பாரதூரமானவை. போர்வலுச்சமநிலையை இன்னொரு புதிய விதத்தில் இந்தத்தாக்குதல்கள் உருவாக்கியுள்ளன. அதாவது புலிகள் தமது பிடியிலிருந்த நிலப்பகுதியை இழந்திருந்தார்கள். பதிலாக சிறிலங்காவின் வான்வெளி உத்தரவாதத்தை கைப்பற்றியிருக்கிறார்கள்.

சிறி லங்கா அரசு புலிகளிடமிருந்த சாம்பற்பிரதேசத்தைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் பொன்னொளிரும் வான்பரப்பை புலிகளிடம் இழந்து விட்டது.

ஒப்பீட்டளவில் புலிகள் இழந்தபிரதேசத்தின் பெறுமதியை விடவும் அரசாங்கம் இழந்த பிரதேசத்தின் பெறுமதியே தீர்மானிக்கும் வலு நிலையில் அதிகமானது.

புலிகள் தாம் இழந்த பிரதேசத்தையிட்டு அதிகம் பாதிப்பை சந்திக்க மாட்டார்கள். வாகரையைத்தவிர. ஆனால் அரசாங்கம் இழந்துள்ள வான்பரப்பு அதன் உயிர் நரம்புகளைப் பாதிக்குமளவுக்கு சக்திவாய்ந்தது. அது கொழும்பு இயங்கு தளத்தின் நரம்புகளில் வெடிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் சிறிலங்காவில் விரிக்கப்பட்டிருக்கும் பல்தேசிய வணிக நடவடிக்கைகள் முடக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொழும்பினூடான விமானப்போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படும்போதும் கொழும்பில் பாதுகாப்;பில்லை என்ற நிலை உருவாகும்போதும் அதனால் ஏற்படும் நெருக்கடிகள் அதிகமானவை. இதில் ஆட்;டுக்கும் நட்டம். குட்டிக்கும் நட்டம் என்றதே யதார்த்தம்.

அடுத்தது, சிறிலங்கா அரசாங்கம் படைத்துறையிலும் போர்வலுச்சம நிலையிலும் சந்தித்துள்ள பெரும் நெருக்கடி. அதாவது கொழும்பின் அரசியலும் பொருளாதாரமணடலமும் படைவலுவும் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. எனவே இவற்றை மேலும் சரிய விடாமல் பாதுகாக்கவே இப்போது இந்தச்சர்வதேச சமூகம் ஓடோடி வருகிறது. கொழும்பைப்பாதுகாக்கவே சமாதானம் என்ற இந்த வியூகம் வகுக்கப்படுகிறது. இதில் தமிழர் மகிழக்கூடிய அளவுக்கோ நம்பிக்கைகொள்ளக்கூடிய விதமாகவோ எதுவும் தோன்றவில்லை.

சரி, ஏன் இந்தத்தரப்புக்கு கொழும்பு அவசியம் என்று பார்த்தால் ஒன்று அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள். அடுத்தது தமது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் இந்தப்பிராந்தியத்தில் வேறு நடவடிக்கைகள் துலக்கமாக மேற்கிளம்பக்கூடாதென்ற கவனம். மற்றது கொழும்பு ஆட்டம் காணும்போது அதைத்தாம் பாதுகாக்கத்தவறினால் அது சீனாவுடனோ பாகிpஸ்தானுடனோ சரிந்துவிடும் என்று இந்தியாவும் மேற்குலகமும் அதிகமும் நம்புகின்றன.

தமது நிகழ்ச்சி நிரலுக்கு இடைஞ்சலாக வேறு எந்த ஓட்டங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்ற மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் இணைந்த நடவடிகடகைகளே இந்தப்புதிய வியூகமாக இருக்கிறது.

ஆக இந்த நிகழ்ச்சி நிரலில் தமிழர்களுக்கு ஒரு சிறு ஆறுதல் மட்;டும் உண்டு. தமிழர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை சர்வதேசம் அறியக்கூடிய ஒரு ஏற்பாடும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது என்பதற்கப்பால் வேறெதுவும் இல்லை.

தமிழர்கள் தாம் தமது வியூகத்தில் வெல்லும்வரை பிறர் வந்தாலும் ஆபத்து. வராது விட்டாலும் ஆபத்தே.

அபாயக்கொடிகள் அசைகின்றன என்று யாரோ சொன்னதுதான் இப்போது ஞாபத்துக்கு வருகிறது.

குளத்தைக்கலக்கிப் பருந்துக்குகொடுத்த கதை என்று சொல்வாhர்களே அதே மாதிரித்தான் இலங்கைத்தீவை கலக்கிச் சீரழித்து பிறருக்குக்கொடுத்திருக்;கிறார்கள் சிங்;களத்தலைவர்கள்.

அவர்களுக்குத்தெரியவில்லை மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ குடும்பத்தலைவன் என்ற ரீதியிலும் கணவன் என்ற வகையிலும் தந்தை என்ற ஸ்தானத்திலும் தண்டனையையோ அதிகாரத்தையோ திணிக்கும் காலம் இப்போதில்லை என்ற உண்மை.



No comments: