Tuesday, May 22, 2007

மீள்குடியேறிகளின் கதை அல்லது எலும்புக்கூட்டின் மனைவி


ஆழ்கடலின் கீழிருந்து
குளிரில் நடுங்கியபடி வருகிறது நிலவு
யுத்தம் ஓய்ந்திருக்கும்
அல்லது
தணிந்திருக்கும் இந்த நாட்களில்
காயங்கள் ஆறி
குருதிக்கறை நீங்கி
தயக்கமும் அச்சமும் கலைய
நிலவு எழுந்து வருகிறது

காயங்களும் குருதிப்பெருக்கும்
பலியும் அடங்கி
கடலும் மெல்ல
நீலமாகி வருகிறதுது என்று சொல்கிறார்கள்
சாழ்வைப் பொத்திக் காத்திடலாம்
என்றோடியவள்
காயங்களோடு திரும்புகிறாள்.

இடம்பெயர்ந்தோர் அட்டை
காணாமற் போனோர் பதிவட்டை
எலும்புக்கூடொன்றின் துயருற்றும் புகைப்படம்
மரணச்சானறிதழ்
தந்தையை இழந்த பிள்ளைகளுக்கான அட்டைகள்
மீள்குடியேறக்கோரும் விண்ணப்பம்
நிகழ்காலத்தின் சருகடர்ந்த
பாழ் விழிகளோடு
மூன்று பிள்ளைகள்
இன்னும் இதயம் நிரம்பிய
துயரம் கோபம்
ஆற்றாமை எல்லாவற்றோடும்
ஒரு மீள் குடியேறியாக
இன்னும் அகதியாக.

யுத்தம் பற்றி அவளுக்கதிகம்
தெரிந்திருக்கவில்லை
ஆனால்
அவளின் மடியில் அது கிடந்தது
பலிகொள்ளும் சாபத்தோடு
ஒரு நீசக்குழந்தையாக

அவள் ஆறுவதற்கு மரங்களுமில்லை
குவிக்கப்பட்டிருந்த எலும்புக்கூடுகளில்
எது தன் கணவனுடையதென்று
காணமுடியாது தடுமாறினாள் ஒருநாள்
இன்றோ
இடித்தழித்து வெறுமையாக்கப் பட்டிருக்கும்
சூனிய வெளியில்
எது அவளுடைய வாழ்விசைந்த நிலமென்று
தெரியாதிருக்கிறாள்
இழந்த வாழ்வின் சிறுதுண்டேனும்
கை சேராதவென்றும்
எதிர்காலத்தின் முகம்
பீரங்கியின் குழல் வாயா
அல்லது
நிலவு அஞ்சாத கடல்வெளியா
என்றும்கூட.

No comments: