தமிழ் மக்களை அகதிகளாக்கும் தொடர் நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் படை நடவடிக்கை மூலம் மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்னான ஏழு மாதங்களில் மூன்று இலட்சத்து நாற்பதினாயிரம் பேர் உள்ளூர் மட்டத்தில் இவ்வாறு அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அகதிகளாக்கப்படும் மக்கள் தொடர்ச்சியாக அந்தரிப்பு நிலையிலேயே வாழவேண்டியிருப்பது இங்கே உன்னிப்பாகக் கவனிக்கவேண்டியது. இருபது வருடங்களுக்கும் மேலாக அகதிகளாக உள்ளூருக்குள்ளேயே இருக்கின்றவர்கள் இதற்கு உதாரணம். யாழ்ப்பாணம் - பலாலி, கட்டுவன், முல்லைத்தீவு - கொக்கிளாய் கொக்குத்தொடுவாய், நாயாறு, திருகோணமலை - தென்னமரவாடி, கருநாட்டுக்கேணி, தம்பலகாமம், திரியாய் போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் இப்படித்தான் 1980களின் நடுப்பகுதியில் விரட்டப்பட்டனர்.
1990களின் முற்பகுதியில் இது இன்னும் அதிகமாக இளவாலை, காங்கேசன்துறை, வளலாய், மயிலிட்டி, தெல்லிப்பழை, மாவிட்டபுரம் என்றாகியது. இதேமாதிரி ஆனையிறவு, தட்டுவான்கொட்டி, இயக்கச்சி, பளை முகமாலை எழுதுமட்டுவாள் இப்படி விரிகிறது. இதேபோன்று தமிழர் தாயகத்தின் எல்லாப் பகுதிகளிலும் உயர்பாதுகாப்பு வலயங்களும் படைமையங்களும் பிறந்துவிட்டன. படை ஆதிக்கத்துக்காக இங்கிருந்தெல்லாம் மக்கள் இடம்பெயர்ந்துதானாக வேண்டிவருவது ஒரு யதார்த்தம் ஆகிவிட்டது.
ஆகவே, சிறீலங்கா அரசாங்கத்துக்கு தனது இராணுவ நலனில்தான் கூடிய அக்கறை உள்ளதே தவிர, தமிழ் மக்கள் மீது சிறியளவிலான அக்கறை கூட இல்லை என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. காணி உறுதிகள் மட்டும் மக்களிடம் உண்டு. காணியும் வீடுகளும், சொத்துக்களும் அவற்றுக்கான உரித்துக்களும் படையினரின் பிடியில் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் 23,000ற்கு மேற்பட்ட குடும்பங்கள் உயர் பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட அரசாங்க அதிபர் செயலகம் தெரிவிக்கிறது. இத்தொகை இன்னும் கூடுதலானது என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் கூறுகின்றன. இப்போது இவ்வாறு தமிழர்களின் வேர்களைப்பிடுங்கி அவர்களைச் சிதைக்கும் நடவடிக்¬யில் இன்னும் புதிய உத்திகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுவருகின்றது.
முன்னாள் சனாதிபதிகள் ஒவவொருவரும் இவ்வாறு அகதி உருவாக்கத்தை செய்து வந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அடித்துவிரட்டப்பட்டார்கள். பின்னர் தமிழர்கள் தமிழர் தாயகத்தில் வைத்தே விரட்டப்படத் தொடங்கினார்கள். மட்டக்களப்பில் இப்பொழுது இரண்டு இலட்சம் பேர் அகதிகளாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்து அகதிகள்.
போர்நிறுத்தமும், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் உத்தியோக பூர்வமாக விலக்கப்படாதிருக்கும்போது அகதிகளாக்கப்பட்டவர்கள். விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் தெரிவித்திருக்கின்ற மூன்று இலட்சத்து நாற்பதினாயிரம் பேரும் இப்படி இந்தக் காலத்தில் அகதிகளாக்கப்பட்டவர்கள் தான்.
மட்டக்களப்பு நகர் பகுதி அகதிகளால் நிரம்பி வழிகிறது. இந்த அகதிகளை சிறீலங்கா அரசாங்கத்தின் 108 அமைச்சர்களில் ஒருவர் கூட போய்ப்பார்க்கவில்லை. இந்த அகதிகளைப்பற்றி அரசாங்கம் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் சிறீலங்காப் படைகளால் அகதிளாக்கப்பட்டவர்கள்.
தங்குவதற்கே இடமின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு உணவு மற்றும் மருத்துவம், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்வதற்கே பெரும் சிரமமாக இருக்கின்றது என்று ஐ.நாவின் உதவி அமைப்புக்கள் அறிவித்திருக்கின்றன. படை நடவடிக்கை தொடர்ந்தால் மேலும் அகதிகளின் தொகை அதிகரிக்கலாம் என்றும் அது மேலும் மேலும் மனித அவலத்தையே உருவாக்கும் என்றும் இந்த அமைப்புக்கள் எச்சரிக்கின்றன.
மரங்களின் கீழும், பாடசாலைகள, பொதுமண்டபங்கள், கோவில்கள், வீதிகளிலும் மக்கள் நிறைந்து கிடக்கின்றார்கள். எங்கும் மக்கள். எழுவான் கரையின் தெருக்கள் சனங்களாலேயே நிரம்பியுள்ளன. எங்கும் மனித நெருக்கடி. எங்கும் மனித அவலம். பெண்களும் குழந்தைகளும் முதியோர்களும் படுகின்ற சிரமங்களை சாதாரணமாக விளக்கிவிட முடியாது. அந்தளவுக்கு அவர்கள் சிரமப்படுகின்றார்கள்.
மட்டக்களப்பின் வரலாற்றில் அகதிகளின் பிரச்சினை அடிக்கடி ஏற்படுகின்றது. என்றாலும் இந்த முறை ஏற்பட்டது போல பாரதூரமாக ஏற்படவில்லை. முன்னர் பல தடவைகள் வெள்ளத்தாலும் சூறாவழியாலும் மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள்தான். சுனாமி கூட மட்டக்களப்பில் அகதிகளை உருவாக்கியது. ஆனால், அப்போதெல்லாம் இந்த மாதிரி படுவான்கரையில் சனங்களே இல்லாத நிலை இருக்கவில்லை.
எழுவான்கரைக்கும் - படுவான்கரைக்கும் இடையில் போய் வர முடியாத நிலை ஏற்படவில்லை. அப்படி அவர்கள் போய்வருவதற்க தடைகள் இருக்கவில்லை. இப்போதுபோல அவர்கள் சிறைப்பட்ட வாழ்க்கைக்குள் இருக்கவில்லை. உயிர் அச்சத்தில் தூக்கமும் நிம்மதியும் இல்லாமல் முகாம்களில் துன்பப்படவில்லை.
இப்போது படுவான்கரையில் மக்களே இல்லை. அங்கிருந்த மக்களை திட்டமிட்டு ஒரே நாளில் இடம்பெயர வைத்திருக்கிறது சிறீலங்கா அரசு. முன்னர் வாகரையிலும் சனங்களுக்கான தொடர்புகளைத் துண்டித்து அவர்களை தனிமைப்படுத்திவிட்டு தாக்குதலை தொடுத்து, உணவு, மருத்துவ உதவிகளை தடுத்து நெருக்கடிக்குள்ளாக்கி, வாழ முடியாத நிலைமைகளை உருவாக்கி அகதிகளாக்கியிருந்தது அரசாங்கம். அதன் பிறகு அந்தப் பிரதேசத்தை படை ஆக்கிரமித்தது இதேபோலவே படுவான்கரையிலும் நடவடிக்கைகளுக்கு தயாராகின்றது அரசாங்கம். முதற்கட்டமாக மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
மட்டக்களப்பின் வரலாற்று சிறப்புடைய பல பூர்வீக கிராமங்கள் முதல் தடவையாக மக்களை இழந்திருக்கின்றன. கொக்கட்டிச்சோலை சிவன் கோவிலுக்கென்றொரு சிறப்பு வரலாறுண்டு. சிங்களவர்களுக்கு மிகிந்தலையும், அநுராதபுரம் விகாரையையும், தலதாமாளிகையும் எப்படி முக்கியமோ அப்படி தமிழர்களுக்கு அவர்களின் ஆன்மாக்களோடு இணைந்திருக்கின்ற சில முக்கியமான தலங்களில் கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலும் ஒன்று. கொக்கட்டிச்சோலை சிவன்கோவிலுடன் படுவான்கரையில் 163 கோயில்கள் மூடப்பட்டுள்ளன. எல்லாமே நித்திய பூசைக்குரிய கோயில்கள். சிங்களவர்கள் தம்புள்ளையையும், தலதாமாளிகாவையும் விட்டுப்போகத் தயாரா? அதற்கு முடியாதென்றால் அவர்கள் எப்படி தமிழர்கள் மட்டும் வேறுமாதிரி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இது மட்டுமல்ல, படுவான்கரையில் 14290 ஏக்கர் நிலத்தில் செய்யப்படவிருந்த சிறுபோக நெற் செய்கைக்கு வழியில்லாமல் போய்விட்டது. மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் நெற்களஞ்சியங்களில் ஒன்று. முதல் வரிசை விளைச்சலுக்குரிய ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் இருக்கின்றது. படுவான்கரைதான் இதற்கான விளைச்சல் நிலம். இங்கிருந்த மக்களில் 95 வீதமானவர்கள் விவசாயிகள்.
விவசாயிகளின் வாழ்க்கை எப்போதும் அந்த மண்ணுடன் இணைந்தது. அந்த மண்ணில் இருந்து அவர்களை விரட்டியதன் மூலம் முழுதாக சிதைத்துவிட முடியும். இதையே சிறீலங்கா அரசாங்கம் செய்திருக்கின்றது.
படுவான்கரையில் ஏழு கமநலசேவை நிலையங்கள் இருக்கின்றன. ஏழு பிரதேசங்களிலும் 4830 விவசாயிகள் 14290 எக்கர் நிலத்தில் சிறுபோக செய்கையில் ஈடுபட்டு வந்தனர். இவ்வளவு பேரும் இப்போது அகதி முகாம்களில் ஒன்றுக்கும் வழி இல்லதவர்களாகியுள்ளனர். அவர்களின் நிலப்பகுதி தரிசு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வீடுகளில் அபாரமாக நெல்மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தச் சனங்கள் அகதி முகாம்களில் ஒருவேளைச் சாப்பாட்டுக்கும் தொண்டு நிறுவனங்களிடம் கையேந்துகின்றனர்.
படுவான்கரையில் உள்ள கொடுவாமடு, தந்தாமலை, ஆயித்தியமலை, மண்டபத்தடி, கரடியனாறு வெள்ளாவெளி, பழுகாமம் பிரதேசங்களில் உள்ள வயல்களில் எறிகணைகளே விழுகின்றன
இதைத்தான் மக்களை விடுவிப்பதற்கான போர் என்று சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லுகின்றார். முன்னர் சமாதானத்துக்கான யுத்தம் என்ற பெயரில் சந்திரிகா எட்டு இலட்சத்துக்கும் மேலான தமிழர்களை அகதிகளாக்கினார். ஆனால், அவரால் போரை முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. புலிகளை தோற்கடிக்கவும் முடியவில்லை.
ஒரு நாட்டின் சனாதிபதி என்ற வகையில் அவர் பதவி வகித்த பத்தாண்டு காலத்திலும் சிறு நன்மையும் செய்திருக்கவில்லை. அவருடைய தந்தையாரின் காலத்தில் இருந்து இரத்தமும் நெருப்புமாக பெருகிக்கிடக்கும் வன்முறைக்கு தீர்வுகாணவும் இயலவில்லை. இப்போது மகிந்தவும் கூட இதனையே தொடருகின்றார். தமிழர்களுக்கான போரை தொடுத்து முழு இலங்கைத் தீவையும் இரத்தக்களரியாக்கி அழிவுக்கு இட்டுச்செல்கிறார். இங்கே கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உண்டு. தமிழர்களை ஒடுக்குவதில் சிங்களத்தரப்பு மூன்று முனைகளில் செயற்பட்டு வருகின்றது.
- ஒன்று வன்முறை. இதை அரசு படை நடவடிக்கைகளின் ஊடாக பல்வேறு உத்திகளில் செய்கின்றது.
- இரண்டாவது அரசியல் ரீதியானது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தமிழர்களுக்கு எதிரான விதத்தில் செயற்பட்டு வருகின்றது. புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் நேரடியாக தமிழர்கள் மீது போரைத் தொடுப்பதற்கும் தொடர்வதற்குமான ஆதரவை திரட்டுகின்றது.
- மூன்றாவது சட்டரீதியாக தமிழர்களை ஒடுக்குவது. வடக்கு கிழக்கு பிரிப்பு முதல் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதி முடக்கல் வரையில் இதனை நாம் நோக்கலாம்.
சிறீலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை சிங்களச் சமூகம் பல வழிகளிலும் ஒத்துழைக்கின்றது. சிங்கள அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்விப்பீடங்கள், மத அமைப்புக்கள், பொது நிறுவனங்கள் எனச் சகலதும் இதில் அடங்கும். இத்தகைய முழுத் தீவிரமான ஒடுக்குமுறை வலையமைப்பை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பிலும் பன்முகப்பட்ட வேலைத்திட்டங்கள் தேவை. மட்டக்களப்பிலும், வாகரையிலும் படையினர் நடத்திய மனித அவலத்துக்கு இதுவரையிலான தமிழ்ச் சமூகத்தின் எதிர்வினை என்பது கனத்த மௌனமாகவே காட்சியளிக்கின்றது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட அதிர்வளவிற்கு வேறு இடங்களில் எந்தச் சலனத்தையும் காணமுடியவில்லை.
யாழ்ப்பாணத்துக்கான பாதை மூடப்பட்டு ஏழு மாதங்கள் கடந்துவிட்டன. இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல். பேசாலையிலும் இலுப்பைக்கடவையிலும் படையினரின் தாக்குதலிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கு நிறைய வலுவான சாட்சிகள் உண்டு. மட்டக்களப்பின் அகதி நிலை குறித்தும் படை நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா அமைப்புக்கள் உட்பட பல பொது அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்கள் உண்டு.
காணாமற் போவோர், படுகொலை செய்யப்படுவோர் குறித்தும் இத்தகைய எதிர்வினைகள் அரசு மீது இருக்கின்றது. ஆனால், தமிழ் மக்கள் இவற்றை சர்வதேச மயப்படுத்துவதில் காட்டுகிற அக்கறை போதாதிருக்கின்றது. சிலவற்றுக்கு சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். இதற்கு சிறீலங்காவின் நீதி அமைப்பில் நியாயம் கிடைக்காது என்று யாரும் வாதிடலாம். பிரச்சினை, நியாயம் கிடைப்பதோ இது போன்ற நிலைமைகள் தொடர்ந்து உருவாகாதோ என்பதல்ல. அரசாங்கத்தையும் அதன் செயலையும் அம்பலப்படுத்துவதும் அதற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதுமே முக்கியமானது. எதிரி பலமுனைகளில் பல உத்திகளில் ஒடுக்குமுறைகளில் மேற்கொள்ளுகின்றான் என்றால், அதற்கெதிரான எதிர் கொள்ளலும் அதற்கேற்றமாதிரியே அமைய வேண்டும். இதற்கு தமிழர் தரப்பில் உள்ள சகலரும் முயற்சிக்க வேண்டும். படை நிலையிலும் அதற்கு அப்பாலான வலுச்சம நிலையிலும் விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளுடன் உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டு ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய உண்டு. இனியும் நாம் தாமதிக்ககூடாது.
No comments:
Post a Comment